நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்வதே அரசின் நோக்கமாகும் சலுகைகள் மற்றும் ஆதரவின் அடிப்படையில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சீன மக்கள் குடியரசின் முழுமையான நிதி உதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டடத்தை நேற்று சனிக்கிழமை (18) பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
ஒரு நாட்டின் நீதி முறைமையில், நாட்டு மக்களுக்கு நீதி வழங்குவதற்கான வசதிகளுக்காக செய்யப்படும் முதலீடு நாட்டுக்கும் அதன் மக்களுக்குமான அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும்.
இது வெறுமனே ஒரு கட்டடம் மட்டுமல்ல. இது நீதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் சின்னமாகும்.
சலுகைகள் மற்றும் ஆதரவு முறைமைகளின் கீழ் பலருக்கு நீதி மறுக்கப்படுவதால் நமது நாடு பல தசாப்தங்களாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த தவறுகளை சரிசெய்து, கடந்த கால அநீதிகளை சரிசெய்வதும், அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதுமே எங்கள் நோக்கமாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ அதிகாரத்தை நியாயமான முறையில் பயன்படுத்துவதன் மூலமும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தீர்ப்பை வழங்குவதன் மூலமும் மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
பெண்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் நீதியை எதிர்பார்க்கின்றனர். இதன்போது யாருக்கும் கஷ்டம் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்யவும், மன நிலைகளில் கவனம் செலுத்தவும், அவர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதில் அல்லது அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவர்கள் எதிர்கொள்ளும் விளைவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த செயற்பாட்டில் அனைத்து செயற்பாட்டாளர்களும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். நீதிக்காக பல ஆண்டுகளாக சிரமங்களை சந்திக்கும் மக்கள் உள்ளனர்.
அவர்களின் நீதிக்காக அவர்களுக்கு கிடைக்கவேண்டிய கரிசனையை நாங்கள் உறுதி செய்கிறோம். நீதிக்காக அவர்கள் அச்சுறுத்தல் அல்லது அடக்குமுறை அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகக் கூடாது.
மக்கள் சீனக் குடியரசின் பெருந்தன்மைக்கும் இந்நாட்டு மக்களுக்கான நீதிக்காக அவர்கள் வழங்கிய ஆதரவுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இந்த நிகழ்வில் சீன மக்கள் குடியரசின் தூதுவர் Qi Zhenhong, பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் பலர் கலந்துகொண்டனர்.