டிரம்பிடம் தோற்ற கமலா ஹாரிஸ் இனி என்ன செய்யப் போகிறார்??

கமலா ஹாரிஸ், அமெரிக்கா

பட மூலாதாரம், REX/Shutterstock

  • எழுதியவர், கோர்ட்னி சுப்ரமணியன்
  • பதவி, பிபிசி செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிடம் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்து சரியாக இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது.

டிரம்ப் நாளை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கிறார். அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்று டிரம்பை கமலா ஹாரிஸ் விமர்சனம் செய்திருந்தார்.

அமெரிக்காவின் வயதான அதிபருக்கு மாற்றாக தனது அதிபர் தேர்தல் பயணத்தை ஆரம்பித்து, ஜனநாயகக் கட்சியின் தலைவராக ஹாரிஸ் மாறுவதை கண்ட தேர்தலின் முடிவு இது. அவரின் குறுகிய கால பிரசாரம் அவருடைய கட்சியினருக்கு ஒரு நம்பிக்கையை அளித்தது. ஆனால், மோசமான தோல்வி அந்த கட்சியில் இருக்கும் பிளவுகளை வெளிச்சம் போட்டு காட்டியது.

முந்தைய தோல்வி வேட்பாளர்கள் போன்றே செயல்படுவாரா கமலா?

அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து கமலா ஹாரிஸ் மற்றும் அவரின் குழுவினர் சிந்தித்து வருகின்றனர். 2028-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு தயாராவதா அல்லது அவரின் மாகாணமான கலிஃபோர்னியாவின் ஆளுநர் பதவிக்கு முயற்சி செய்வதா என்பது குறித்து அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

சமீபத்திய தேர்தல்களில் தோல்வியுற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களான அல் கோர், ஜான் கெர்ரி, ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டாம் என்று முடிவு எடுத்தனர்.

கமலா ஹாரிஸின் நெருங்கிய வட்டத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடை வழங்கிய பலரும், இந்த தேர்தலில் அவருக்கு அதிகரித்த ஆதரவு மற்றும் அசாதாரண சூழலால் அவருக்கு பிரசாரம் செய்ய கிடைத்த குறைந்த கால அகாசம் போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர் மீண்டும் தேர்தலுக்கு முயற்சிக்கலாம் என்று வாதிடுகின்றனர்.

கமலா ஹாரிஸ், அமெரிக்கா

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

டிரம்பின் அரசியல் பாதையை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 2020-ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் கூட, டிரம்ப் 2016 மற்றும் 2024 தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு கமலா ஹாரிஸ் காரணம் இல்லை என்று பல ஜனநாயகக் கட்சியினர் கூறுகின்றனர். கட்சியின் உத்தி குறித்து கேள்வி எழுப்பும் சிலர், கமலா ஹாரிஸ் மீண்டும் ஒரு முறை தேர்தலை சந்திப்பாரா என்ற சந்தேகத்துடன் உள்ளனர்.

2024-ஆம் ஆண்டு தேர்தலில் கமலா ஹாரிஸிற்கு ஆதரவாக ஒன்றிணைந்த சில ஆளுநர்கள், அவர்களுக்கென தனிப்பட்ட கனவுகளைக் கொண்டிருக்கின்றனர். அதிக வெற்றி வாய்ப்புகளைக் கொண்ட அதிபர் வேட்பாளர்களாக அவர்களை சில வியூக வகுப்பாளர்கள் கருதுகின்றனர்.

கமலா ஹாரிஸ், அமெரிக்கா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தில் கமலா ஹாரிஸ், டிரம்ப்

எல்லா வாய்ப்புகளுக்கும் தயாராக இருக்கிறேன்- ஹாரிஸ்

கமலா ஹாரிஸ், எந்த விதமான முடிவையும் எடுக்க அவசரம் காட்டவில்லை என்று கூறியுள்ளார். அவரின் ஆலோசகர்கள், ஆதரவாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி 20-ஆம் தேதி அன்று புதிய அதிபர் பதவியேற்ற பிறகு, அவருக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக நடந்தது குறித்து அவர் மதிப்பாய்வு செய்து வருகிறார். வெறும் 107 நாட்களில் அவர் வெள்ளை மாளிகைக்காக புதிய பிரசாரங்களை மேற்கொண்டார். துணை அதிபருக்கான வேட்பாளரை தேர்வு செய்ததுடன், கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தி, நாடு முழுவதும் பிரசாரத்திற்காக அவர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

“அவர் ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஆனால் அவர் ஓடிக் கொண்டிருக்கும் போதே ஒரு முடிவை எடுக்க இயலாது. அந்த ஓட்டத்தின் வேகம் குறைய வேண்டும். ஜனவரி 20-ஆம் தேதி வரை அவர் ஓடிக் கொண்டு தான் இருக்கப் போகிறார்,” என்று கூறுகிறார் ஹாரிஸின் பிரசாரத்திற்கு ஆலோசனை வழங்கிய டோனா ப்ரேசிலி.

“யாரையும் நீங்கள் ஒரு எல்லைக்குள் நிறுத்திவிட இயலாது. அல் கோரை அப்படி நிறுத்தவில்லை. அதே வேளையில், 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது,” என்றும் அவர் கூறுகிறார். ஜார்ஜ் புஷுக்கு எதிரான அல் கோரின் பிரசாரத்தை வலிநடத்தினார் ப்ரேசிலி.

தற்போது அல் கோர் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராக மாறியுள்ளதையும் ப்ரேசிலி குறிப்பிடுகிறார்.

“அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ஏனென்றால் மாற்றத்திற்கான தேவை இருக்கிறது. கமலா ஹாரிஸ் எதிர் வரும் காலத்தில் அந்த மாற்றமாக செயல்படுவார் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.

2028-ல், 60 வயதாகும் போது அவர் ஜோ பைடனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வாரா என்ற கேள்வி நிழல் போல தொடருகிறது. இந்த தேர்தல் பிரசாரத்தில் அவரால் அதனை வெற்றிகரமாக செய்ய இயலவில்லை.

ஹாரிஸின் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் நபர்கள், வயது குறித்த கவலைகள் தெரிவிக்கப்பட்ட பிறகும் கூட பைடன் மீண்டும் தேர்தலை சந்திக்க முடிவு செய்தது, சில மாதங்களுக்குப் பிறகு போட்டியில் இருந்து பின்வாங்கியது தான் ஹாரிஸின் வெற்றி வாய்ப்பை பறித்தது என்று நம்புகின்றனர்.

கமலா ஹாரிஸ், அமெரிக்கா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் பைடனுடன் கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் கூறுவது என்ன?

அதிபர் தேர்தலில் இருதரப்புக்கும் முக்கியமான, அதிக சவால்களை அளித்த 7 மாகாணங்களிலும் டிரம்ப் வெற்றியை உறுதி செய்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக அளவில் மக்களின் வாக்குகளைப் பெற்ற முதல் குடியரசுக் கட்சி வேட்பாளரானார். அவரின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்த வாக்கு வித்யாசமும் அதிகமாக இல்லை. கமலா ஹாரிஸ் 75 மில்லியன் வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த வாக்குகளை சுட்டிக்காட்டும் கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள், தற்போது மோசமான நிலையில் இருக்கும் ஜனநாயகக் கட்சியினை அடுத்த நான்கு ஆண்டுகளில் அவரால் கட்டி எழுப்ப முடியும் என்று நம்புகின்றனர்.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராவதற்கு 2019-ஆம் ஆண்டு கமலா ஹாரிஸ் மேற்கொண்ட பிரசாரத்தை விமர்சகர்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் ஒரே வருடத்தில் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

“2024-ஆம் ஆண்டு தேர்தலில் உண்மையாக மற்றொரு வேட்பாளர் இருந்திருந்தால் கமலா ஹாரிஸுக்கு இந்த வாய்ப்பே கிடைத்திருக்காது என்பதை மக்கள் மறந்துவிடுகின்றனர். அது அனைவருக்கும் தெரியும்,” என்று பைடனின் முன்னாள் ஆலோசகர் ஒருவர் கூறுகிறார்.

தன்னுடைய அடையாளத்தை கூற விரும்பாத அவர் மேற்கொண்டு பேசுகையில், கட்சியின் அடித்தளத்தை வலிமையாக்கியதற்காக கமலா ஹாரிஸை பாராட்டுகிறார். ஆனால் பொருளாதாரம், எல்லை பிரச்னை போன்ற முக்கியமான விவகாரங்களில் டிரம்பின் பரப்புரை வெற்றி பெற்றது என்கிறார் அவர்.

கமலா ஹாரிஸ், அமெரிக்கா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பொருளாதாரம், எல்லை பிரச்னை போன்ற முக்கியமான விவகாரங்களில் டிரம்பின் பரப்புரை வெற்றி பெற்றது

அரசியலில் இருந்து முழுமையாக விலகுவாரா கமலா ஹாரிஸ்?

பொருளாதாரம் போன்ற பல முக்கிய பிரச்னைகள் குறித்து கமலா ஹாரிஸ் பைடனை விட சிறப்பாக பிரசாரம் மேற்கொண்டார் என்று டிரம்பின் குழுவில் உள்ள தலைமை கருத்துக்கணிப்பாளர் உட்பட பலரும் தெரிவித்துள்ளனர்.

மிச்சிகன் ஆளுநர் க்ரெட்சென் விட்மெர், இல்லினாய்ஸ் ஆளுநர் ஜே.பி. ப்ரிட்ஸ்கெர் மற்றும் கலிஃபோர்னியா ஆளுநர் காவின் நியூசம் போன்று வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் காரணமாக, 2028-ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராவதற்கு கடுமையான போட்டி நிலவும்.

தேசிய அளவில் கிடைத்திருக்கும் அங்கீகாரம், அர்ப்பணிப்பு கொண்ட தன்னார்வலர்களைக் வைத்து, மற்ற நபர்களுக்கு முன்பே, தன்னுடைய பரப்புரையை கமலா ஹாரிஸ் துவங்குவார் என்று சில ஜனநாயகக் கட்சியினர் கூறுகின்றனர்.

“2026-ஆம் ஆண்டு இடைக்கால தேர்தலில் உதவி செய்ய வாருங்கள் என்று எந்த மாகாணத்தில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் தான் அவரை அழைக்காமல் இருக்கப் போகிறார்கள்? மீள் உருவாக்கம் செய்ய மட்டுல்ல, 2024-ஆம் ஆண்டு தேர்தலில் அவருக்கு ஆதரவு அளிக்க வந்த கூட்டணியையும் வலிமையாக்க அவருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன,” என்று பிரேசிலி கூறுகிறார்.

சிலர், கமலா ஹாரிஸ் அரசியலில் இருந்து வெளியேறி அறக்கட்டளை அல்லது அரசியல் நிறுவனம் ஒன்றை நடத்துவார் என்று கூறுகின்றனர். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அல்லது வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கறுப்பினத்தவர்களுக்கான கல்லூரியில் அவர் அந்த நிறுவனத்தை தொடங்கலாம் என்றும் கூறுகிறனர்.

முன்னாள் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய அவர் வெளியுறவுத்துறை செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடலாம் அல்லது அடுத்த ஜனநாயகக் கட்சி ஆட்சியில் அவர் அட்டர்னி ஜெனரல் பதவிக்கு போட்டியிடலாம். புத்தகம் எழுதுவது குறித்தும் அவர் தீர்மானிக்கலாம்.

இத்தனை வாய்ப்புகள் இருப்பினும், அவரின் நெருங்கிய வட்டத்தில் செயல்படும் நபர்களிடம் பேசிய கமலா ஹாரிஸ், கட்சியில் ஒரு தலைவராக அவர் பார்க்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

உள்நாட்டு விவகாரங்களில் இருந்து விலகி, அவருக்கு முக்கியமாக தோன்றும் சில விவகாரங்களில் சர்வதேச அளவில் பணியாற்றலாம். ஆனால் துணை அதிபர் என்பது போன்ற பெரிய பதவி இல்லாமல் அதனை நிகழ்த்துவது என்பது கடினமான ஒன்று என்றும் பலர் தெரிவிக்கின்றனர்.

கமலா ஹாரிஸ், அமெரிக்கா

பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock

படக்குறிப்பு, முன்னாள் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய அவர் வெளியுறவுத்துறை செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடலாம் என்று சிலர் கூறுகின்றனர்

சர்வதேச அரங்கில் பணியாற்ற திட்டமா?

கமலா ஹாரிஸ் பல முக்கியமான இடங்களுக்கு சர்வதேச பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக அவரின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள நபர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச அரங்கில் அவரது பங்களிப்பை உறுதி செய்வதற்கான சமிக்ஞையாக இது பார்க்கப்படுகிறது. பைடனின்’ நம்பர் 2′ என்ற அடையாளத்தையும் தாண்டி தனக்கான அடையாளத்தை உருவாக்க கமலா ஹாரிஸ் முயன்று வருகிறார்.

கமலா ஹாரிஸ் மற்றும் அவரின் அணியினருக்கு துக்கமும் மன உறுதியும் கலந்த வாரங்களாக கடந்த சில வாரங்கள் இருந்தன. பைடன் போட்டியில் இருந்து வெளியேறிய போது, ‘குழி தோண்டிக் கொள்ளும் போக்கு’ என்ற விமர்சனத்தை எதிர்த்து பிரசாரத்தை ஆரம்பித்தனர் கமலா ஹாரிஸின் பிரசார குழுவினர். மூன்று மாத முடிவில், தேர்தலில் தோல்வியே அடைந்திருந்தாலும் கூட, அவர்களின் வேட்பாளர் முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிக பிரபலம் அடைந்தார்.

இது ஒரு அமைதியை கொடுக்கிறது என்று ஒரு மூத்த உதவியாளர் கூறினார். தேர்தலைத் தொடர்ந்து, கமலா ஹாரிஸ், அவரது கணவர் டக் எம்ஹாஃப் மற்றும் அவரது குழுவினர் ஹவாயில் ஒரு வாரம் ஓய்வு எடுத்தனர். அங்கே கமலா ஹாரிஸின் எதிர்கால திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கிறிஸ்துமஸுக்கு முன் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடத்தப்பட்ட ஊழியர்களுக்கான விடுமுறை விருந்தின் போது, கமலா ​​ஹாரிஸ் தேர்தல் முடிவு வெளியான நாளின் இரவு எவ்வாறு இருந்தது என்றும், முடிவுகள் தெரிந்த பிறகு குடும்பத்தினருடன் எப்படி பேசினார் என்பதையும் விவரித்தார்.

“நாங்கள் ஒரு பரிதாபமான விருந்து நடத்தவில்லை!” என்று அவர் தெரிவித்தார்.

ஆலோசகர்களும் அவரின் நெருங்கிய வட்டத்தில் உள்ள நபர்களும், கமலா ஹாரிஸ் என்ன நடந்தது என்பதை இன்னும் ஆய்வு செய்து வருவதாக கூறுகின்றனர். புதிய அரசு எப்படி பதவி ஏற்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்த்த பிறகு தான், ‘டிரம்ப் ரெசிஸ்டன்ஸ்’ என்ற இயக்கத்தின் அடையாளமாக மாறுவது உள்ளிட்ட எந்த ஒரு முடிவையும் எடுக்க ஹாரிஸ் விரும்புவதாக அவர்கள் கூறுகின்றனர்.

2016-ஆம் ஆண்டு டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தாராளவாதிகள் மத்தியில் எழுந்த டிரம்ப் ரெசிஸ்டன்ஸ் என்ற எதிர்ப்பு இயக்கம், இன்றைய அரசியல் சூழலை எதிரொலிக்கவில்லை என்று ஜனநாயகக் கட்சியினர் கூறுகின்றனர். குடியரசுக் கட்சியினர் டிரம்பின் கருத்தும், அவரின் தோற்றமும் அமெரிக்காவின் பலதரப்பட்ட மக்களை அடைந்துள்ளது என்று கூறுகின்றனர்.

தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்து மிகவும் அமைதியாகவே இருக்கும் கமலா ஹாரிஸ், டிசம்பர் மாதம் மேரிலாந்தில் உள்ள பிரின்ஸ் ஜார்ஜ் சமூகக் கல்லூரியில் மாணவர்களுக்கான நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது அவர் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

“ஒரு வழக்கு தோல்விக்குப் பிறகு, ஒரு போராட்டத்திற்கு பிறகு, ஒரு தேர்தல் அவர்கள் நினைத்தது போல் வெற்றியை ஏற்படுத்தாத போது, மக்கள் நம்பிக்கை இழந்து சோர்வடைந்திருத்தால், சிவில் உரிமைகள், பெண்களின் உரிமைகள், தொழிலாளர்களின் உரிமைகளோடு, அமெரிக்காவும் கூட உருவாகியிருக்காது,” என்று அவர் கூறினார்.

2016 செனட் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவர் ஒவ்வொரு முறையும் கூறும், “நாம் அனைவரும், இந்த போராட்டத்தில் இருக்க வேண்டும்,” என்ற முழக்கத்தைக் கூறினார்.

கமலா ஹாரிஸ், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆளுநர் பதவிக்கு அவர் முயற்சிக்கலாம் என்று சிலர் கூறி வருகின்றனர்

அதன் அர்த்தம் என்னவென்று புரியவில்லை. சில நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு, ‘போராட்டத்தில் இருப்பது’ என்பது 2026-ஆம் ஆண்டுக்கான கலிஃபோர்னியா ஆளுநர் தேர்தலாக இருக்கலாம். தற்போது ஆளுநராக பதவி வகிக்கும் காவின் நியூசம் தன்னுடைய பதவியில் இருந்து விலகி, வெள்ளை மாளிகைக்கான போட்டியில் இறங்கலாம்.

கமலா ஹாரிஸுடன் பேசிய பலரும் ஆளுநர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறுகின்றனர். சிலரோ அவர் அரசியல் வாழ்க்கையில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று விவரித்துள்ளனர்.

அவர் மூன்று முறை கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாகவும் பின்னர் அமெரிக்க செனட்டராகவும் மாகாண அளவில் பதவிகளை வகித்துள்ளார். ஆனால் ஒரு ஆளுநர் பதவிக்கான வெற்றி என்பது நாட்டின் முதல் கறுப்பின பெண் ஆளுநர் என்ற வரலாற்று கௌரவத்தை அளிக்கும்.

இருப்பினும், 20 கார்கள் கொண்ட வாகன அணிவகுப்பில் துவங்கி, யுக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கியிடம் நேரில் பேசும் ஆளுமையாக இருந்த ஒருவர், ஆளுநர் மாளிகைக்கு செல்வது கடினம் என்று சிலர் கூறுகின்றனர்.

தனியார் துறை மற்றொரு வாய்ப்பாக இருக்கலாம்.

“தேர்தலில் தோல்வியடையும் போது, ​​​​சட்ட நிறுவனம் அல்லது காப்பீட்டு வணிகத்தில் தங்களை ஆண்கள் நிலைநிறுத்திக் கொள்கின்றனர். ஆனால் ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்காது. இதுபோன்ற இடங்களில் பணியாற்றும் ஆண்களுக்கு அது ஒரு வகையான வெற்றியை அளிக்கிறது. கொஞ்சம் பணம் சம்பாதித்துவிட்டு, அடுத்தது என்ன என்பது பற்றி முடிவெடுக்க இயலும்” என்று டெபி வால்ஷ் கூறினார். ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க பெண்கள் மற்றும் அரசியல் மையத்தின் இயக்குநராக அவர் செயல்பட்டு வருகிறார்.

“கமலா ஹாரிஸுக்கு அது ஒரு பிரச்னையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர் விரும்பினால் அவருக்கான கதவுகள் திறக்கப்படும் என்று நான் நினைக்கிறேன்” என்றும் அவர் கூறினார்.

ஆனால் இருபது ஆண்டுகளாக அரசியல் தளத்தில் பணியாற்றிய அவர், அதற்கு முன் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். ஆளுநர் பணி மிகவும் பொருத்தமான தேர்வாக இருக்கலாம்.

“உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு ஒரே ஒரு வாடிக்கையாளார் தான். அது மக்கள்,” என்ற கமலா ஹாரிஸின் பிரபலமான வாசகத்தை மேற்கோள் காட்டி பேசிய முன்னாள் ஆலோசகர் ஒருவர், “நீங்கள் இங்கிருந்து எங்கு செல்கிறீர்கள்?” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.