‘விவசாயிகளுக்காக சட்டப் போராட்டம் நடத்துவேன்’- பரந்தூரில் தவெக தலைவர், நடிகர் விஜய் பேசியது என்ன?
சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 900 நாட்களைக் கடந்திருக்கிறது.
நடிகர் விஜயின் ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ முதல் மாநாடு கடந்த வருடம், அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றபோது, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் இன்று (ஜனவரி 20) பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்துப் பேசியுள்ளார்.
விஜய் கட்சி தொடங்கியது முதல், அவர் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மட்டுமே மக்களை சந்திக்கிறார், களத்திற்கு வருவதில்லை போன்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று அவர் பரந்தூரில் மக்களை சந்தித்துள்ளது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
நடிகர் விஜய் பேசியது என்ன?
பரந்தூரில் மக்களிடையே பேசிய நடிகர் விஜய், “கிட்டத்தட்ட ஒரு 910 நாட்களுக்கு மேல், உங்களுடைய மண்ணுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். இந்தப் போராட்டம் குறித்து ராகுல் என்ற சிறுவன் பேசியதை நான் கேட்டேன். அந்த குழந்தையின் பேச்சு என் மனதை ஏதோ செய்துவிட்டது. உடனடியாக உங்கள் அனைவரையும் பார்க்க வேண்டும், உங்கள் அனைவருடனும் நான் தொடர்ந்து நிற்பேன் என்று சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.” என்று கூறினார்.
“நமது நாட்டுக்கு ரொம்ப முக்கியமானவர்கள், விவசாயிகள்தான்” என்று கூறிய அவர், அதனால் விவசாயிகளின் காலடி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டுத்தான், தன்னுடைய பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஒரு முடிவோடு இருந்ததாகவும், அதற்கு சரியான இடம் இதுதான் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய நடிகர் விஜய், “என்னுடைய கள அரசியல் பயணம், உங்களின் ஆசீர்வாதத்தோடு இங்கிருந்துதான் தொடங்குகிறது. தவெக-வின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை எல்லாம் எடுத்துக் கூறினேன். அதில் ஒன்றுதான் இயற்கை வளப்பாதுகாப்பு.” என்றார்
கடந்த வருடம் நடைபெற்ற தவெக மாநில மாநாட்டில் விவசாய நிலங்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம் குறித்து தான் பேசியதைக் குறிப்பிட்ட விஜய், “காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரபரப்பளவில் 13 நீர்நிலைகளை அழித்து சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று அப்போதே வலியுறுத்தினேன்.” என்று கூறினார்.
”இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும், விவசாயிகளைப் பாதிக்கும் இந்த திட்டத்துக்கு எதிராக, சட்டப்போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என்று கூறியிருந்தோம், அதை மீண்டும் உங்கள் முன்பாக மிகவும் உறுதியாக வலியுறுத்துகிறேன்” என்றும் அவர் கூறினார்.
‘நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை’
நேற்று (ஜனவரி 19) விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “ஒரு புதிய விமான நிலையத்தை உருவாக்குவது என்பது அந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.” என்று கூறியிருந்தார்.
இந்தியாவின் மற்ற பெரிய நகரகங்களான டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்களுடன் ஒப்பிடும் போது சென்னை விமான நிலையம் மிகச்சிறியதாக இருக்கிறது என்று கூறிய அவர், “சென்னையில் ஏற்கனவே குடியிருப்புகள் அதிகமாகிவிட்டதால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது. எதிர்காலத்தையும் மனதில் வைத்தே உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பொருளாதாரம், மாநிலத்தில் வளர்ச்சி என அனைத்து அந்த மாநிலங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை பொறுத்தே அமையும்.” என்று கூறியிருந்தார்.
வளர்ச்சி ஒருபுறம் என்றால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் முதல்வர் கவனமாக இருப்பதாகவும், பரந்தூர் பகுதியின் நீர்நிலைகளையும் எந்த அளவிற்கு சீர்செய்ய முடியும் என்பதை ஆராய உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பரிந்துரைகளையும் அரசு கவனத்தில்கொள்ளும் என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (ஜனவரி 20) பரந்தூரில் மக்களைச் சந்தித்த நடிகர் விஜய், “நான் வளர்ச்சிக்கு எதிரானவன் எல்லாம் கிடையாது. விமான நிலையமே வரக்கூடாது என்றெல்லாம் நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் வரக்கூடாது என்றுதான் கூறுகிறேன். இதை நான் சொல்லவில்லை என்றால், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று கூறிவிடுவார்கள்.” என்றார்.
‘மக்கள் விரோத அரசு’
“ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் சென்னை மாநகரம் எப்படி வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு அறிவியல் ஆய்வில், இப்படி ஒவ்வொரு வருடமும் சென்னையில் ஏற்படுகிற வெள்ளத்துக்கு காரணமே, இங்கு இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கிற சதுப்பு நிலங்களை, நீர்நிலைகளை அழித்ததுதான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.”
”அப்படி ஒரு சூழல் இருக்கும்போது, 90 விழுக்காடு விவசாய நிலங்கள், நீர்நிலைகளை அழித்து பரந்தூர் விமான நிலையத்தை கொண்டு வரவேண்டும் என்ற முடிவை எடுக்கும் எந்த அரசாக இருந்தாலும், அது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்க முடியும்” என விமர்சித்தார் விஜய்.
அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாகக் கூறிய விஜய், அதே நிலைப்பாட்டை பரந்தூர் பிரச்னையிலும் தமிழக அரசு ஏன் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்ததையும், காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்தை எதிர்த்ததையும் சுட்டிக்காட்டிய நடிகர் விஜய், “எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா?” என்று விமர்சித்தார்.
“விவசாய நிலங்கள் இல்லாத, பாதிப்புகள் குறைவாக இருக்கும் இடமாகப் பார்த்து விமான நிலையத்தை கொண்டு வாருங்கள். வளர்ச்சி தான் மக்களின் முன்னேற்றம். ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும். நானும், தவெக-வினரும், சட்டத்துக்குட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களுடன் உறுதியாக நிற்போம்” என்று பேசினார் நடிகர் விஜய்.
பரந்தூரில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் பேசியது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“விஜய் களத்திற்கு வந்திருப்பது நல்லது. இனி ‘வொர்க் ஃபரம் ஹோம்’ (Work from home) அரசியல் என கிண்டல் செய்ய முடியாது” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
“நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை, இந்த இடத்தில் விமான நிலையம் வரக்கூடாது என்று தான் சொல்கிறேன்” என விஜய் கூறியுள்ளதைக் சுட்டிக்காட்டி, “இப்போது பனையூரில் தவெக கட்சி அலுவலகம் இருக்கும் இடம், முன்பு என்னவாக இருந்திருக்கும்?” என்று ஒருவர் விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? என திமுகவை விஜய் விமர்சித்துள்ளதை குறிப்பிட்டு” சரியான அரசியல் நகர்வு” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
“சினிமாவில் பேசுவது போல பேசுகிறார், கள நிலவரம் புரியவில்லை” என்று ஒருவர் விமர்சித்துள்ளார்,
“மக்கள் போராட்டம் தொடங்கி, 1000 நாட்களை நெருங்க இருக்கும் நிலையில், நடிகர் விஜய் தாமதமாக வந்திருப்பது ஏன்?” என ஒருவர் விமர்சித்துள்ளார்.
பரந்தூர் மக்கள் போராட்டத்தின் பின்னணி என்ன?
சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பரந்தூர். இந்த பரந்தூர் கிராமம் உள்பட அருகில் உள்ள 13 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி புதிய விமான நிலையத்தை அமைக்க அரசு உத்தேசித்திருக்கிறது.
சென்னை விமான நிலையத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியாது என்பதால் அதற்கு இணையாக ஒரு விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்பது நீண்ட காலமாகவே, கிட்டத்தட்ட 80களில் இருந்தே உத்தேசிக்கப்பட்டு வந்தது.
இதற்காக போரூர், ஸ்ரீபெரும்புதூர் என பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டுவந்தன. இறுதியாக தற்போது பரந்தூர் பகுதி தேர்வுசெய்யப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி இந்தத் திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது. பரந்தூரில் அமையவிருக்கும் இந்த புதிய விமான நிலையத்தில் இரண்டு ஓடுதளங்கள், விமான நிலைய முனையங்கள், இணைப்புப் பாதைகள், விமானங்கள் நிறுத்துமிடம், சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் ஆகியவை இடம்பெறும் எனக் கூறப்பட்டது.
இந்தத் திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரந்தூர், வளத்தூர், பொடவூர், நல்வாய், தண்டலம், மடப்புரம், தொடரூர், சிங்கிலிபாடி, குணகரம்பாக்கம், எடையார்பாக்கம், அக்கமாபுரம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இருக்கும் நிலங்களில் 4791.29 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதில் 3,466 ஏக்கர் நிலம் நன்செய் விவசாய நிலம். 1,317 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் ஏரி, குளம், குட்டை, கால்வாய்கள் போன்றவை அமைந்துள்ளன.
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே இப்பகுதி மக்கள் இதனைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். இந்தத் திட்டத்திற்காக முழுமையாக கையகப்படுத்தப்படவிருக்கும் ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இதனை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு