3 மணி நேர தாமதத்தின் பின் அமுலுக்கு வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்!

by wp_shnn

காசாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர் நிறுத்தம் மூன்று மணி நேர தாமதத்திற்குப் பின்னர் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆரம்பத்தில் போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (19) காலை 8:30 மணிக்கு அமுலுக்கு வருவதாக இருந்தது.

எனினும், விடுவிக்கப்படும் மூன்று பெண் பணயக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அது தாமதமானது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படவுள்ள பணயக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் தாமதமாக வெளியிட்ட பின்னர் உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணிக்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் கூறியது.

ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படும் மூன்று இஸ்ரேலிய பெண் கைதிகள் ரோமி கோனென், டோரன் ஸ்டெய்ன் பிரெச்சர் மற்றும் எமிலி டமாரி என்று ஹமாஸ் பெயரிட்டதை அடுத்து இந்த அறிக்கை வந்தது.

பல பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்படவுள்ள மூன்று கைதிகளின் பெயர்களை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை ஹமாஸ் நிறைவேற்றவில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதேவேளை, போர் நிறுத்த உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலிய அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக தீவிர வலதுசாரி யூத சக்தி கட்சி அறிவித்தது.

அதன்படி, இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதமர் பென்-க்விர் (Itamar Ben-Gvir) மற்றும் அவரது தீவிர வலதுசாரி யூத சக்தி கட்சியின் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து இராஜினாமா செய்வதாக கூறியதுடன், அதற்கான கடிதங்களையும் சமர்ப்பித்தனர்.

பிரதமர் நெதன்யாகுவுக்கு எழுதிய இராஜினாமா கடிதத்தில் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதமர் பென்-க்விர், அரசாங்கத்தை கவிழ்க்க தாம் பணியாற்றமாட்டேன் என்றும், ஆனால் போர்நிறுத்த ஒப்பந்தத்தை “பயங்கரவாதத்திற்கு முழுமையான வெற்றி” என்றும் விமர்சித்தார்.

இதனிடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வருவதற்கு முன்பாக இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்