by wp_shnn

இது அநுரவின் பழி வாங்கும் செயல்-நாமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாடகையை செலுத்த வேண்டும் அல்லது தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளமையை, ஜனாதிபதியின் முக பாவனையை வைத்தே பழிவாங்கும் செயல் எனக் கூற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து அந்த வீட்டைப் பெற்றுக் கொண்டு அநுர அதை விற்க முடியும் என ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ குடியிருப்பு நிறைவேற்று ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களின் பாதுகாப்பிற்காக அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நீக்க அநுர விரும்பினால், எழுத்து மூலம் அந்த கோரிக்கையை முன்வைக்க முடியும். முன்னாள் ஜனாதிபதிகள் ஒவ்வொருவருக்கும் வசிப்பிடத்தை வழங்குவது ஒவ்வொரு நாடும் செய்யும் நடைமுறையாகும். இலங்கையில் மாத்திரம் இவ்வாறான நடைமுறைகள் இடம்பெறவில்லை. என்றார்.

“இந்த குடியிருப்பு அவர் வாழ்வதற்காக வழங்கப்படவில்லை, அவரது பாதுகாப்பிற்காக தான் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதால், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அரிசியின் விலை குறைந்து, தேங்காய் மற்றும் உப்பு பற்றாக்குறை இன்றி, மக்கள் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வார்கள் என்றால் நாங்களும் அதனால் மகிழ்ச்சியடைவோம், ”என்று நாமல் கூறினார்.

‘தூய்மையான இலங்கை’ வேலைத்திட்டம் பற்றி குறிப்பிடுகையில் “தற்போதைய அரசாங்கத்தின் இலக்கு பாராட்டத்தக்கது, ஆனால் ஜனாதிபதி திஸாநாயக்கவைத் தவிர வேறு எந்த அதிகாரிகளும் இந்த முயற்சியின் மதிப்பை உண்மையிலேயே புரிந்து கொள்ளவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும், “அரசு மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்