ஆட்சியில் அதிக உறுப்பினர் இருந்தால் அரசு விரைவாக கவிழ்ந்துவிடும்! பனங்காட்டான்

by smngrx01


‘2020 தேர்தலின்போது எங்கள் கட்சி மூன்றிலிரண்டு பங்கு பெறப்போகிறதா என்று தேர்தல் ஆணையாளர் என்னிடம் கேட்டார். 150 இடங்களுக்குப் பதிலாக

130 – 135 இடங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறினேன். ஏனெனில், முழுமையான அதிகாரம் வேறு பல பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்லும். அதிகப்படியான அதிகாரக் குவிப்பு ஓர் ஆட்சிக்கு ஒருபோதும் உதவாது” – பசில் ராஜபக்ச (மார்ச் 21, 2024)

இலங்கையின் மூத்த சிங்கள அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இரண்டாகப் பிளவுபட்டு ரணில் தலைமை, சஜித் தலைமை என்று சிதறுண்டு ஆட்சியைக் கைப்பற்ற முடியாத நிலையில் தள்ளாடுகின்றன. 

இலங்கையின் இரண்டாவது சிங்களக் கட்சியாக உருவாகி, நெடுங்காலம் ஆட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் தக்க வைத்திருந்த சுதந்திரக் கட்சியும் இரண்டாகி, மகிந்த தலைமையில் உருவான பொதுஜன பெரமுன படுதோல்வி கண்டு எழும்ப முடியாத நிலையிலுள்ளது. 

கோதபாயவின் ஜனாதிபதி பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நியமனமான ரணில் விக்கிரமசிங்க, கடந்த வருட முற்பகுதியில் பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து தம்முடன் சேர்ந்து இயங்கியவர்களை இணைத்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கினர். 

அவ்வேளையில் சஜித் பிரேமதாச பலமான அணியாக இருந்ததால் ரணிலுடன் இணைந்து செயற்பட சம்மதிக்கவில்லை. நாடாளுமன்றில் பலமான எதிர்க்கட்சியாக தாங்கள் இருப்பதால் இரு கட்சி இணைப்பில் தலைமைப் பதவியை சஜித் கோரியதால் அவருடனான இணைப்பு முயற்சி முடிவடைந்தது. மறுதரப்பில் பொதுஜன பெரமுனவுக்கு பிராணவாயு ஏற்றி அதனை எழுப்புவதற்கு மகிந்த குடும்ப வாரிசான நாமல் ராஜபக்ச எடுத்த முயற்சியும் தோற்றுப்போனது. 

இலங்கையின் இரண்டாவது பிரதமர் டட்லி சேனநாயக்கவின் மறைவுக்குப் பின்னர் அவரது வாரிசு அரசியல்வாதியாக ஐக்கிய தேசிய கட்சியைக் கைப்பற்ற முனைந்த அவரது பெறாமகன் ருக்மன் சேனநாயக்க அடுத்த சில வருடங்களில் அநாமதேயமானது ஒரு வரலாறு. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும், சிங்கள மாற்று அரசியலின் தலைவருமான முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் அகால மறைவுக்குப் பின்னர் அவரின் அரசியல் வாரிசாக அறிமுகமான அநுரா பண்டாரநாயக்கவின் அரசியல் எதிர்காலமும் ருக்மன் சேனநாயக்க போன்று சூனியமானது. 

இலங்கைக் குடியரசின் முதலாவது ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் குடும்ப வாரிசாக ஐக்கிய தேசிய கட்சியைப் பொறுப்பேற்ற அவரது பெறாமகன் ரணில் விக்கிரமசிங்க எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றிபெற முடியாமற் போனது மற்றொரு வரலாறு. 

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்த சஜித் பிரேமதாச இதுவரை வெற்றியாளராக அரசியலில் பரிணமிக்கவில்லை. முன்னாள் பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரேமதாசவின் புதல்வர் என்ற ஒன்றைத் தவிர இவரது ஆளுமை பற்றிக் கூற வேறொன்றுமில்லை. 

1970ல் வயதில் மிகக்குறைந்த எம்.பியாக அரசியலில் நுழைந்து, இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகத் தெரிவாகி, தமது தாய்க்கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியை பிளந்து பொதுஜன பெரமுனவை பிரசவித்த மகிந்த ராஜபக்சவின் அரசியல் வாரிசாக கடந்த வருட இரண்டு தேர்தல்களிலும் நாமல் ராஜபக்ச தம்மை நிரூபிக்கவில்லை. 

இலங்கையின் அரசியல் முதலைகள் என்று காணப்பட்ட குடும்பங்கள் சீரழிந்த தேய்காலத்தை தங்களுக்கான வெற்றிக் காலமாக்கிய ஜே.வி.பி.யின் மறுவார்ப்பான தேசிய மக்கள் சக்தி, கடந்த வருட இரண்டு தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடி உலகை ஒரு தடவை தம்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதனால் இலங்கையின் யுகபுருசராக அநுர குமார திஸ்ஸநாயக்க இன்று வெளிநாடுகளுக்கு பயணம் செய்கிறார். 

கடந்த பொதுத்தேர்தலின்போது அறுதிப் பெரும்பான்மையை (113 ஆசனங்கள்) மட்டுமே அநுர குமார அணி எதிர்பார்த்தது. தேர்தல் காலத்தில் உறுதியளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கம், சர்வ அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம், மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்துவது என்று வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றாது தப்புவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை (151 ஆசனங்கள்) தங்களுக்குக் கிடைக்கவில்லையென்று கூறி அதனைச் சாட்டாக வைத்து தேர்தல் வாக்குறுதிகளை தள்ளிவிடலாமென எதிர்பார்த்தவர்களுக்கு கிடைத்த எதிர்பாராத (விரும்பாத) வெற்றி இன்று பல நெருக்கடிகளை உருவாக்கி வருகிறது. 

அரசியலில் அதீத பெரும்பான்மை என்பது எப்போதும் ஆபத்தானது என்பது வரலாறு கற்றுத் தந்துள்ள பெரிய பாடம். கடந்த காலங்களில் சிறீமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, கோதபாய ராஜபக்ச ஆகியோரின் கட்சிகள் தனித்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது போனதற்கு அவர்களுக்குக் கிடைத்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையே காரணம். 

எதனால் இவ்வாறு சரிவு நிலை ஏற்பட்டது என்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச கோதபாயவின் பரிதாப முடிவுக்குப் பின்னர் கொழும்பு டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்த கருத்து சகல அரசியல் கட்சிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. ‘தேர்தலில் நாங்கள் அறுதிப் பெரும்பான்மையை பெற்றது இறுதியில் சாபக்கேடாக மாறியது” என்று இந்தச் செவ்வியில் பசில் ராஜபக்ச துணிந்து கூறியுள்ளார். 

‘எப்போதாவது ஓர் அரசுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் அது எதிர்பார்;ப்பதைவிட விரைவாக கவிழ்ந்துவிடும். ஓர் அரசுக்கு அதிக உறுப்பினர்கள் (எம்.பிக்கள்) இருந்தால் அதனால் அரசுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும்” என்று அவர் தெரிவித்த கருத்து முன்னைய நாட்களில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்ற அரசுகள் மீளவும் ஆட்சிக் கட்டிலில் ஏற முடியாது போன காரணத்தைக் கூறுகிறது. 

இதற்கு அடிப்படையானது ஊழல் என்று கூறுகிறார் பத்து வீதம் (கமி~ன்) என்று பட்டப்பெயர் பெற்ற பசில் ராஜபக்ச. தங்கள் கட்சிக்கு அப்போது மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்ததால் ஏற்பட்ட நெருக்கடி பற்றி அதே செவ்வியில் அவர் பின்வருமாறு கூறியிருந்தார்: ‘2020 தேர்தலின்போது எங்கள் கட்சி மூன்றிலிரண்டு பங்கு பெறப்போகிறதா என்று தேர்தல் ஆணையாளர் என்னிடம் கேட்டார். 150 இடங்களுக்குப் பதிலாக 130 – 135 இடங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறினேன். ஏனெனில், முழுமையான அதிகாரம் வேறு பல பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்லும். அதிகப்படியான அதிகாரக் குவிப்பு ஓர் ஆட்சிக்கு ஒருபோதும் உதவாது” என்பது இவரது பதிலாக இருந்தது. 

கடந்த வருட பொதுத்தேர்தலில் அநுர குமார தரப்பும் பசில் தெரிவித்ததுபோன்று மூன்றிலிரண்டு பெரும்பான்மையை விரும்பவில்லை. ஆனால், ஆட்சி மாற்றத்தை விரும்பிய மகாஜனங்கள் விரும்பாத அந்த வெற்றியை தங்கள் வாக்குகளால் கொடுத்துவிட்டனர். அநுராவின் முதல் நூறு நாட்களை எண்ணி முடிப்பதற்குள்ளேயே இலைமறை காயாக பல நெருக்கடிகள் உருவாகியுள்ளன. படைத்துறை பிரதானிகள் மாற்றம், நீதித்துறையிலும் காவற்துறையிலும் அதிரடி மாற்றம், ஊழல் ஒழிப்பு நடவடிக்கை, அதிகார து~;பிரயோகம் சம்பந்தமான துரித விசாரணைகள் என்று ஒருபுறம் வேகம் காட்டப்பட்டாலும் நாளாந்தம் புதுப்பிரச்சனைகளை எதிர்கொள்ள நேருகிறது. 

முடிந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம் என்று முழக்கமிட்ட நாமல் ராஜபக்ச இப்போது சுருதி மாறி அரசியல் பழிவாங்கலுக்கு அநுர அரசு முயற்சிக்கிறது என்று குழறுகின்றார். வெளித்தோற்றத்தில் புதிய அரசு துரிதமாகவும், திறமையாகவும் செயற்படுவதாக படம் காட்டப்படுகிறது. அயல் உறவை மேம்படுத்த இந்தியாவுக்குப் பயணம், மாக்சிச கொள்கை ரீதியான நட்புறவை இறுக்கமாக்க சீனாவுக்குப் பயணம். முன்னைய ஆட்சிக் காலங்களில் இலங்கைக்கு வழங்கிய முழுக்கடனையும் இப்போது இலங்கைக்கான அன்பளிப்பாக மாற்றியுள்ளது இந்தியா. விட்டேனா நான் என்ற பாணியில் இலங்கைக்கு சீனா 3.7 பில்லியன் டாலரை அரவாயடநநனயயமய கொடுத்துள்ளது. அத்துடன் இலங்கை அரசின் திட்டங்களுக்கு தனது முழு ஆதரவையும் சீனா உறுதியளித்துள்ளது. சீனாவின் புகழீட்டிய வணிக உற்பத்தி நிலையங்கள் இலங்கையில் முதலீடு செய்ய கரிசனை தெரிவித்துள்ளன. 

ஏற்கனவே இந்தியப் பிரதமர் மோடியை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்த அநுர, சீன ஜனாதிபதியையும் வருகை தருமாறு அழைத்துள்ளார். இரு நாடுகளும் இலங்கைக்கு புதியவையல்ல. பம்பாய் வெங்காயம், மைசூர் பருப்பு, கா~;மீர் சேலை என்று இந்திய  நகரங்களின் பெயர்களிலான பொருட்களுக்கு இலங்கையில் எப்போதுமே கிராக்கி. பல வருடங்களாக இலங்கை மக்களுக்கு கூப்பன் கடைகளில் வழங்கப்பட்ட வெள்ளைப் பச்சை அரிசி சீனாவை நினைவூட்டுவது. இலங்கையின் செய்து கொண்ட பண்டமாற்று ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையிலிருந்து றப்பர்களை இறக்குமதி செய்து, அதிலிருந்து உருவாக்கப்படும் வாகன ரயர்கள், றப்பர் பந்துகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்து ருசி கண்ட நாடு சீனா. 

இந்து சமுத்திர பிராந்தியத்தில் கேந்திர நிலையமாக இலங்கை விளங்குவதால் இரு நாடுகளுக்கும் இந்தியாவின் மீது எப்போதுமே அபார விருப்பம். இதனால் இரு நாடுகளும் நீயா நானா என்று இலங்கைக்கு உதவுவதில் போட்டியிடுமானால் அநுரவின் ஆட்சிக் காலத்தில் இடமும் வலமுமாக இவர்களே அமர்ந்து கொள்வார்கள்.

இப்போது அரசியல் தேனிலவை அனுபவித்து வரும் தேசிய மக்கள் சக்தி, தங்கள் சக்திக்கு உட்பட்டதும் அப்பால் உள்ளதுமான உலக நாடுகளின் உதவியால் நாட்டை பொருளாதார தோல்வியிலிருந்து மீட்க முனைகிறது. இதுவே பெரும்பான்மை அரசு எப்போதும் எதிர்பார்க்கும் பிரச்சனைகளுக்கு காரணமாகி விடுமோ எனவும் எச்சரிக்கை மணி அடிக்கிறது. 

தமிழர் தரப்பும் இவ்வாறான நிலையில்தான் காணப்படுகிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவான பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் பேரெழுச்சி கண்ட காலம் இப்பொழுது வீழ்ச்சிக் காலமாக மாறிவருகிறது. தமிழர் தாயக தேர்தலில் 22 ஆசனங்களை வெற்றி கண்ட கூட்டமைப்பு இன்று தமிழரசுக் கட்சி என்ற பெயரில் 8 என்ற எண்ணிக்கைக்கு இறங்கியுள்ளது. தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உள்ளக முரண்பாடு இதன் எதிர்காலத்தை பெரும் கேள்விக்குறிக்கு முன்னால் நிறுத்துகிறது. கட்சியின் புனரமைப்பு, களைபிடுங்கல் என்ற பெயரில் தனிப்பட்ட கோபம் தீர்க்கும் இலக்கோடு முக்கியமானவர்களை இடைநிறுத்துவது, பதவி இறக்குவது, கட்சியிலிருந்து நீக்குவது வேகப்படுத்தப்படுகிறது. 

நீதிமன்ற வழக்கின் தீர்ப்புகள் கிடைப்பதற்கு முன்னராக, நீண்ட காலம் இனவிடுதலைக்காகவும் கட்சியின் மீட்சிக்காகவும் உழைத்த தலைகளை பதம் பார்ப்பது கச்சிதமாக இடம்பெறுகிறது. ஒட்டகத்தின் வாலில் தொங்கிக் கொண்டிருப்பவர்களே தமிழரசுக் கட்சியின் எச்சங்களாக அங்குமிங்கும் எஞ்சியிருப்பர் போல் தெரிகிறது. பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் காலத்தில் கட்சி நாசமாக்கப்பட்டு விடலாமென்பதே பலரதும் இன்றைய அச்சம். 

தொடர்புடைய செய்திகள்