ரயில் பயணத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக பயணித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று திங்கட்கிழமை (20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி அலுவலக ரயிலில் மக்களோடு மக்களாக பயணித்துள்ளார்.
இந்த பயணத்தின்போது, பயணிகள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து பிமல் ரத்நாயக்க பயணிகளுடன் உரையாடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இவர் ஊடகங்களுக்கு அறிவிக்காது, ரயில் பயணத்தின்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்காணிக்க நேரடி கள ஆய்வை முன்னெடுத்துள்ளார்.
இதன்போது, அடிக்கடி இடம்பெறும் ரயில் தாமதங்கள், மின் விசிறிகள் பழுது, ரயில்களில் ஏறுவதில் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சுகாதாரக்கேடு, பாதுகாப்பற்ற பாழடைந்த ரயிலை தொடர்ந்து பயன்படுத்தல் போன்ற பிரச்சினைகளை பொதுமக்களிடம் இருந்து கேட்டறிந்துள்ளார்.