இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் – 1
தமிழக அரசின் `அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையகத்தினால்` ஒழுங்குசெய்யப்படவுள்ள “உங்கள் வேர்களைத் தேடி” நிகழ்ச்சி தொடர்பான பத்திரிகைச் செய்தியொன்றை எனது அம்மாவின் தமிழக நண்பரொருவர் வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்திருந்தார். ஏற்கனவே பழனியில் இடம்பெற்ற முத்தமிழ் முருகன் மகாநாட்டுக்கு வருகைதந்து பல இனிய அனுபவங்களைச் சுமந்திருந்த எங்களுக்கு இந்தச் செய்தி உவப்பானதாக இருந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை.
குடும்பத்தவரின் பரிபூரண சம்மதத்தின் பேரில் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்த இணையதள இணைப்பின் ஊடாக விண்ணப்பித்தேன். சில நாட்களில் இந்நிகழ்ச்சியின் இணைப்பாளர்களில் ஒருவரான திரு.விது குமார் என்பவருடன் தொலைபேசி மூலமான தேர்வு இடம்பெற்றது.
முடிவில் விரைவில் பதிலை அறிவிப்பதாக அவர் கூறினார். தெரிவுக் குழுவிடமிருந்து சாதகமான பதில் வந்துவிடாதா? என்ற எதிர்பார்ப்புடனும் பிரார்த்தனைகளுடனும் காத்திருந்தேன். நான் எதிர்பார்த்திருந்த சாதகமான அந்தப் பதில் கிடைத்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிப் பிரவாகத்தை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது. பயண ஏற்பாடுகளைத் துரிதமாக முடித்து 28.12.2024 அன்று பகல் 1.50ற்கு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 6E1176 (A320) இன்டிகோ விமானம் மூலம் சென்னை நோக்கிப் பயணமானேன்.
இது தமிழ்நாட்டிற்கான எனது மூன்றாவது பயணம். முதல் பயணத்தில் அம்மாவுடனும், இரண்டாவது பயணத்தின்போது அம்மா, அப்பா இருவருடனும் இணைந்து பயணித்திருந்தேன். இந்தப் பயணம் அவ்வாறில்லை தனிமையில் நாடு கடந்துசெல்லும் பயணம்…! அதனால் மனதில் ஒருவித பயமும் படபடப்பும் இருந்துகொண்டேயிருந்தது. வழியனுப்ப விமான நிலையம் வந்திருந்த குடும்பத்தினரைப் பிரிந்து பயணப்பொதிகளை ட்ரொலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு உட்செல்கையில் பயம் மெல்லக் காணாமற்போய் எனக்குள் தன்னம்பிக்கை மெல்ல மெல்ல துளிர்விட ஆரம்பித்திருந்தது.
பயணப் பொதிகளை உரிய இடத்தில் ஒப்படைத்து விமானச் சீட்டினைப் பெற்றுக்கொண்டு, விமானப்பயணத்திற்கான செயல் ஒழுங்குகளை படிப்படியாக நிறைவுசெய்து விமானத்துள் ஏறி உரிய இருக்கை தேடி அமர்ந்ததும் எனக்குள் என்னையறியாமலே ஒரு பரவச உணர்வு தோன்றியது. எனது முன்னைய விமானப்பயணங்கள் இரவு வேளைகளிலேயே இடம்பெற்றிருந்தன. அதனால் விண்வெளியின் அழகை முழுமையாக இரசிக்க இயலவில்லை. ஜன்னலினூடாகப் பார்க்கையில் இருளில் கண் சிமிட்டிய மின்விளக்குகளின் ஒளியில் தென்பட்ட கட்டடங்களையே இரசிக்க முடிந்திருக்கிறது. ஆனால் இப்பயணம் வெண்பஞ்சுகளாய்த் தெரிந்த மேகக்கூட்டத்தை அருகிருந்து இரசிக்கும் வாய்ப்பைத் தந்திருந்தது.
முன்னைய இரவு நேரப்பயணங்கள் விரைவாக முடிந்ததைப்போன்ற பிரமையை உண்டாக்கியிருக்க இந்தப் பகல் நேரப்பயணமோ நீண்ட நேரம் எடுப்பதைப் போன்ற ஒரு பிரமையைத் தோற்று வித்திருந்தது. உரியவேளையில் பயணம் நிறைவடைந்து விமான நிலைய சம்பிரதாயங்களைப் பூர்த்திசெய்து வெளியே வந்தபோது என்னை அழைத்துச் செல்வதற்காக மீனம்பாக்கம் விமானநிலையத்துக்கு வருகைதந்து காத்திருந்த `வேர்களைத்தேடி திட்டத்தின்` செயற்பாட்டுக் குழுவினர் என்னை வரவேற்று வாழ்த்துக்கூறி தங்குவதற்கு ஒழுங்கு செய்திருந்த எழும்பூரில் உள்ள ரமடா ஹோட்டலுக்கு காரில் அழைத்துச் சென்றனர். ஹோட்டலை அடைந்தபோது நேரம் நாலரை மணியைக் கடந்திருந்தது.
ரமடா ஹோட்டலில் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது கண்டியிலிருந்து இந்நிகழ்ச்சிக்குத் தெரிவாகியிருந்த சகோதரி துளசியுடன் ஒரே அறையில் தங்குவதற்கான வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. சகோதரி துளசி புன்னகை பூத்த முகத்தோடு என்னை வரவேற்றார். அவர் ஓர் ஆயுர்வேத மருத்துவர் என்பதை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். வேர்களைத் தேடி நிகழ்ச்சிக்குத் தெரிவாகியதன் பின்னர் இணைப்பாளரினால் வாட்ஸ் அப் குழுவொன்றில் இணைக்கப்பட்டிருந்தேன். அக்குழுமூலம் எனக்கு அறிமுகமானவர்தான் துளசி அவரோடு சில தடவைகள் தொலைபேசிமூலம் உரையாடிய அனுபவமும் எனக்கிருந்தது பேசிப்பழகிய ஒருவருடன் ஒரே அறையில் தங்குவதை என்மனம் மிக விருப்புடனே ஏற்றுக்கொண்டது.
வைத்தியர் -துளசி மதியநேர விமானப் பயணத்திற்காக வீட்டிலிருந்து காலையிலேயே விமான நிலையத்திற்குப் புறப்பட்டதால் மதிய உணவைப் புறக்கணித்திருந்த எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது அதனை ஊகித்து உணர்ந்து கொண்ட சகோதரி துளசி தனது உறவினர் ஒருவர் கொடுத்து அனுப்பியிருந்த லெமன் றைஸ் எனப்படும் சாதத்தை எனக்குக் கொடுத்து பசியாற உதவினார். உண்மையில் அந்த அன்னம் எனக்கு அமிர்தமாகவே இருந்தது. சிறிது நேரம் அளவளாவி எமது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டோம் .
அப்போது எங்கள் இருவரதும் வாட்ஸ்அப் குழுவிற்கு ஒரு செய்தி வந்திருந்தது. “இத்திட்டத்தில் பங்குகொள்ள வருகை தந்திருக்கும் அனைவருக்கும் 30 நாட்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு சிம் அட்டை வழங்கப்படவுள்ளது. தங்களது கடவுச்சீட்டை எடுத்துக்கொண்டு வரவேற்புக் கூடத்துக்கு வருகை தரவும்” என்ற அறிவுறுத்தலுக்கமைவாக மாடியிலிருந்த அறையிலிருந்து புறப்பட்டுக் கீழே வந்தோம்.
அங்கு வேர்களைத் தேடி வந்த என்போன்ற விழுதுகளில் சிலரையும் சந்தித்து அளவளாவக் கிடைத்தது. இவர்களுடன்தான் இரு வாரங்கள் பயணிக்கப் போகின்றோம் என்ற எண்ணம் மனதில் உற்சாக அலைகளை உருவாக்கியிருந்தது. சில நிமிடப் பொழுதுகளில் எயார்ரெல் (Airtel) நிறுவனம் மூலம் உடன் செயற்படும் வகையிலான சிம் எமக்கு வழங்கப்பட்டது. உண்மையிலேயே அனைவரும் உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தோம்.
அவரவர் தத்தம் குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள அது உற்ற துணையாக அமையப்போகிறது என்பது எங்களைப் பொறுத்தவரை பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மகிழ்வுடன் அறைக்குத்திரும்பினோம். முதல் நாள் இரவு என்னை நெருங்கிவர முரண்டு பிடித்த தூக்கம் இப்போது என் கண்களைத் தழுவிக் கொண்டது. அசதியினால் உறங்கிப்போனேன். நான் கண்விழித்தபோது மறுநாளுக்கான நிகழ்ச்சிக்குத் தயாராவதற்கான அறிவுறுத்தல்களுடன் இரவு நேர உணவும் எமக்காகக் காத்திருந்தது.
கீதம் உணவகத்திலிருந்து தருவிக்கப்பட்டு எமக்கு வழங்கப்பட்ட இரவு உணவு தமிழ்கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பார்வைக்கு மிக அழகாக இருந்ததோடு சுவை, தரம் நிறைந்ததாகவும் இருந்தது. கூடவே கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பழனியில் நடந்த முத்தமிழ் முருகன் மகாநாட்டில் கலந்து கொண்டபோது, தமிழக அரசினால் எமக்கு வழங்கப்பட்டிருந்த உணவின் சுவையும் தரமும் அழகும் நினைவுகளில் நிழலாடின. `விருந்தோம்பலில் தமிழகத்தை விஞ்ச முடியாது` என்ற உணர்வு என் நெஞ்சத்தில் ஆழமாக வேரூன்றியது.
மறுநாள் வேர்களைத்தேடி வந்துள்ள விழுதுகள் அனைவரையும் ஒருங்கே சந்திக்கப்போகின்றோம் என்ற எண்ணம் ஒருபுறம், எங்களை இணைக்கப்போகும் தமிழக அரசின் `அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை` ஆணையகரகத்தின் அதிகாரிகள் மற்றும் இணைப்பாளர்களைச் சந்திக்கவிருக்கிறோம் என்ற எண்ணம் மறுபுறம், என்னை மகிழ்ச்சிப் பிரவாகத்தில் திளைக்கச் செய்தது. எப்போது பொழுது புலரும் என்ற காத்திருப்புக்களுடன் உறங்கச் சென்றேன்.
மறுநாளில்தான் இத்திட்டத்தின் நோக்கம், இதன் மூலம் ஒரு ஊடகவியலாளனாக எனக்குக் கிடைத்த வாய்ப்பு , அதன் பெறுமதி போன்ற பல விடயங்களை அறிய முடிந்தது. அவை பற்றி தொடரும் பதிவுகளில் காண்போம்.