by smngrx01

பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் வியட்நாம் தமிழ் சங்கம் இணைந்து நடத்தும் உலகத் தமிழர் மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 21, 22ஆம் திகதிகளில் வியட்நாம் டனாங் நகரில் நடைபெறவுள்ளது.

இம்முறை தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையிலும்  உலகத் தமிழர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் களியபெருமாள் திருத்தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

முதலாவது உலகத் தமிழர் மாநாடு 2018ஆம் ஆண்டு கம்போடியாவில் உள்ள சியாம் ரீப் நகரில் வெற்றிகரமாக நடைபெற்றிருந்தது. இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலகத் தமிழர் மாநாடு தமிழர்களின் பண்பாட்டோடும் வரலாற்றோடும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட வியட்நாம் டனாங் நகரில் நடைபெறவுள்ளது.

உலகத் தமிழர்களின் சிறப்பு மிக்க ஒன்றுகூடலாக அமையவுள்ள அம்மாநாட்டில் சுமார் 40 நாடுகளில் இருந்து வரலாற்று ஆசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், அரசியல் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் பெப்ரவரி 22ஆம் திகதி சனிக்கிழமை உலகத் தமிழர் வணிக மாநாடும் நடைபெறவுள்ளது.

உலகத் தமிழர்கள் தங்களுக்குள் வணிகத் தொடர்புகளை மேற்கொள்ள இந்த மாநாடு சிறந்த வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ் மரபுடன் ஒன்றிணைந்ததும் பண்டைய அரசர்களின் காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க நகராக வியட்நாம் உள்ளது. ஆகையால், தமிழ் பாரம்பரியத்தையும் கலாசாரங்களையும் தற்போது இந்நகரில் காணலாம்.

கடற்கரை ஓரங்களில் நிமிர்ந்து நிற்கும் சைவ, வைணவ கோயில்கள் தமிழர் மரபை இன்றும் எடுத்துரைக்கின்றன.

2ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் தரைவழி வணிகப்பாதையாக இருந்த பட்டுப்பாதை வணிகத்தை நினைவூட்டும் வகையில், உலகளாவிய தமிழர்களின் வணிகத்தை மீளுருவாக்கம் செய்யவும் இம்மாடு டனாங் நகரில் நடைபெறவுள்ளது.

இலங்கையிலிருந்து தமிழ் அமைச்சர்கள் பலர் இம்மாநாட்டில் கலந்துகொள்ள ஒப்புதல் அளித்துள்ளனர். அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்று ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், தொழில் அதிபர்களும் பங்குகொள்ளவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்