by guasw2

‘சக்திதாசன் – கடவுளை கண்ட கவிஞன்’ – மகாகவி பாரதியாரின் ஆன்மிக பரிமாணத்தை காட்டும் ஆவண படம் வெளியீடு மகாகவி பாரதியாரின் ஆன்மிக பரிமாணத்தை காட்டும் ‘சக்​தி​தாசன் – கடவுளை கண்ட கவிஞன்’ ஆவணப் படத்தை சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சத்ய ஞானானந்தர் வெளியிட்டார். கடின உழைப்பில் உருவாகியுள்ள இப்படம் அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்று வாழ்த்தினார்.

‘சக்​தி​தாசன் – கடவுளை கண்ட கவிஞன்’ என்ற ஆவணப் படத்தின் வெளியீட்டு விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கடந்த 18-ம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இதில், படத்தின் 10 நிமிட முன்னோட்ட காட்சி திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆவணப் படத்தை சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சத்ய ஞானானந்தர் வெளியிட்டார். அவர் பேசும்போது, ‘‘கடின உழைப்பு செலுத்தப்பட்டுள்ள இப்படத்தை முதலில் நம் குடும்பத்தினர் முதல் அனைத்து தரப்பினரையும் சென்றடைய செய்ய வேண்டும்’’ என்றார்.

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் அகில உலக தலைவர் கவுதமானந்த மகாராஜ் அனுப்பிய வாழ்த்து செய்தியில், ‘பாரதியார் குறித்த தகவல்களை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உன்னத நோக்கில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தை உருவாக்கிய சவுந்தர்யா சுகுமார் மற்றும் குழுவினருக்கு சுவாமி விவேகானந்தர், அன்னை சாரதா தேவியின் அருளாசி கிடைக்க பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, நிகழ்வில் பங்கேற்ற விருந்தினர்கள், படக் குழுவினர் பேசியதாவது:

கவிஞர் ரவி சுப்ரமணியம்: பாரதி குறித்து எவ்வளவு தெரிந்து கொண்டாலும், ஏதோ சில விஷயங்கள் தெரியாமலே இருக்கிறது. இவற்றை இப்படம் பூர்த்தி செய்கிறது.

‘சேவாலயா’ நிறுவனர் வி.முரளிதரன்: அன்பு எனும் ஒரு சிகிச்சையால் மட்டும் அனைவரையும் திருத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் பாரதியார்.

படத்தின் தயாரிப்பாளர் சவுந்தர்யா சுகுமார்: பாரதியார் குறித்து அறிந்து கொள்ள தமிழ் தெரிய வேண்டும் என கட்டாயம் இல்லை. அவரது தத்துவ பாடல்கள் உள்ளிட்ட அனைத்தையும் என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. அவரோடு உணர்வு பூர்வமான பிணைப்பை என்னால் உணர முடிந்தது.

இயக்குநர் உஷா ராஜேஸ்வரி: எங்களது கட்டுப்பாட்டில் இல்லாமலேயே அனைத்தும் நல்ல முறையில் நடந்தேறின. ஒரு தெய்வீக கரம் எங்களை வழிநடத்தி அழைத்து சென்றதை உணர முடிந்தது.

இசையமைப்பாளர் ராஜ்குமார் பாரதி: எந்தவித நிபந்தனையும் இல்லாமல் படத்துக்காக பாடல் பாடி, இசைக்கருவி வாசித்தவர்களுக்கு நன்றி.

நிரஞ்சன் பாரதி: பாரதியின் நண்பர் அரவிந்தர் வலிந்து வந்து திரைக்கதையில் இணைந்தது குறித்து படத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம். இணையத்தில் வாழ்வை தொலைக்கும் இளைஞர்களுக்கான தீர்வு பாரதியின் ஆன்மிகம்.

வழக்கறிஞர் சிவக்குமார்: வாழ்க்கையை வட்டமாக நினைத்து பயனுடன் வாழ பழக வேண்டும் என்பதை தனது ஒவ்வொரு பாட்டிலும் பாரதி தெளிவுபடுத்தியுள்ளார்.

நடிகர் கார்த்திக் கோபிநாத்: மகாகவியின் ஆன்மிக பரிமாணம் ஓர் ஆவணப் படமாக உருவாகியுள்ளது. இதை அனைவரிடமும் கொண்டு சேர்க்க முயற்சி செய்வோம். இவ்வாறு அவர்கள் பேசினர்.

‘சக்​தி​தாசன் – கடவுளை கண்ட கவிஞன்’ ஆவணப் படத்தை https://www.youtube.com/watch?v=icSRo0sXMZM என்ற இணைப்பு மூலம் யூ-டியூபில் ​காணலாம்.

தொடர்புடைய செய்திகள்