விண்வெளியில் இருந்து எரிந்தபடி விழுந்த ‘ராட்சத வளையம்’ – எங்கிருந்து வந்தது?

முக்குகு, கென்யா, ராட்சத வளையம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “வெடிகுண்டு போன்ற சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன்.”
  • எழுதியவர், வைஹிகா முவௌரா
  • பதவி, பிபிசி செய்தியாளர்

ஆப்ரிக்க நாடான கென்யாவில் சமீபத்தில் ஒரு பிற்பகலில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கிராமவாசிகளை ஒரு சீறும் பெரிய சத்தம் திடுக்கிட வைத்தது.

“வெடிகுண்டு போன்ற சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன். அது வெடிகுண்டுகளா என்று யோசித்து, சுற்றிலும் பார்க்க ஆரம்பித்தேன்,” என்று மகுவேனி பகுதியின் முக்குகு கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான விவசாயி ஸ்டீபன் மங்கோகா, பிபிசியிடம் தெரிவித்தார்.

“புகை வருகிறதா என்று வானத்தைப் பார்த்தேன்.ஆனால் ஒன்றுமில்லை” என்று கூறி தொடர்ந்த விவசாயி ஸ்டீபன், “விபத்து நடந்ததா என்று பார்க்க நான் சாலைக்கு விரைந்தேன். அப்போதும் , ஒன்றுமில்லை. அப்போதுதான் வானத்திலிருந்து ஏதோ விழுந்ததாக ஒருவர் என்னிடம் கூறினார்.” என்கிறார்.

ஒரு பெரிய, உருண்டையான உலோகப் பொருள் வானத்திலிருந்து விழுந்து, வறண்ட ஆற்றங்கரைக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் இறங்கியது. அது மிகவும் சூடாக இருந்தது.

முக்குகு, கென்யா, ராட்சத வளையம்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இரவு முழுவதும் காவல் காத்த கிராம மக்கள்

“அடர் சிவப்பு நிறத்தில் இருந்த ஒரு பெரிய உலோகத் துண்டை நாங்கள் கண்டுபிடித்தோம், அது மிகவும் சூடாக இருந்ததால், அது குளிர்ச்சியடையும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது,” என்று அப்பொருள் விழுந்த நிலத்தின் உரிமையாளரான ஆன் கனுனா கூறினார்.

அந்த ராட்சத வளையம் குளிர்ந்து சாம்பல் நிறமாக மாற சுமார் இரண்டு மணி நேரம் ஆனது. ஆனால் மக்கள் அதைப் பார்க்க வருவதால் அது ஏற்கனவே பரபரப்புக்குரியதாக மாறிவிட்டது.

புத்தாண்டுக்கு இரண்டு நாட்கள் முன்பு இது நடந்ததாலும், சிலர் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்ததாலும், அந்த திங்கட்கிழமை மதியம் ராட்சத உலோக வளையத்தைப் பார்ப்பதற்காக மக்கள் கூட்டமாக திரண்டனர்.

அது செல்ஃபி எடுத்துக்கொள்ளும் இடம் போல இருந்தது. அதன் அருகில் புகைப்படம் எடுத்துக்கொள்ள அதிகமானோர் அங்கு வந்தார்கள். அதைத் தொடர்ந்து அப்பொருள் என்னவாக இருக்கும் என்பது பற்றிய பெரிய விவாதங்கள் அங்கு நடந்தன.

தலைநகர் நைரோபிக்கு தென்கிழக்கே 115 கிமீ (70 மைல்) தொலைவில் உள்ள மகுவேனி பகுதியில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

கென்யா விண்வெளி நிறுவனம் (கேஎஸ்ஏ) அதைக் கேள்விப்பட்டு மறுநாள் வந்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்தது.

ஆனால் அப்பொருள் ஒரே இரவில் திருடப்பட்டுவிடும் என்று முக்குகு கிராம மக்கள் அஞ்சும் அளவுக்கு அதன் புகழ் பரவத் தொடங்கியது.

உள்ளூர் அதிகாரிகளுடன் சேர்ந்து, கிராம மக்களில் சிலர் மாறிமாறி காவலுக்கு நின்றனர். உலோகப் பொருள் விற்பனையாளர்கள் மற்றும் அதில் இருந்து லாபம் பெற விரும்பும் மற்றவர்களைத் தடுப்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.

அப்பொருள் 500 கிலோவிற்கும் (1,102 எல்பி) அதிகமான எடை கொண்டதாக இருந்தது என்று கூறப்படுகிறது. இது சுமார் 2.5 மீட்டர் (8 அடி) சுற்றளவு கொண்டது. தோராயமாக நான்கு இருக்கைகள் கொண்ட குழந்தைகள் ராட்டினத்தின் அளவுக்கு அது இருந்தது.

முக்குகு, கென்யா, ராட்சத வளையம்

பட மூலாதாரம், Peter Njoroge / BBC

படக்குறிப்பு, மக்கள் தொடர்ந்து வருகை புரிந்ததால் அந்த இடமே ஏற்கனவே பரபரப்புக்குரியதாக மாறிவிட்டது

கதிர்வீச்சு குறித்து மக்கள் கவலை

புத்தாண்டு தினத்தன்று, பகலில் அதிகமான மக்கள் அங்கு வந்தனர். அதைத் தொடர்ந்து அப்பொருளை ஆய்வு செய்ய கென்யா விண்வெளி நிறுவனம் மற்றும் ஊடகங்கள் வருகை தந்தன.

முக்குகு கிராமம் இதுபோன்ற நிகழ்வை இதற்கு முன்பு கண்டதில்லை. அந்த நாளின் பிற்பகுதியில் கென்ய விண்வெளி நிறுவனத்தின் ஆய்வுக் குழு அந்த பொருளை அகற்றிய போது, கிராம மக்கள் மத்தியில் அப்பொருள் என்னவாக இருக்கும் என்ற சலசலப்பு ஏற்பட்டது.

கென்ய விண்வெளி நிறுவனத்தின் முதல் கட்ட ஆய்வில், ராக்கெட்டின் ஒரு பாகம் அது என்று தெரியவந்தது.

“அத்தகைய பொருட்கள் பொதுவாக பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது எரியும் வகையிலோ அல்லது மக்கள் வசிக்காத பெருங்கடலில் விழும் வகையிலோ வடிவமைக்கப்படும்” என்று அதன் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சலசலப்பை ஏற்படுத்திய அப்பொருள் அங்கு விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் விபத்தின் தாக்கத்தால் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்ததாக முக்குகு கிராம மக்கள் சிலர் புகார் கூற ஆரம்பித்தனர்.

விபத்து நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் கிறிஸ்டின் கியோங்கா, தனது வளாகத்தில் உள்ள சில கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறினார்.

அப்பகுதியில் உள்ள மற்ற வீடுகளின் உரிமையாளர்கள், தங்கள் வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அக்குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

“அரசாங்கம் இந்தப் பொருளின் உரிமையாளர்களைக் கண்டுபிடித்து, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று முக்குகு கிராமத்தில் வசிக்கும் பென்சன் முடுகு, பிபிசியிடம் தெரிவித்தார்.

உலோக வளையம் அங்கு விழுந்ததற்குப் பிறகு உடல்நிலை சரியில்லாமல் போனதாக, அங்கு வசிக்கும் சிலர் புகார் செய்யத் தொடங்கியதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வந்தன.

ஆனால் பிபிசி கள ஆய்வுக்குச் சென்ற போது பேசியவர்களிடமிருந்தோ, அதிகாரிகளிடமிருந்தோ அல்லது கென்ய விண்வெளி நிறுவனத்திடமிருந்தோ இத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இருந்த போதிலும், விண்வெளி கதிர்வீச்சின் காரணமாக ஏற்படும் நீண்டகால விளைவுகள் குறித்து கவலை எழுந்துள்ளதாக முடுகு கூறினார்.

“இந்த விண்வெளிப் பொருளால் எதிர்கால சந்ததியினரைக் கூட பாதிக்கும் அளவிற்கு கதிர்வீச்சின் விளைவுகள் ஏற்படுவதாக, இதுபோன்ற பிற சம்பவங்களில் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் இப்பகுதியில் அச்சம் நிலவுகிறது” என்றுமுடுகு கவலை தெரிவித்தார்.

இருப்பினும், கென்ய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் பின்னர் நடத்திய சோதனைகளின் மூலம், உலோக வளையத்தில் கதிர்வீச்சு இருந்தாலும், அது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு இல்லை என்று தெரியவந்தது.

முக்குகு, கென்யா, ராட்சத வளையம்

பட மூலாதாரம், Peter Njoroge / BBC

படக்குறிப்பு, உலோக வளையத்தில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு கதிர்வீச்சு இல்லை

“ராக்கெட்டை ஏவிய நாடே பொறுப்பேற்க வேண்டும்”

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும், 2017 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, பொறியாளர்கள் அமைப்பான கென்ய விண்வெளி நிறுவனம், இந்தப் பொருளைப் பற்றி மேலும் அறிய மற்ற சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்த பொருள் பூமியில் விழுந்ததில் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படாதது ஒரு நல்ல செய்தி என்று கென்ய விண்வெளி நிறுவனத்தின் இயக்குநர் கூறினார்.

“ஒரு விண்வெளிப் பொருளால் ஏற்படும் சேதம் அல்லது காயத்திற்கும், அதன் விளைவுகளைச் சமாளிப்பதற்கான பொறுப்பும், அதனை ஏவிய நாட்டிற்கே உள்ளது” என்று பிரிகேடியர் ஹிலாரி கிப்கோஸ்கே பிபிசியிடம் விளக்கினார்.

விண்வெளி விவகாரங்களுக்கான ஐ.நா அலுவலகம் உறுதிப்படுத்தும் விண்வெளி ஒப்பந்தம், “தங்கள் விண்வெளிப் பொருட்களால் ஏற்படும் எந்தவொரு சேதத்திற்கும் அந்தந்த நாடுகளே பொறுப்பு” என்று கூறுகிறது.

“பல ராக்கெட்டுகள் மற்றும் விண்வெளிப் பொருட்களில் காணப்படும் பொதுவான கூறுதான் அந்த வளையம். அதனால் இது எந்த ராக்கெட் அல்லது விண்வெளிப் பொருளிலிருந்து வந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது சவாலாக உள்ளது. ஆனாலும், எங்களிடம் அதனைக் கண்டறிய சில வழிகள் உள்ளன. ஆய்வு இன்னும் முடிவடையவில்லை”என்றும் பிரிகேடியர் கிப்கோஸ்கே விளக்கினார்.

நிபுணர்களின் கருத்துகளைப் பெற பிரிட்டன் விண்வெளி நிறுவனத்திடம் அந்த வளையத்தின் படங்களை பிபிசி காட்டியது.

முக்குகு, கென்யா, ராட்சத வளையம்

பட மூலாதாரம், Peter Njoroge / BBC

படக்குறிப்பு, தங்கள் விண்வெளிப் பொருட்களால் ஏற்படும் எந்தவொரு சேதத்திற்கும் அந்தந்த நாடுகளே பொறுப்பு

ராட்சத வளையம் எங்கிருந்து வந்தது?

அது, “2008-ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஏரியன் ராக்கெட்டின் மேல் அடுக்கில் இருந்த வளையமாக இருக்கலாம்” என்று அந்த திட்டத்தின் இயக்குநரான மாட் ஆர்ச்சர் கூறினார்.

“செயற்கைக்கோள்கள் நன்றாக இயங்குகின்றன. ஆனால் ராக்கெட்டின் பாகங்கள் சுற்றுப்பாதையில் இருந்து விலகிவிட்டன.”என்று அவர் தெரிவித்தார்.

ஐரோப்பாவின் முக்கிய ராக்கெட்டாக ஏரியன் செயல்பட்டது. 2023-ஆம் பயன்பாட்டில் இருந்து விலக்கிக் கொள்ளப்படுவதற்கு முன்பு வரை 230 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்த ஏரியன் உதவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்குகு கிராமத்தில் எதிர்பாராத விதமாகத் விழுவதற்கு முன், இந்த வளையம் 16 ஆண்டுகளாக பூமியைச் சுற்றி வந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் விண்வெளிக் குப்பைகள் தோன்றுவது இது முதல் முறை அல்ல என்பதும் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு உகாண்டாவில் உள்ள பல கிராமங்களில் சில சந்தேகத்திற்குரிய விண்வெளி ஆராய்ச்சி இயந்திரங்களின் உதிரி பாகங்கள் விழுந்தன.

சில நாட்களுக்கு முன்பு, ஜனவரி 8 ஆம் தேதி, வடக்கு கென்யா மற்றும் தெற்கு எத்தியோப்பியாவிற்கு மேலே உள்ள வானங்களில் விண்வெளிக் கழிவுகள் பிரகாசமாக எரிகின்றன என்று கருதப்பட்ட, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சில உள்ளன.

விண்வெளித் துறை வளரும் போது, இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கும் இப்பொருட்கள் குறித்து சிறப்பாகக் கண்டறிய ஆப்பிரிக்க அரசாங்கங்கள் பல்வேறு வழிகளில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

தற்போது சுற்றுப்பாதையில் 6,000 டன்களுக்கும் அதிகமான விண்வெளி ஆராய்ச்சி இயந்திரங்களின் குப்பைகள் இருப்பதாக நாசா மதிப்பிட்டுள்ளது.

இதுபோன்ற விண்வெளி கழிவுகள் ஒரு நபரைத் தாக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு, பெரும்பாலான மதிப்பீடுகள் 10,000 பேரில் ஒருவர் என்ற அளவில் உள்ளது.

இதுபோன்ற புள்ளிவிவரங்கள் முக்குகு கிராம மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கின்றன. ஏனென்றால் அந்த வளையம் விவசாய நிலத்திற்குப் பதிலாக கிராமத்தின் மையத்தில் தரையிறங்கியிருந்தால் என்ன சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அவர்களால் யோசிக்கக் கூட முடியாது.

“இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காது என்பதற்கு அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு உத்தரவாதம் தேவை” என்று முடுகு கோரிக்கை வைக்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.