விவசாயிகள் திருப்தியடையும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும் விவசாயிகள் திருப்தியடையும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும். விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் ஒரு கிலோகிராம் நெல்லுக்கு உத்தரவாத விலைக்கு மேலதிகமாக 2 ரூபாய் வழங்கப்படும் என விவசாயத்துறை மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
எம்பிலிபிட்டிய பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நெற்களஞ்சியசாலை புனரமைப்பு பணிகளை ஞாயிற்றுக்கிழமை (19) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நெல்லுக்கு நியாயமான வகையில் உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். அரிசி மாபியாக்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை தேர்தல் காலத்தில் குறிப்பிட்டோம்.
இப்போதும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளோம். அரிசி தட்டுப்பாடு பற்றி பேசுபவர்கள், அரசாங்கத்தை குறை கூறுபவர்கள் உண்மையை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் 1000 மெற்றிக் தொன்னுக்கும் குறைவான அளவில் தான் நெல்லை கொள்வனவு செய்துள்ளது.
பெருமளவிலான தொகையை பிரதான அரிசி உற்பத்தியாளர்களே கொள்வனவு செய்துள்ளனர். சந்தையில் அரிசித் தட்டுப்பாடு தற்போது தீவிரமடைந்துள்ளதற்கு இதுவும் ஒரு பிரதான காரணியாகும்.
மறுபுறம் அரசுக்கு சொந்தமான நெற்களஞ்சியசாலைகள் முறையாக பயன்படுத்தப்படவில்லை. கடந்த அரசாங்கங்கள் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.
அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்வதையே பிரதான தீர்வாக கொண்டிருந்தது. அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை.
இதற்கமைய பாழடைந்துள்ள அரச நெற்களஞ்சியசாலை புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இம்முறை பெருமளவிலான நெல் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும். நெல்லுக்கான உத்தரவாத விலையை 150 ரூபாவாக நிர்ணயிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் திருப்தியடையும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலை தீர்மானிக்கப்படும். இதற்கமைய நெற்களஞ்சியசாலை திணைக்களத்துக்கு நெல்லை விற்பனை செய்யுமாறு விவசாயிகளிடம் வலியுறுத்துகிறோம் என்றார்.