by sakana1

இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரா ஆர்யா கனடா பிரதமர் பதவிக்கு போட்டி இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரா ஆர்யா கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

கனடா நாடாளுமன்றத்தில் மொத்தம் 338 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 170 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. கடந்த 2015-ம் ஆண்டில் நடந்த கனடா நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சி 184 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. அந்த கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவியேற்றார்.

கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த கனடா நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சிக்கு 157 இடங்கள் மட்டுமே கிடைத்தன. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். கடந்த 2021-ம் ஆண்டில் அவர் நாடாளுமன்றத்தை கலைத்தார். அந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் லிபரல் கட்சிக்கு 160 இடங்கள் கிடைத்தன. மீண்டும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின் பிரதமராக பதவியேற்றார்.

ஆரம்பம் முதலே கனடாவை சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட அவர் இந்தியாவுக்கு எதிராக கருத்துகளை கூறிவந்தார். காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதன்காரணமாக இரு நாடுகளும் கடந்த அக்டோபரில் பரஸ்பரம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றினர்.

இந்த சூழலில் ஆளும் லிபரல் கட்சியில் ஜஸ்டினுக்கு எதிராக பெரும்பான்மையான எம்பிக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி பிரதமர் பதவி, கட்சித் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். ஆளும் லிபரல் கட்சியின் மூத்த தலைவர்கள் மார்க் கார்னி, கிறிஸ்டியா பிரீலேண்ட் உள்ளிட்டோர் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்திருந்தார். ஆனால் அவர் திடீரென போட்டியில் இருந்து விலகிவிட்டார். இந்த சூழலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா எம்பி சந்திரா ஆர்யா பிரதமர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பல்வேறு சவால்களை கனடா எதிர்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் நமது தேசம், எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது. கனடாவின் நலன் கருதி பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கர்நாடக மாநிலம், துமக்கூரு பகுதியை சேர்ந்த சந்திரா ஆர்யா கடந்த 2006-ம் ஆண்டில் கனடாவில் குடியேறினார். கடந்த 2015-ம் ஆண்டு கனடா நாடாளுமன்ற தேர்தலில் நேபியன் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். கடந்த 2019, 2021-ம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் அதே தொகுதியில் மீண்டும் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.

கனடா பிரதமர் பதவிக்கு அதிகாரப்பூர்வமாக மனு தாக்கல் செய்த அவர், அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தனது தாய்மொழியான கன்னடத்தில் உரையாற்றினார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் சந்திரா ஆர்யா இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது அவர் கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவது மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

கர்நாடகாவில் வசிக்கும் சந்திரா ஆர்யாவின் தந்தை கோவிந்தய்யா கூறும்போது, “எனது மகன் கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதை கனவில்கூட நினைத்து பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.

சந்திரா ஆர்யாவின் தம்பி ஸ்ரீநிவாசா கூறும்போது, “கனடாவில் குடியேறிய மிக குறுகிய காலத்தில் எனது அண்ணன் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

லிபரல் கட்சி தொண்டர்களிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பு மூலம் வரும் மார்ச் 9-ம் தேதி அந்த கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். அவரே கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்பார். வரும் அக்டோபரில் கனடா நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்