by sakana1

நுவரெலியா – உடப்புசல்லாவ வீதி நீரில் மூழ்கும் அபாயம் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக இன்று (19) பிற்பகலில் வீடுகள் விவசாய நிலங்கள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் வெகுவாக  பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை புதிய வீதி பகுதியில் வெள்ள நீர் வீதியைக் கடந்த செல்வதனால்  போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நுவரெலியா கந்தபளை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால்  விவசாயம் செய்யும் தாழ் நிலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினால் அறுவடைக்கு தயாரான மரக்கறி வகைகள் பாதிக்கப்படும் அபாயத்தில் காணப்படுவதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் கால்வாய்கள் முறையாக புனரமைக்கப்பட்டு  பராமரிக்கப்படாமல் இருப்பதால், அடிக்கடி  வெள்ளம் ஏற்பட்டு இந்த விவசாய நிலங்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக அமைவதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

தொடர்ச்சியாக பெய்யும் மழையால் நுவரெலியாவில் பிரதான வீதிகளை பயன்படுத்தும் வாகனச் சாரதிகள் பனி மூட்டம் மற்றும் மழையுடனான காலநிலை நிலவும் போது தமது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயன்படுத்துவதன் மூலம் விபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம் என  போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்