‘ஆரியரே உயர்ந்தவர்’ என்ற ஹிட்லரின் கொள்கையை ஜெர்மனியிலேயே எதிர்த்து நின்ற இந்தியப் பெண்
- எழுதியவர், செரில்லன் மொல்லன்
- பதவி, பிபிசி நியூஸ்
ஐராவதி கார்வே தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் இருந்து தனித்து நிற்கும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்.
பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து, பெண்களுக்கு அதிக உரிமைகளோ சுதந்திரங்களோ இல்லாத காலத்தில், கார்வே யாராலும் நினைத்துப் பார்க்க முடியாததைச் செய்தார். வெளிநாட்டில் கல்வி பயின்றார், கல்லூரிப் பேராசிரியரான அவர், இந்தியாவின் முதல் பெண் மானுடவியலாளர் ஆனார்.
தன் மனதுக்குப் பிடித்த ஒருவரை மணந்தார், நீச்சல் உடையில் நீந்தினார், ஸ்கூட்டர் ஓட்டினார். மேலும், தனது முனைவர் பட்ட மேற்பார்வையாளரான யூஜின் ஃபிஷரின் இனவெறி கருதுகோளைக்கூட எதிர்க்கத் துணிந்தார்.
இந்திய கலாசாரம், நாகரிகம் மற்றும் அதன் சாதி அமைப்பு பற்றிய அவரது எழுத்துகள் புரட்சிகரமானவை. இந்திய கல்லூரிகளில் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இடம்பெற்றார். இருப்பினும் அவர் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபராகவே இருக்கிறார். அவரது வாழ்க்கையைப் பற்றிப் பலருக்கும் அதிகம் தெரிந்திருக்கவில்லை.
அவரது பேத்தி ஊர்மிளா தேஷ்பாண்டே, கல்வியாளர் தியாகோ பின்டோ பர்போசா ஆகியோர் எழுதிய, ‘இரு: தி ரிமார்க்கபிள் லைஃப் ஆஃப் ஐராவதி கார்வே (Iru: The Remarkable Life of Irawati Karve)’ என்ற புதிய புத்தகம், அவரது பிரமிக்க வைக்கும் வாழ்க்கையையும், அவருக்குப் பிறகு வந்த தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் பாதையை உருவாக்கும் அவரது முயற்சிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கடந்த 1905ஆம் ஆண்டு பர்மாவில் (இப்போது மியான்மர்) ஐராவதி பிறந்தார். ஐராவதி நதியின் நினைவாக அவருக்கு இந்த பெயர் சூட்டப்பட்டது. தனது பெற்றோரின் 6 குழந்தைகளில் ஒரே பெண்ணாகப் பிறந்த அவர், தனது குடும்பத்தினரால் நேசிக்கப்பட்டு, சௌகரியங்களுடன் வளர்க்கப்பட்டார்.
ஆனால், அந்த இளம் பெண்ணின் வாழ்க்கை எதிர்பாராத திருப்பங்களை கொண்டது. இதன் விளைவாக அவரை ஓர் ஆளுமையாக வடிவமைத்த அனுபவங்கள் அவருக்குக் கிடைத்தன. வலிமையான பெண்கள் மட்டுமின்றி, தடைகளை உடைத்து அவ்வாறு செயல்படும் போது உற்சாகப்படுத்திய, அவர் மீது பச்சாதாபம் கொண்ட முற்போக்கான ஆண்களையும் ஐராவதி சந்தித்துள்ளார்.
ஏழு வயதில், ஐராவதி புனேவில் இருந்த உண்டு, உறைவிடப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அந்தக் காலத்தில் பெரும்பாலான பெண்கள் திருமண பந்தத்திற்குள் தள்ளப்பட்ட அந்த வயதில், அவரது தந்தை அவருக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்கினார். புனேவில், அவர் ஆர்.பி.பரஞ்பை-ஐ சந்தித்தார். ஒரு முக்கிய கல்வியாளரான அவரது குடும்பம், அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஐராவதியை தத்தெடுத்து, தங்கள் சொந்த மகளாக வளர்த்தது.
ஐராவதி அந்தக் குடும்பத்தில், விமர்சனப்பூர்வ சிந்தனை மற்றும் நேர்மையான வாழ்க்கையைக் கொண்டாடும் ஒரு வாழ்க்கை முறையை அனுபவித்தார். இந்திய சமூகத்தின் மரபைக் கேள்விக்கு உள்ளாக்கும் வாழ்க்கை முறையாக அது இருந்தது. ஐராவதியின் அப்பா அல்லது இரண்டாவது தந்தை என்று அன்பாக அழைக்கப்பட்ட பரஞ்பை, தான் வாழ்ந்த காலத்தை விடவும் மிகுந்த முற்போக்கு சிந்தனை கொண்ட மனிதராக இருந்தார்.
கடல் கடந்து ஜெர்மனி சென்ற ஐராவதி
கல்லூரி முதல்வராகவும், பெண் கல்வியின் தீவிர ஆதரவாளராகவும் இருந்த பரஞ்பை, ஒரு நாத்திகராகவும் இருந்தார். அவர் மூலம், சமூக அறிவியலின் கண்கவர் உலகத்தையும் சமூகத்தில் அதன் தாக்கத்தையும் ஐராவதி கண்டறிந்தார்.
அவர் தனது தந்தையின் ஆட்சேபனைகளை மீறி, பெர்லினில் மானுடவியலில் முனைவர் பட்டம் பெற முடிவு செய்தார். அப்போது, பரஞ்பை, ஐராவதியின் கணவரும் அறிவியல் பேராசிரியருமான தின்கர் கார்வே ஆகியோரின் ஆதரவு அவருக்கு இருந்தது.
பல நாட்கள் கப்பல் பயணத்தில், 1927ஆம் ஆண்டு ஜெர்மன் நகரமான பெர்லினுக்கு சென்ற ஐராவதி, மானுடவியல் மற்றும் இன மேம்பாட்டியல் துறையின் புகழ் பெற்ற பேராசிரியரான ஃபிஷருடைய வழிகாட்டுதலின் கீழ் தனது பட்டப் படிப்பைத் தொடங்கினார்.
ஜெர்மனி அப்போது, இன்னும் முதல் உலகப் போரின் தாக்கத்தில் இருந்து மீளாமல் இருந்தது. ஹிட்லர் அப்போது அதிகாரத்திற்கு வந்திருக்கவில்லை. ஆனால், யூத எதிர்ப்பு அதன் கோரமான தலையை உயர்த்தத் தொடங்கியிருந்த நேரம் அது. ஒரு நாள் தனது கட்டடத்தில் ஒரு யூத மாணவர் கொல்லப்பட்டதைக் கண்டபோது, யூத எதிர்ப்பு மீதான வெறுப்புக்கு சாட்சியாக ஐராவதி இருந்தார்.
‘இரு: தி ரிமார்க்கபிள் லைஃப் ஆஃப் ஐராவதி கார்வே’ என்ற புத்தகத்தில், “தனது கட்டடத்திற்கு வெளியே நடைபாதையில் கிடந்த மனிதரின் உடல், கான்கிரீட் முழுவதும் கசிந்திருந்த ரத்தம் ஆகியவற்றைக் கண்ட போது ஐராவதிக்கு ஏற்பட்ட அச்சம், அதிர்ச்சி மற்றும் வெறுப்பை” நூலாசிரியர்கள் விவரிக்கின்றனர்.
நாஜிக்களின் யூத வெறுப்பு கோட்பாட்டுக்கு எதிர்ப்பு
ஓர் ஆய்வில் பணியாற்ற ஐராவதியை ஃபிஷர் நியமித்திருந்தார். அந்த நேரத்தில் அவர் தனது உணர்வுகளுடன் போராடினார். “வெள்ளை ஐரோப்பியர்கள் மிகவும் தர்க்க ரீதியானவர்கள் மற்றும் நியாயமானவர்கள் என்பதால் இன ரீதியாக வெள்ளையர் அல்லாத ஐரோப்பியர்களைவிட அவர்களே உயர்வானவர்கள்” என்பதை நிரூபிப்பதே அந்த ஆய்வின் நோக்கம். இதில் 149 மனித மண்டை ஓடுகளை உன்னிப்பாக ஆராய்ந்து அளவிட வேண்டிய பணியும் அடக்கம்.
வெள்ளை ஐரோப்பியர்கள் சமச்சீரற்ற மண்டை ஓடுகளைக் கொண்டிருந்தனர். அந்த அமைப்பு, அதிக நுண்ணறிவின் அடையாளமாகக் கருதப்படும் மூளையின் வலது நெற்றிக்கதுப்பு (Right Frontal Lobe) பெரிதாக அமைய ஏதுவாக இருப்பதாக ஃபிஷர் கருதினார். இருப்பினும், ஐராவதி தனது ஆராய்ச்சியில் இனத்திற்கும் மண்டை ஓட்டின் சமச்சீரற்ற தன்மைக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்பதைக் கண்டறிந்தார்.
“அவர் உறுதியாக ஃபிஷரின் கருதுகோளில் இருந்து முரண்பட்டார். ஆனால், அந்தக் கல்வி நிறுவனத்தின் கோட்பாடுகள் மற்றும் அந்தக் காலத்திய பிரதான கோட்பாடுகளிடம் இருந்துகூட அவர் முரண்பட்டார்,” என்று நூலாசிரியர்கள் எழுதியுள்ளனர்.
அவர் தனது பட்டப்படிப்பைப் பணயம் வைத்து, முனைவர் பட்ட மேற்பார்வையாளருக்கு கோபமூட்டக்கூடிய தனது கண்டுபிடிப்புகளை தைரியமாக முன்வைத்தார். ஃபிஷர் அந்த ஆய்வில் அவருக்கு மிகக் குறைந்த மதிப்பெண்களைக் கொடுத்தார்.
ஆனால், அவரது ஆய்வு பாகுபாடுகளை நியாயப்படுத்த மனித உடலின் வேறுபாடுகளைப் பயன்படுத்துவதை விமர்சன ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் நிராகரித்தது. (பின்னாட்களில், நாஜிக்கள் தங்கள் பிரசாரங்களுக்கு வலுவூட்ட ஃபிஷரின் இன மேன்மை பற்றிய கோட்பாடுகளைப் பயன்படுத்தினார்கள். ஃபிஷர் நாஜி கட்சியில் இணைந்தார்.)
பழங்குடிகளை தேடிப் பயணித்த நாட்கள்
ஐராவதி, தனது வாழ்நாள் முழுவதும், இந்தத் துணிச்சலான போக்கை, குறிப்பாக அவர் சந்தித்த பெண்கள் மீதான அளவற்ற பச்சாதாபத்துடன் இணைத்து வெளிப்படுத்தினார்.
ஒரு பெண் வீட்டை விட்டு வெகுதூரம் பயணிப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாத காலம் அது. ஆனால், ஐராவதி தனது நாட்டிற்குத் திரும்பிய பிறகு, சில நேரங்களில் தனது ஆண் சகாக்களுடனும், மற்ற நேரங்களில் தனது மாணவர்களுடனும், தனது குழந்தைகளுடனும், பல்வேறு பழங்குடி மக்களின் வாழ்க்கை குறித்து ஆய்வு செய்ய, இந்தியாவில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு களப் பயணங்களை மேற்கொண்டார்.
சுமார் 15,000 ஆண்டுகள் பழமையான எலும்புகளை மீட்டெடுக்கும் தொல்பொருள் ஆய்வுகளில் அவர் பங்கெடுத்து, கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்தார். இந்தக் கடினமான பயணங்கள், அவரைப் பல வாரங்கள் அல்லது மாதங்களுக்குக் காடுகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளில் ஆழமாகப் பயணிக்க வைத்தன. ‘இரு: தி ரிமார்க்கபிள் லைஃப் ஆஃப் ஐராவதி கார்வே’ புத்தகம், அவர் கொட்டகைகள், லாரி படுக்கைகளில் தூங்கியதையும், பெரும்பாலும் சிறிதளவு உணவுடன் நாட்களைக் கழித்ததையும் விவரிக்கிறது.
வாழ்க்கையின் அனைத்துத் தரப்பு மக்களுடனும் பழகும் போது, சமூக ரீதியிலான, தனிப்பட்ட ரீயிலான தப்பு எண்ணங்களையும் ஐராவதி துணிச்சலுடன் எதிர்கொண்டார்.
இந்து சமூகத்தில், சைவ உணவு உண்ணக்கூடிய சித்பவன் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஐராவதி, தான் ஆய்வு செய்ய முயன்ற பழங்குடியினத்தின் தலைவர் வழங்கிய சமைக்கப்படாத இறைச்சியை துணிச்சலுடன் சாப்பிட்டதை நூலின் ஆசிரியர்கள் விவரித்துள்ளனர். அவர் இதைத் தனது நட்பின் அடையாளமாகவும் அவர்கள் மீதான விசுவாசத்திற்கான சோதனையாகவும் உணர்ந்தார். ஆகவே, அதற்குத் திறந்த மனப்பான்மையுடனும் ஆர்வத்துடனும் தனது செயலின் மூலமாகப் பதிலளித்தார்.
அவரது ஆய்வுகள், மனித குலத்தின் மீது ஆழமான பச்சாதாபத்தை வளர்த்தன. அவை, இந்து மதம் உள்பட அனைத்து மதங்களிலும் அடிப்படைவாதத்தை விமர்சிக்க வழிவகுத்தது. இந்தியாவை தனது நாடாகக் கருதும் அனைவருக்குமே அது சொந்தமானது என்று அவர் கருதினார்.
நாஜிக்கள் யூதர்களுக்குச் செய்த கொடூரங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த ஐராவதி, திடீரென ஒரு தீவிர உணர்வைப் பெற்ற தருணத்தை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. அது மனித குலத்தின் மீதான அவரது பார்வையை ஆழமாக மாற்றியதாக நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“இந்தச் சிந்தனையில் இருந்து, ஐராவதி இந்து தத்துவத்தில் இருந்த ‘அனைத்துமே நீயாக இருக்கிறாய்’ என்ற மிகவும் கடினமான பாடத்தைக் கற்றுக்கொண்டதாக” ஆசிரியர்கள் எழுதியுள்ளார்கள்.
ஐராவதி 1970ஆம் ஆண்டு உயிரிழந்தார். ஆனால் அவருடைய பணிகள் மற்றும் அவரால் ஊக்கம் பெற்ற மக்களின் வாயிலாக, அவரது மரபு நீடித்து வாழ்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.