திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்க நீண்டகால தீர்வு காண முயற்சி: கனிமொழி “திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்க வல்லுநர்களைக் கொண்டு நீண்ட கால தீர்வுக காண்பதற்காகத் தான் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது” என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கனிமொழி எம்.பி. ஆகியோர் நேரில் பார்வையிட்டு இன்று (ஜன.18) ஆய்வு செய்தனர்.
பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூர் முருகன் கோயிலை ஒட்டியுள்ள கடற்கரையில் தொடர்ந்து கால நிலை மாற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வரும் நிலையில், கடல் அரிப்பு அச்சுறுத்தலையும், கடலோரங்களின் கரைப்பகுதி குறைந்து கொண்டே வருவதையும், அமைச்சர்கள், துறை சார்ந்த உயர் அலுவலர்கள் ஆய்வு செய்தோம்.
இதற்கு நிரந்தரமான ஒரு தீர்வை உருவாக்கி தர வேண்டும். அந்தவகையில், இந்தாண்டு நடைபெறவுள்ள இத்திருக்கோயிலின் கும்பாபிஷேகத்துக்கு முன்பாக அதற்கான பணிகளை விரைந்து முடிப்பதற்கு துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் ஐஐடி வல்லுநர்களை கொண்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அதனை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசித்து தேவையான நிதி ஒதுக்கீடு பெற்று கடல் அரிப்பை தடுப்பதற்கான நிரந்தர தீர்வை முதல்வர் அறிவிப்பார்.
கரை ஒதுங்கிய சிற்பங்கள் வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களாக இருந்தால் நிச்சயமாக அவற்றை பாதுகாப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கடல் அரிப்பு என்பது தமிழகத்தில் மட்டும் நடக்கவில்லை. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய கடற்கரை பகுதிகளில் மண் அரிப்பு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இது அனைத்து இடங்களிலும் நடந்து கொண்டிருக்க கூடிய பிரச்சினைதான். இதற்கான தீர்வை அனைத்து இடங்களிலும் எந்த அரசாலும் உருவாக்க முடியாது.
மிக அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய இடங்களை கண்டறிந்து அவற்றை பாதுகாக்க முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். நீண்ட கால தீர்வுகளுக்காகத் தான் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. திமுக அரசு போல் காலநிலை மாற்றத்தையும் அதனால் வரக்கூடிய விளைவுகளையும் புரிந்து கொண்டு செயல்படக்கூடிய ஆட்சி வேற எதுவும் இருக்க முடியாது. திருச்செந்தூர் புறவழிச்சாலை பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு கும்பாபிஷேகத்துக்கு முன்பாக தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியர், க.இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திருக்கோயில் இணை ஆணையர் எஸ்.ஞானசேகரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.