டிரம்ப் பதவியேற்பு விழா: கேமராவில் உறைந்த வரலாற்றுத் தருணங்கள்
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். மகத்தான பாரம்பரியம் கொண்ட அந்த நிகழ்வின் சில குறிப்பிடத்தக்க சில புகைப்படங்களை இங்கே காணலாம்.
விழாவில் கடைசி நிமிட மாற்றம்
இந்த விழா வழக்கமாக அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்கு முன்னால் நடைபெறும். முக்கிய விருந்தினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இந்த விழாவை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
ஆனால், -13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் குளிர் காற்றுடன் உறைபனி குறித்த வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், இந்த விழா நாடாளுமன்ற கட்டடத்தின் ரோட்டுண்டா அரங்குக்குள் மாற்றப்பட்டது.
விழாவைக் காண தலைநகருக்குச் சென்ற டிரம்ப் ஆதரவாளர்கள் அரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் நேரடி ஒளிபரப்பை கண்டனர்.
தேவாலயத்தில் பிரார்த்தனை
பதவியேற்புக்கு முந்தைய இரவை ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து பென்சில்வேனியா அவென்யூவுக்கு சற்று குறுக்கே உள்ள பிளேயர் மாளிகையில் கழித்தார். இது புதிதாக பொறுப்பேற்கும் அதிபர்களுக்கான பாரம்பரியமாகும்.
டிரம்ப், அவரது மனைவி மெலனியா மற்றும் பொறுப்பேற்க இருக்கும் துணை அதிபர் ஜே டி வான்ஸ், அவரது மனைவி உஷா ஆகியோர் செயின்ட் ஜான்ஸ் எபிஸ்கோபல் தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
ரோட்டுண்டா விழா
நாடாளுமன்ற கட்டடத்தின் ரோட்டுண்டாவில் நடந்த விழாவில் முன்னாள் அதிபர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், டிரம்பின் குடும்பத்தினர் மற்றும் அவரது புதிய நிர்வாகத்திற்கு டிரம்பால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பங்கேற்றனர்.
டிரம்பின் தொடக்க உரையைத் தொடர்ந்து நாட்டுப்புற இசை நட்சத்திரம் கேரி அண்டர்வுட் “அமெரிக்கா தி பியூட்டிஃபுல்” என்ற பாடலை பாடினார்.
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் அர்ஜென்டினாவின் அதிபர் ஜேவியர் மைலி ஆகியோர் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டுத் தலைவர்களாவர்.
இந்த நிகழ்வில், ஜே டி வான்ஸ் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
விழா முடியும் முன்பு, பாதிரியார் லொரென்சோ செவெல் ஆசி வழங்கி துதிப்பாடல் பாடினார்.
டிரம்ப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
தனது தொடக்க உரையில், குடியேற்றத்தை சமாளிப்பது, பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை மீண்டும் எடுத்துக்கொள்வது மற்றும் செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க கொடியை நாட்டுவது உள்ளிட்ட தனது அதிபர் பதவிக்கான திட்டங்களை டிரம்ப் அறிவித்தார்.
பொதுமக்கள் எதிர்வினை
கேபிடல் ஒன் அரங்கில் இருந்த டிரம்ப் ஆதரவாளர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். மயாமி உள்ளிட்ட நகரங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள், பதவியேற்ற விழாவை ஒன்றாக கூடி காணும் நிகழ்வுகளில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
விழாவுக்குப் பிறகு, டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப், முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடனுடன் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினர்.
ஜோ மற்றும் ஜில் பிடன் ஹெலிகாப்டரில் வெளியேறிய போது உஷா வான்ஸ், ஜே.டி.வான்ஸ், டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் கையசைத்து வழியனுப்பி வைத்தனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு