அகதிகளாக இலங்கைக்கு வந்திருப்பவர்களை தொடர்ந்து இருப்பதற்கோ அல்லது தொடர்ந்து வருவதற்கோ நாங்கள் எப்போதும் ஊக்குவிக்கவில்லை. ஆனால் இருப்பவர்களை வந்திருப்பவர்களை மனிதாபிமான அடிப்படையில் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைப்பது பொருத்தமாக அமையும். சர்வதேச சட்ட நியமங்களையும் பின்பற்றக்கூடியதாக இருக்கும் என்பதை வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் யாட்சன் ஃபிகிராடோ.
முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் போரில் இருந்து தப்பி வந்த சிறுவர்கள் உள்ளிட்ட ரோஹிங்கியாக்களை திருப்பி அனுப்பக்கூடாது என வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டத்தை முன்னெடுத்த செயற்பாட்டாளரிடம், “ரோஹிங்கியாக்களை இலங்கைக்கு வர ஊக்குவிப்பார்களா?” என குற்றப் புலனாய்வு திணைக்களம் கேள்வி எழுப்பியிருந்தது.
கொழும்பு, காவல்துறை தலைமையகக் கட்டிடத்தில் அமைந்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதக் கடத்தல் வியாபாரம் குறித்த விசாரணைப் பிரிவின் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரியிடம் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்ட, அவரிடம் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியாக்கள் குழுவை நாடு கடத்தக்கூடாது என கோரி கடந்த ஜனவரி 9ஆம் திகதி போரால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதேவேளை தப்பி வந்த ரோஹிங்கியாக்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பக் கூடாது எனக் கோரி சிவில் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பலர் அடங்கிய குழுவினர் ஜனவரி 10 வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பல்வேறு நபர்கள் ஆர்ப்பாட்டங்களை செய்துள்ளனர். அவர்களுக்கு ஏன் அழைப்பாணை வரவில்லை. முல்லைத்தீவில் இடம்பெற்ற போராட்டத்தில் நானும் இருந்தேன். ஆகவே எனக்கு மாத்திரம் வந்தது தொடர்பில் அவர்களிடம் கேள்வி எழுப்பினேன். அப்போது அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்தினரினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பிலேயே அழைப்பாணை விடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.