புலிகளை செல்லப் பிராணியாகக் கொடுக்க இந்த நாட்டின் பிரதமர் பரிந்துரைப்பது ஏன்?
- எழுதியவர், நவீன் சிங் கட்கா
- பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி
பத்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை மூன்று மடங்கு உயர்த்தியதற்காக நேபாளம் உலகளவில் கொண்டாடப்படுகிறது. ஆனால், அதன் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, நேபாளம் அளவை மீறிய வெற்றியை அடைந்திருக்கலாம் என்று கருதுகிறார்.
“இவ்வளவு சிறிய நாட்டில், எங்களிடம் 350க்கும் அதிகமான புலிகள் உள்ளன. இவ்வளவு புலிகளை வைத்துக்கொண்டு, அவை மனிதர்களைச் சாப்பிட்டுக் கொள்ளட்டும் என்று அனுமதிக்க முடியாது,” என்று 29வது காலநிலை உச்சிமாநாடு முடிவுகளால் நாட்டில் ஏற்படும் தாக்கம் குறித்து மதிப்பாய்வதற்காக கடந்த மாதம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் கே.பி.ஷர்மா ஒலி கூறினார்.
அரசாங்க தரவுகளின்படி, 2019 மற்றும் 2023க்கு இடையில் புலிகளின் தாக்குதல்களால் கிட்டத்தட்ட 40 பேர் பலியாகியுள்ளனர், 15 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால், உள்ளூர் சமூகங்கள் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகக் கூறுகின்றன.
“எங்களுக்கு 150 புலிகள் போதும்” என்று பிரதமர் ஒலி டிசம்பரில் அறிவித்தார். அதோடு, நேபாளம் அதன் மதிப்புமிக்க புலிகளை மற்ற நாடுகளுக்குப் பரிசாக அனுப்பலாம் என்றுகூடப் பரிந்துரைத்தார்.
புலிகள் எவ்வளவு இருப்பது மிக அதிகமாகக் கருதப்படுகிறது?
வல்லுநர்கள், இதற்குக் குறிப்பிட்ட ஒரு பதில் இல்லை என்கின்றனர். இது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் இரை உயிரினங்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதைப் பொருத்தது. அதாவது, ஒரு புலிக்கு புள்ளி மான், கடமான், காட்டெருமை போன்ற சுமார் 500 இரை உயிரினங்கள் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்று புலிகள் உயிரியலாளர் உல்லாஸ் கரந்த் கூறுகிறார்.
புலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்த பிரதமர் ஒலியின் பார்வை தவறானது என்று வல்லுநர்கள் வாதிடுகின்றனர். அதற்கு மாறாக, நேபாள அரசு, “புலிகள், இரை உயிரினங்கள் இடையிலான விகிதத்தைப் பராமரிக்க ஏதுவாக, பாதுகாக்கப்பட்ட காடுகளின் பரப்பளவை விரிவுபடுத்த வேண்டும்” என்று முனைவர் உல்லாஸ் கரந்த் கூறுகிறார்.
காட்டுயிர்கள் இரையைத் தேடி பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறுவதே, புலிகள் மனிதர்கள் மீது காட்டின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தக் காரணமாக இருக்கக்கூடும்.
தேசிய பூங்காக்கள், மனித குடியிருப்புகளுக்கு இடையில் அமைந்துள்ள “இடைவெளி மண்டலங்கள்” இதற்கு ஓர் உதாரணம். இந்தப் பகுதிகளில் காட்டுயிர்களை இயல்பாகக் காண முடியும். அதேநேரம், இந்தப் பகுதிகளை உள்ளூர் மக்கள் கால்நடை மேய்ச்சலுக்கும் விறகு சேகரிப்புக்கும் பயன்படுத்துகின்றனர்.
தேசிய பூங்காக்கள் மற்றும் பிற காடுகளை இணைக்கக்கூடிய, காட்டுயிர்கள் சுற்றித் திரியக்கூடிய வழித்தடங்கள் மற்றொரு மனித-காட்டுயிர் மோதல் புள்ளியாக வெளிப்பட்டுள்ளன. சில நேரங்களில் இந்தப் பகுதிகள் வழியாக சாலைகள் ஊடுருவிச் செல்கின்றன.
அதோடு, உள்ளூர் மக்கள் உணவு தேடுவதற்கும் அவற்றைப் பயன்படுத்துகின்றனர் . இதனால் அவர்கள் புலி போன்ற பெருவேட்டையாடியின் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர்.
மனித இறப்புகளின் அதிகரிப்பு, ஒரு காலத்தில் புலிகள் பாதுகாப்பில் பிற நாடுகளுக்கு உதாரணமாகத் திகழ்ந்த நேபாளத்தின் பாதுகாப்பு வடிவம் சிதைந்து வருவதற்கான அறிகுறி என்று காட்டுயிர் வல்லுநர் கரண் ஷா கூறுகிறார்.
“இதுவரை, நேபாளத்தின் கவனம் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதில் இருந்ததாகத் தெரிகிறது. இதனால், தேசிய பூங்காக்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றி வாழும் மக்கள் சமூகங்கள் மீதான அதன் தாக்கம் புறக்கணிக்கப்பட்டுள்ளது,” என்று கூறுகிறார் கரண் ஷா.
”காட்டுயிர் பாதுகாப்பு என்பது ‘ஒரு சுற்றுச்சூழல் அல்லது அறிவியல் பிரச்னை’ மட்டுமல்ல, அதுவொரு சமூகப் பிரச்னையும்கூட. மனித உயிர்கள் பலியாவதைத் தடுக்க வேண்டும். அப்போதுதான் காட்டுயிர் பாதுகாப்பின் ஓர் அங்கமாக உள்ளூர் மக்கள் இருப்பார்கள். இல்லையெனில், அதற்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள்” என்று அவர் வாதிடுகிறார்.
“நேபாள மக்கள்தொகையில் கணிசமான பகுதி இன்னும் கிராமப்புறங்களில் வாழ்கின்றன. அவர்கள் இயற்கைப் பாதுகாப்புக்கு உதவும் காட்டு வளங்களைச் சார்ந்துள்ளனர். ஆனால், அந்த மக்கள் இப்போது புலிகளால் கொல்லப்படுகின்றனர் அல்லது காயமடைகின்றனர்,” என்று நேபாள சமூக வனவியல் பயனர்கள் கூட்டமைப்பின் தலைவர் தாக்கூர் பண்டாரி பிபிசியிடம் கூறினார்.
“வனப் பாதுகாவலர்களாகிய நாங்கள் காட்டுயிர்களுக்கு எதிராக இருக்க முடியாது. ஆனால், அதற்காக மனிதர்கள் மற்றும் எங்கள் சமூகத்தின் மீதான அதன் தாக்கத்தைப் புறக்கணிக்கலாம் என்று அர்த்தமல்ல,” என்கிறார் பண்டாரி.
ஆபத்தாக மாறி வரும் ஒரு வெற்றிக் கதை
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, ஆசியாவில் சுமார் ஒரு லட்சம் புலிகள் சுற்றித் திரிந்தன. ஆனால், காடழிப்பு, அதீத வேட்டை போன்ற காரணங்களால் அவை அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டன.
நேபாளம், சீனா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனீசியா, ரஷ்யா உள்ளிட்ட 13 நாடுகளில் இப்போது சுமார் 5,600 புலிகள் மட்டுமே காடுகளில் தற்போது எஞ்சியுள்ளன.
இந்த நாடுகள் அனைத்தும் 2022-ஆம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க உறுதியளித்திருந்தன. ஆனால், நேபாளம்தான் தனது இலக்கை முதலில் அடைந்த நாடு. அதோடு, கடந்த 1992 முதல் 2016ஆம் ஆண்டுக்குள் வேட்டையை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தி, நாட்டின் வனப் பரப்பை இரட்டிப்பாக்கியது.
தெற்கு நேபாளத்தில் உள்ள 16 பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை, அதன் வட இந்திய எல்லையில் இருக்கும் பகுதிகளுடன் இணைக்கக்கூடிய வன வழித்தடங்களை உருவாக்கியதும் இதற்கு உதவியது.
ஆனால், மனிதர்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவது, இந்தச் சாதனையை மங்கச் செய்துள்ளது.
நேபாளத்தில் புலிகளின் எண்ணிக்கை மனித உயிர்களைப் பலி கொடுத்து வளர்ந்து வருவதாக பிரதமர் ஒலி நம்புகிறார். இருப்பினும், இதற்குச் சாத்தியமான தீர்வுகள் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.
நேபாளத்தில் புலிகளை நிர்வகிப்பதில் சவால் இருப்பதை தேசிய பூங்காக்கள் மற்றும் வனத்துறை ஒப்புக்கொண்டுள்ளது. அங்கு மனிதர்களைக் கொல்லும் புலிகள் கண்டறியப்பட்டு, பிடிக்கப்படுகின்றன.
“காட்டுயிர் பூங்காக்கள் மற்றும் மீட்பு மையங்கள் ஏற்கெனவே இத்தகைய பிரச்னைக்குரிய புலிகளால் நிரம்பி வழிவதாக” 2023இல் வெளியிடப்பட்ட காட்டுயிர் பாதுகாப்பு தொடர்பான அறிக்கையில் வனத்துறை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், “பிரச்னைக்குரிய காட்டுயிர்களின் மீட்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றைச் சமாளிக்க ஒரு விரிவான நெறிமுறை அவசரமாகத் தேவைப்படுவதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் ஒலி, நேபாளத்தின் புலிகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப முன்மொழிந்துள்ளார்.
“பருந்துகள், மயில்கள் போன்ற பறவைகளை மக்கள் வளர்ப்புப் பிராணிகளாக வைத்திருக்க விரும்புகிறார்கள். அப்படியிருக்கும்போது, புலிகளையும் ஏன் வைத்திருக்கக் கூடாது? அது அவர்களின் அந்தஸ்தையும் உயர்த்தும்” என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.
ஆனால், இதுகுறித்து மற்றவர்கள் வேறு விதமான கருத்துகளைக் கூறுகின்றனர்.
மனித உயிர்களைப் பலமுறை பறித்த புலிகளை “உடனடியாகக் கொல்ல வேண்டும்” என்று முனைவர் கரந்த் கூறுகிறார்.
அதேவேளையில், புலிகளின் இயற்கை வாழ்விடங்களுக்குள் அத்துமீறி நுழைந்து, விவசாயம் அல்லது உள்கட்டமைப்புக்காக அந்த நிலத்தைப் பயன்படுத்தி, புலிகளின் இரை எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் மனிதர்களே பிரச்னையை அதிகப்படுத்திவிட்டதாகச் சிலர் வாதிடுகின்றனர்.
இதற்கிடையில், உள்கட்டமைப்பை உருவாக்க அதிக நிலங்களை அழிக்க ஏதுவான வகையில் புலிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நேபாள பிரதமர் விரும்புவதாகக் கூறுகிறார் பிபிசியிடம் பேசிய காட்டுயிர் மேலாண்மை வல்லுநர் ஒருவர்
“இந்தப் பரிந்துரை மக்களின் பாதுகாப்பு பற்றியது அல்ல” என்கிறார் அவர்.
“புலிகளைப் பிற நாடுகளுக்குப் பகிரும்” பிரதமர் ஒலியின் பரிந்துரைக்கு ஆதரவு கிடைக்குமா என்பது தெரியவில்லை. அதேவேளையில், இந்தப் பிரச்னைக்கு புலிகளின் தாக்குதல் அதிகரிப்பது காரணமா அல்லது புலிகளின் வாழ்விடத்திற்குள் அதிகமான மக்கள் இருப்பது காரணமா என்பதும் தெளிவாகாமல் இருக்கிறது.
ஆனால், நேபாளத்தில் மனிதர்களும் புலிகளும் அமைதியாக, இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழப் போராடி வருவது தெளிவாகிறது. மேலும், நாட்டின் காட்டுயிர் பாதுகாப்பில் இருந்த வெற்றி, அதில் கவனிக்கப்படாத பிரச்னைகளை இப்போது கருத்தில் கொள்ள வைத்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.