by adminDev

யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலின் அமைச்சரவையும் அனுமதி

காசா யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு அனுமதி வழங்கலாம் என தெரிவித்திருந்த நிலையில் இஸ்ரேலின் அமைச்சரவையும் உடன்படிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இஸ்ரேலிய நேரப்படி நள்ளிரவு வரை தொடர்ந்த கடும் விவாதங்கள் கருத்துபரிமாற்றங்களின் பின்னர் அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இரண்டு வலதுசாரி அமைச்சர்கள் ஹமாசுடன் உடன்படிக்கை செய்துகொள்வதை கடுமையாக எதிர்த்துள்ளனர்.

ஒருமாதகாலமாக கட்டாரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் யுத்த நிறுத்தம் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை குறித்த விபரங்கள் வெளியாகாத போதிலும்,ஆறுவார கால  ஆரம்பகட்ட யுத்தநிறுத்தத்திற்கு இரு தரப்பும் இணங்கியுள்ளதாகவும்,இதன்போது இஸ்ரேலிய படையினர் படிப்படியாக காசாவிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுவார்கள் என இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இக்காலப்பகுதியில் ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் இஸ்ரேலிய சிறையில் உள்ள பாலஸ்தீனிய கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளன.

இக்காலப்பகுதியில் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்,எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹமாசிடம் பணயக்கைதிகளாக உள்ள 50வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களும் மற்றும் சிறுவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளனர் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யுத்தநிறுத்தத்தின் 16 வது நாள் இரண்டாவது கட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும்,இதன்போது அனைத்து பணயக்கைதிகளையும் விடுதலை செய்வது , நிரந்தர யுத்த நிறுத்தம்,இஸ்ரேலிய படையினரை காசாவிலிருந்து முற்றாக விலக்கிக்கொள்வது குறித்து ஆராயப்படும்

`

தொடர்புடைய செய்திகள்