40 வருட இடைவேளை; ட்ரம்ப் – ரீகனின் பதவியேற்பின் பொதுவான ஒற்றுமை!

by wp_shnn

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் (Ronald Reagan) 1985 இல் வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக பதவியேற்றபோது, ​​உறைபனி வெப்பநிலையின் விளைவாக விழா வொஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் ரோட்டுண்டா அரங்கிற்கு மாற்றப்பட்டது.

இப்போது 40 ஆண்டுகளுக்குப் பின்னர், 2025.01.20 திங்கட்கிழமை டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவும் அதே வானிலை காரணமாக கேபிடல் ரோட்டுண்டா அரங்கிற்குள் மாற்றப்பட்டுள்ளது.

கேபிட்டல் கட்டிட வளாகத்தின் திறந்த வெளியில் முன்னதாக திட்டமிடப்பட்ட பதவியேற்பு நிகழ்வின் போது பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலையின் விளைவாக மக்கள் பாதிப்படைவதை பார்க்க விரும்பவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

வானிலை முன்னறிவிப்பாளர்கள் கனடாவில் இருந்து ஒரு கொடூரமான குளிர் அலை அமெரிக்காவை தாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.

இது மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு அமெரிக்காவில் உள்ள பகுதிகளை உறைய வைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ட்ரம்பின் பதவியேற்பு நாளான திங்கட்கிழமை (20), வொஷிங்டன் டி.சி.யில் வெப்பநிலை மைனஸ் 6 டிகிரி செல்சியஸாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சியின் தலைவரும் (ரொனால்ட் ரீகன்) முதல் பெண்மணியும் (நான்சி ரீகன்) வழக்கத்திற்கு மாறாக குளிர் காலநிலை முன்னறிவிப்பு காரணமாக தனது இரண்டாவது பதவியேற்பு விழாவை வேறு வழியில்லாமல் உள்ளக அரங்கிற்குள் நடத்த முடிவு செய்த பின்னர், 1985 ஜனவரி 18 அன்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் லாரி ஸ்பீக்ஸ் செய்தியாளர்களிடம் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

ரொனால்ட் ரீகனின் பதவிப் பிரமாணம் ஜனவரி 20, 1985 அன்று அமெரிக்க கேபிடல் ரோட்டுண்டாவில் நடைபெற்றது.

அன்றைய தினம் வெப்ப நிலை மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக பதவியேற்றபோது, ​​அது மைனஸ் 2 டிகிரியாகவும், 2021 இல் ‍ஜோ பைடன் பதவியேற்பின் போது 5.5 டிகிரி வெப்பமாகவும் இருந்தது.

திங்கட்கிழமை முன்னறிவிக்கப்பட்ட வெப்பநிலை 64 ஆண்டுகளுக்கு முன்பு வாஷிங்டனில் இருந்ததைப் போலவே உள்ளது.

1961 ஆம் ஆண்டு ஜோன் எஃப் கென்னடி மைனஸ் 5 டிகிரி வெப்பநிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார்.

1909 ஆம் ஆண்டில், வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட் தனது பதவியேற்பு விழாவை 10 அங்குல பனிப்பொழிவுடன் மேற்கொண்டு வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்