பனிப்பொழிவு, மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்: இபிஎஸ் பனிப்பொழிவு மற்றும் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்களில் உள்ள நெல் மணிகள் ஈரப்பதம் அதிகரித்து கனம் தாங்காமல் சாய்ந்து விட்டன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழைப்பொழிவால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஏற்கெனவே, பனிப்பொழிவால் நெல்மணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மழையாலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளன.
நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படாததால் வெட்டவெளியில் பனிப்பொழிவு மற்றும் மழையால் நனைந்து அதிக ஈரப்பதத்துடன் உள்ளன. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் விவசாயிகள் கொண்டு வரும் அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும்நிலையில், திமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
எனவே உடனடியாக வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை நேரடியாக அனுப்பி, பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்களை கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கவும், பயிர்க் காப்பீடு மூலம் உரிய இழப்பீடு பெற்றுத்தரவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நெல்மணிகளை காயவைக்கும் ‘டிரையர்’ வண்டிகளை அனுப்ப வேண்டும். தற்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள 17 சதவீத நெல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும். பனிப்பொழிவு மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான நிவாரணங்களை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.