இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் காரணமா? பைடன், இரான் கூறுவது என்ன?

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதால் காஸாவில் 470 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அமைதி திரும்பியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, முதல் கட்டமாக ஹமாஸ் 3 இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவித்ததற்கு ஈடாக, 90 பாலத்தீன கைதிகளை விடுவித்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியானதில் யாருடைய பங்கு அதிகம் என்ற போட்டி தற்போது ஏற்பட்டுள்ளது.

தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் நாளை அதிபராக பதவி ஏற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் ஆகியோரும் இந்த ஒப்பந்தத்திற்கு தாங்கள் தான் காரணம் என்று கூறி வருகின்றனர்.

ஆனால் ‘எதிர்ப்பு கூட்டணியின்’ (Axis of Resistance) சக்தி தான், இஸ்ரேலை அடிபணிய வைத்ததாக இரானும் ஹூதி கிளர்ச்சியாளர்களும் கூறுகின்றனர்.

இரான் ஆதரவில் செயல்படும் ஹமாஸ், லெபனானின் ஹெஸ்பொலா, ஏமனின் ஹூதி, இராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதமேந்திய ஷியா பிரிவினர் இதில் அடங்குவார்கள். இவர்கள் அனைவரும் இஸ்ரேலை எதிரியாக பார்க்கின்றனர்.

இந்த ஆயுதமேந்திய அமைப்புகளின் கூட்டணி இரானின் ஆயுதமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் செயல்பட்டு வருகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இரான் கூறுவது என்ன?

இரானின் அதிஉயர் தலைவரான ஆயதுல்லா அலி காமனெயி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “பாலத்தீனத்தின் எதிர்ப்பு, இஸ்ரேலை பின்னுக்கு தள்ளியுள்ளது என்பதற்கு, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தமே ஆதாரம். காஸா மக்களுக்கும், தொடர்ச்சியான பாலத்தீனர்களின் எதிர்ப்பும் தான் யூத ஆட்சியை பின்வாங்க நிர்ப்பந்தித்துள்ளது என்பதை உலகம் இன்று அறிந்துள்ளது. பல ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் சில யூத குழுக்களால் கொல்லப்பட்டனர். ஆனால் இறுதியில் அவர்கள் வீழ்த்தப்பட்டனர் என்று ஒரு நாள் வரலாற்று புத்தகத்தில் எழுதப்படும்.” என்று பதிவிட்டுள்ளார்.

இரானால் ஆதரிக்கப்படும் ஹமாஸ் அமைப்பு, கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அன்று தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியது. அதில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் இதுவரை 50 ஆயிரம் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்று ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இரானின் இஸ்லாமிய புரட்சிகர படையினர் ஹமாஸுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

வரலாற்று தாக்குதலை ஹமாஸ் நடத்தியதாகவும், அது மிகவும் அசாதாரணமானது என்றும் அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் பாலஸ்தீனர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும், இஸ்ரேலுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

எனினும், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை நம்ப முடியாது என எச்சரித்துள்ள அவர்கள், புதிய போருக்கு ஹமாஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இரான் வெளியுறவுத்துறை அமைச்சகமும் இந்த ஒப்பந்தத்தை பாலத்தீனர்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி என்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி

“நெதன்யாகு மீது நம்பிக்கை இல்லை”

இரான் ஆதரவு பெற்w ஏமனின் ஹூதி அமைப்பு இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் எவ்வாறு நடைமுறைபடுத்தப்படுகிறது என்பதை தன்னுடைய அமைப்பு கண்காணிக்கும் என்று, ஹூதி தலைவர் அப்துல் மாலிக் ஹல் ஹூதி வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் மீறப்பட்டால், ஹூதி அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேலிய படையினர் காஸா மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தும் வரை, ஏமன் கடற்கரை மற்றும் செங்கடலில் உள்ள இஸ்ரேலிய கப்பல்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படும் என்று ஹூதி அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே இதுபோன்ற தாக்குதல்களை அவர்கள் நடத்தியுள்ளனர்.

2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், இவர்கள் நடத்திய தாக்குதல்கள் காரணமாக இந்த மார்க்கத்தில் கடல்வழி வர்த்தகம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதல் காரணமாக, இந்த மார்க்கத்தில் வரவேண்டிய கப்பல்கள் அனைத்தும் சூயஸ் கால்வாய் வழியாக வருவதற்கு பதிலாக தென்னாப்பிரிக்காவை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொருட்களை மற்ற நாடுகளுக்கு அனுப்பும் நிறுவனங்களின் செலவினங்கள் அதிகரித்துள்ளன.

கடல்சார் வர்த்தகத்தில் ஏற்படும் விலை உயர்வு காரணமாக உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

ஏமனின் ஒரு பகுதி ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைநகர் சனாவும் இதில் அடங்கும். 2014-ஆம் ஆண்டு ஹூதி கிளர்ச்சியாளர்கள் சனாவை கைப்பற்றினார்கள்.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ஹூதி கிளர்ச்சியாளர்களின் பல தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் ஏமனைச் சுற்றி அமைந்திருக்கும் இரண்டு துறைமுகங்கள் மற்றும் ஒரு மின் நிலையத்தையும் தாக்கின.

கடந்த மாதம், பெஞ்சமின் நெதன்யாகு, ஹூதிகளுக்கு எதிராக தனது நாடு தாக்குதலை ஆரம்பித்துள்ளது என்று கூறினார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கடந்த மாதம், பெஞ்சமின் நெதன்யாகு, ஹூதிகளுக்கு எதிராக தனது நாடு தாக்குதலை ஆரம்பித்துள்ளது என்று கூறினார்.

டிரம்ப் அல்லது பைடன் – யார் காரணம்?

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், புதிய அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்பும் தங்களது பங்களிப்பால் தான் இந்த ஒப்பந்தம் இரு தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று வாதிடுகின்றனர்.

இந்த ஒப்பந்தத்தை வரவேற்ற பைடன், தொடர்ச்சியாக, அதே நேரத்தில் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் இது சாத்தியமானது என்று கூறியுள்ளார்.

புதன்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அன்று மிகவும் மன திருப்தியுடன் இருப்பதாக தெரிவித்தார். தன்னுடைய வாழ்நாளில் இதுவரை மேற்கொண்ட பணிகளிலே மிகவும் கடினமான பணி இது என்று அந்த ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் அவர் வெற்றி பெற்றதன் விளைவாகவே இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது என டிரம்ப் பேச்சு

டொனால்ட் டிரம்பும் கூட, இந்த வெற்றியில் தனக்கும் பங்கிருப்பதாக கூறிக் கொள்கிறார். 2024-ஆம் ஆண்டு மே மாதம், அவர் இந்த ஒப்பந்தத்திற்கான ஒரு திட்டத்தை வழங்கினார் என்றும், அதன் அடைப்படையில் தான் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது என்றும் கூறினார்.

‘ட்ரூத் சோசியல்’ என்ற அவரின் சொந்த சமூக ஊடகத் தளத்தில் இது குறித்து எழுதியுள்ள அவர், அமெரிக்க தேர்தலில் தான் வெற்றி பெற்றதன் விளைவாகவே இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது என்று கூறியுள்ளார்.

“என்னுடைய ஆட்சியின் கீழ் உலகில் அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,” என்ற செய்தியை உலகிற்கு சொல்லியுள்ளது இந்த ஒப்பந்தம் என்று அவர் பதிவிட்டார்.

“அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளின் பாதுகாப்புக்காக அமெரிக்கா தொடர்ந்து அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம் வெற்றி பெற நான் தான் காரணம் என்று பைடன் கூறிக் கொண்டிருந்த அந்த செய்தியாளர்கள் சந்திப்பின் இறுதியில் ஒரு பத்திரிகையாளர் இவ்வாறாக கேள்வி கேட்டார். “இந்த ஒப்பந்தம் இறுதியடையக் காரணம் உங்களின் முயற்சிகளா அல்லது டிரம்பின் முயற்சிகளா?”

இது விளையாட்டாய் கேட்கப்பட்ட கேள்வி தானே? என்று பதில் கேள்வி எழுப்பினார் பைடன்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.