டிரம்ப் பதவியேற்புக்கு முன்பே வாஷிங்டனில் கூடிய போராட்டக்காரர்கள் – காரணம் என்ன?
- எழுதியவர், ரேச்சல் லூக்கர்
- பதவி, பிபிசி செய்திகள், வாஷிங்டன்
ஜனவரி 18-ஆம் தேதி அன்று, ஆயிரக்கணக்கான பெண்கள் வாஷிங்டனில் பேரணி நடத்தினர். ஜனவரி 20 அன்று அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்பிற்கு எதிராக இந்த பேரணியை நடத்தினர்.
‘தி பீப்பிள்ஸ் மார்ச்’ என்று அழைக்கப்படும் இந்த பேரணி கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முன்னதாக இது ‘வுமென்ஸ் மார்ச்’ என்று அழைக்கப்பட்டது.
பல்வேறு பெண்கள் அமைப்பினர் ஒன்றாக சேர்ந்து இந்த பேரணியை நடத்தினர்.
‘டிரம்பிசத்தை’ எதிர்க்கும் நோக்கில் இந்த பேரணி நடத்தப்படுவதாக அவர்களின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரம், சியாட்டிலின் பல இடங்களிலும் சிறிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன.
டிரம்ப் திங்களன்று அதிபராக பொறுப்பேற்க உள்ள நிலையில், வாஷிங்டனில் தொடர்ச்சியாக சில முக்கிய நிகழ்வுகளில் கலந்து வருகிறார். இந்த சமயத்தில் பெண்களின் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்களைக் காட்டிலும் சனிக்கிழமை நடந்த பேரணியில் குறைவான நபர்களே பங்கேற்றனர்.
பேரணியை நடத்த திட்டமிட்டவர்கள், பேரணியில் 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் 5 ஆயிரம் பேர் மட்டுமே பேரணியில் பங்கேற்க வந்தனர்.
லிங்கனின் நினைவகத்தை நோக்கி செல்வதற்கு முன்பு மூன்று பூங்காக்களில் அவர்கள் ஒன்று கூடினார்கள்.
பல்வேறு பின்புலத்தில் இருந்து வந்த அவர்கள், காலநிலை மாற்றம், புலம் பெயர்வு மற்றும் பெண்களின் உரிமைகள் போன்ற பல்வேறு முக்கிய பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க இந்த பேரணியில் கலந்து கொண்டனர் என்று ‘பீப்பிள்ஸ் மார்ச்’-இன் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரணியில் பங்கேற்க பல்வேறு காரணங்கள் உள்ளன என்று இந்த பேரணியில் பங்கேற்க காத்துக் கொண்டிருந்த பெண்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
கருக்கலைப்பு அணுகலுக்கான தன்னுடைய ஆதரவை தெரிவிக்க இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக ப்ரூக் என்ற பெண் தெரிவித்தார்.
“நம்முடைய நாடு வாக்களித்த விதம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஏற்கனவே நம்மை ஒரு முறை ஏமாற்றிவிட்ட ஒரு அதிபர் பக்கம் மக்கள் சாய்ந்திருப்பது வருத்தம் அளிக்கிறது.” என்று கூறினார்.
கய்லா என்ற மற்றொரு போராட்டக்காரர், பல்வேறு உணர்வுகளுக்கு ஆட்பட்டதால் போராட்டத்தில் பங்கேற்க நாட்டின் தலைநகருக்கு வந்ததாக தெரிவித்தார்.
“உண்மையில் நான் கோபமாக இருக்கிறேன். சோகமாகவும் இருக்கிறேன்,” என்று கூறினார்.
முக்கியமாக கருதப்பட்ட பெண்கள் போராட்டம்
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி க்ளிண்டன் 2016-ஆம் தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகு பீப்பிள்ஸ் மார்ச்சின் முதல் பேரணி நடைபெற்றது.
அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற பின் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் தலைநகரைத் தாண்டியும் பரவியது. பல லட்சக்கணக்கான பெண்கள் டிரம்பிற்கு எதிராக பேரணியில் பங்கேற்றனர்.
டிரம்பிற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட எதிர்ப்பு நிகழ்வுகளின் ஒரு முக்கிய போராட்டமாக அந்த பெண்கள் பேரணி கருதப்பட்டது.
ஆனால், அதன் பின் நடைபெற்ற பேரணிகள் எதுவும் அந்த அளவுக்கு பெரியதாக நடைபெறவில்லை.
சனிக்கிழமை மாலை வாஷிங்டனுக்கு வந்த டிரம்ப், விர்ஜினியா புறநகர் பகுதியில் அமைந்துள்ள அவரின் கொல்ஃப் மைதானத்தில், தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பதவி ஏற்புக்கான கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
டிரம்பிற்கு ஆதரவாக கூடிய ஆண்கள்
சிறிய அளவில் டிரம்பின் ஆதரவாளர்களும் வாஷிங்டனில் கூடினர்.
டிரம்ப் எதிர்பாளர்களின் பேரணி வந்த போது, டிரம்புக்கு ஆதரவு அளித்த ஆண்கள், ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ என்ற எழுதப்பட்ட சிவப்பு நிற தொப்பிகளை அணிந்திருந்தனர்.
டிமோத்தி வால்ஸ் என்ற டிரம்ப் ஆதரவாளர் ஒருவர், அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமையிடம் பேசிய போது, அந்த டிரம்ப் தொப்பிகளை அவருடைய நண்பர்கள் ஒரு கடையில் வாங்கியதாக தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய மற்றொரு போராட்டக்காரர், இந்த பேரணியில் பங்கேற்கவே வாஷிங்டன் வந்ததாக தெரிவித்தார்.
சான்ஃபிரான்சிஸ்கோவில் இருந்து வந்த சூசி, வாஷிங்டனில் வாழும் தன்னுடைய சகோதரி ஆனேவுடன் சேர்ந்து பேரணியில் பங்கேற்றார். டிரம்ப் முதன்முறையாக பதவியேற்ற போது இளஞ்சிவப்பு நிற தொப்பிகளை அணிந்து இருவரும் பேரணியில் பங்கேற்றனர்.
2017-ஆம் ஆண்டு திரண்ட பெருங்கூட்டத்தை நினைவு கூர்ந்த சூசி, இந்த முறையும் மக்கள் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவார்கள் என்று நினைத்ததாக தெரிவித்தார்.
”டிரம்ப் இம்முறை பலப்படுத்தப்பட்டுவிட்டார். தொழில்நுட்பத்துறை மற்றும் செல்வந்தர்களை அவருக்கு கீழே கொண்டு வந்துவிட்டார்” என்று அவர் தெரிவித்தார்.
”நாங்கள் இங்கே இருக்கிறோம். நாங்கள் எதிர்ப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.
ஹோலி ஹான்ரிச் மற்றும் அலெக்ஸ் லெதெர்மன் இந்த செய்திக்கு பங்களித்துள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு