மட்டக்களப்பு மாவட்டத்தில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ! on Monday, January 20, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பல பகுதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மண்டூர்-வெல்லாவெளி பிரதான போக்குவரத்துப்பாதையின் ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன் இன்று காலை போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அலுவலகங்களுக்கு கடமைக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துச்செய்வது பாதிக்கப்பட்ட நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஊடாக உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டது.
மேலும் போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதனின் தலைமையில் இந்த போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்
இதேபோன்று பாலையடிவட்டை-வெல்லாவெளி பிரதான வீதி,மண்டூர்-ராணமடு வீதி,வெல்லாவெளி – உகன வீதி போன்றன வெள்ளம் காரணமாக போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
உன்னிச்சையின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணாக வவுணதீவுப்பகுதிக்கான பல்வேறு போக்குவரத்துப்பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது