டைனோசர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? பிரிட்டனில் கிடைத்த பிரமாண்ட கால்தடங்கள் சொல்வது என்ன?
- எழுதியவர், ரெபேக்கா மோரேல் & அலிசன் பிரான்சிஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
பிரிட்டனில் வாழ்ந்த மிகப்பெரிய டைனோசரின் கால்தடங்கள் ஆக்ஸ்போர்டுஷயரில் உள்ள ஒரு குவாரியில் சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 166 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் சுமார் 200 பெரிய கால்தடங்கள், அங்கிருந்த சுண்ணாம்புக் கற்கள் மீது பதிந்துள்ளன.
நீண்ட கழுத்து கொண்ட டைனோசர் வகையான செட்டியோசாரஸ், சிறிய இறைச்சி உண்ணும் டைனோசர் வகையான மெகலோசாரஸ் போன்ற இரண்டு வெவ்வேறு வகையான டைனோசர்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்களை இந்த கால்தடங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கால்தடங்களின் பாதைகள் 150 மீட்டர் நீளம் கொண்டவை. ஆனால் இந்த குவாரியின் ஒரு பகுதி மட்டுமே தற்போது ஆய்வு செய்யப்பட்டு இருப்பதால் இன்னும் நீளமான கால்தடங்கள் கண்டுபிடிக்கப்படலாம்.
“இந்த கால்தடங்களுடைய அளவின் அடிப்படையில் கூறுகிறேன், நான் பார்த்த மிகவும் சுவாரஸ்யமான தடயங்களில் இதுவும் ஒன்று,” என்று பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிர் புதைபடிவவியல் நிபுணர் பேராசிரியர் எட்கர் கூறினார்.
“இதுபோன்ற பெரிய உயிரினங்கள், பூமியில் எவ்வாறு வாழ்ந்தன என்பதை நீங்கள் சில காலம் பின்னோக்கிச் சென்று கற்பனை செய்து பாருங்கள்.”
டிவார்ஸ் ஃபார்ம் என்ற குவாரியில் பணிபுரியும் கேரி ஜான்சன் என்பவர், நிலத்தைத் தோண்டும் இயந்திரத்தை ஓட்டிச் சென்றபோது, இந்த கால்தடங்களைக் கண்டுபிடித்தார்.
“நான் நிலத்தில் இருந்த களிமண்ணை அகற்றிக் கொண்டிருந்தேன். அப்போது நான் ஒரு மேட்டின் மீது மோதினேன், அது தரையில் வித்தியாசமாக இருந்ததாக நினைத்தேன்,” என்று டைனோசரின் கால் தரையில் அழுத்தியதால் சிறிதளவு மண் மேலே எழும்பியிருந்த பகுதியில், அதன் கால்தடத்தைச் சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கூறினார்.
“இதேபோல 3 மீட்டர் தொலைவில் மற்றொன்று இருந்தது. அதுவும் இதே போன்று மேடாக இருந்தது. மற்றொரு 3 மீட்டர் தொலைவில் இன்னும் ஒன்று இருந்தது.”
கடந்த 1990களில் அருகில் மற்றொரு இதேபோன்ற கால்தடங்களின் பாதை கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இது வழக்கமான குன்றுகள் மற்றும் குழிகள் அல்ல என்றும், அவை டைனோசர் கால்தடங்கள் என்று அவர் உணர்ந்தார்.
“நான்தான் அவற்றை முதன்முதலில் பார்க்கிறேன் என்று நினைத்தேன். அது மிகவும் விசித்திரமாக இருந்தது” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
இந்தக் கோடையில், 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அந்த குவாரியில் “டிக்கிங் ஃபார் பிரிட்டன்” என்ற அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டனர். இந்த குழு ஐந்து வெவ்வேறு கால்தடங்கள் கொண்ட பாதைகளைக் கண்டறிந்தது.
அவற்றில் நான்கு கால்தடங்கள், தாவர உண்ணி டைனோசரான நான்கு கால்களில் நடக்கும் சௌரோபாட் என்பவற்றுக்குச் சொந்தமானவை. இந்த கால்தடங்கள் யானையின் கால்தடங்களைப் போல மிகப் பெரிதாகத் தோற்றமளித்தன. அவை 18 மீட்டர் வரை நீளம் கொண்டவை. மற்றொரு கால்தடம் மெகலோசரஸ் டைனோசரால் உருவாக்கப்பட்டது.
“இது கிட்டத்தட்டடைனோசர் கால்தடத்தின் கேரிகேச்சர் (ஒரு பொருளை அல்லது பாகத்தை பிரமாண்டமாக உருவகப்படுத்தி வரையும் ஓவியக்கலை) போல இருக்கிறது” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் முதுகெலும்பு தொல்லுயிரியலாளர் டாக்டர் எம்மா நிக்கோல்ஸ் விளக்கினார்.
“இதைத்தான் மூன்று விரல்கள் கொண்ட கால்தடங்கள் என்கிறோம். இந்த மூன்று கால் விரல்கள் கொண்ட கால்தடங்களும் மிகத் தெளிவாக பதிந்துள்ளன.”
இத்தகைய இரண்டு கால்களில் நடக்கும் பிற உயிரினங்களை உண்ணும் டைனோசர்கள், சுறுசுறுப்பான வேட்டையாடிகளாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
“இந்த வகை டைனோசர்களின் நீளம் 6-9 மீட்டர் இருந்திருக்கக் கூடும். அவை பிரிட்டனில் ஜுராசிக் காலத்தில் நமக்குத் தெரிந்த பிற விலங்குகளை வேட்டையாடும் மிகப்பெரிய டைனோசர்கள் வகையைச் சேர்ந்தவையாக இருந்துள்ளன.”
அவை வாழ்ந்த சூழல் வெதுவெதுப்பான ஆழமற்ற கடற்கரையால் சூழப்பட்டிருந்தது. டைனோசர்கள் சேற்றில் நடந்து செல்லும்போது இந்த கால்தடங்கள் தரையில் ஆழமாகப் பதிந்து இருக்கக்க்கூடும்.
“புதைபடிவங்களாக இவை பாதுகாக்கப்படும் வகையில் இயற்கை செயல்முறையில் ஏதோ நடந்திருக்க வேண்டும்” என்று பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தின் தொல்லுயிர் வாழ்வியல் நிபுணர் பேராசிரியர் ரிச்சர்ட் பட்லர் கூறினார்.
“அது என்னவென்று எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை, ஆனால் அது ஒரு புயல் நிகழ்வாக இருக்கலாம், கால்தடங்களின் மீது ஏராளமான வண்டல் மண் சேர்ந்திருக்கலாம். அதனால் அவை அழியாமல் பாதுகாக்கப்பட்டு இருக்கலாம்” என்றார் அவர்.
இந்த கால்தடங்களின் பாதைகளை ஆராய்ச்சிக் குழுவினர் விரிவாக ஆய்வு செய்தனர். கால்தடங்களின் மாதிரிகளை எடுப்பதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த பாதையில் உள்ள தனித்தனி கால்தடங்களையும் 3டி மாதிரிகளாக உருவாக்க 20,000க்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்தனர்.
“இந்தக் கால்தடங்கள் எதை நோக்கிச் செல்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால், அது டைனோசர்களின் வாழ்க்கை பற்றித் தெரிந்துகொள்ள உதவும். அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்,” என்று பேராசிரியர் பட்லர் விளக்கினார்.
“அந்த டைனோசர்கள் எங்கெல்லாம் சென்றன என்பதைப் பற்றிய விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். அது வாழ்ந்த சூழல் எப்படி இருந்தது என்பதை நாம் சரியாகக் கற்றுக்கொள்ளலாம். அதோடு, டைனோசர்களின் எலும்பு புதைபடிவங்களில் இருந்து நாம் பெற முடியாத முற்றிலும் மாறுபட்ட தகவல் தொகுப்பை இந்தக் கால்தடங்கள் வழங்குகின்றன” என்று குறிப்பிட்டார் பட்லர்.
ஒரு இடத்தில், சௌரோபாட் மற்றும் மெகலோசாரஸ் டைனோசர்கள் நடந்த பாதைகள் ஒன்றுடன் ஒன்று கடந்து சென்றது தெரிய வந்துள்ளது.
அந்தக் கால்தடங்கள் மிகவும் அழகாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதால், எந்த விலங்கு முதலில் கடந்து சென்றது என்பதை ஆராய்ச்சிக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். அதன்படி, அங்கு சௌரோபாட் என்ற டைனோசர்தான் முதலில் கடந்து சென்றுள்ளது என்று அவர்கள் நம்புகிறார்கள். ஏனெனில் அதன் பெரிய, வட்டமான தடத்தின் முன் பகுதியில் மூன்று கால்கள் கொண்ட மெகாலோசரஸ் நடந்து சென்றிருப்பதால், சௌரோபாடின் கால்தடங்கள் கீழே பதிந்துள்ளன.
இந்தப் பகுதியில் ஒரு டைனோசர் நடந்து சென்றிருப்பதையும், அது தனது கால்தடத்தை இங்கே விட்டுச் சென்றிருப்பதையும் அறிய மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டங்கன் மர்டாக்.
“அது இந்த இடத்தில் நடந்து செல்லும்போது சேற்றில் புதைந்த அதன் கால்களைத் தூக்கி நடப்பதை ஒருவாறாகக் கற்பனை செய்ய முடிகிறது” என்கிறார் அவர்.
இந்தக் கால்தடங்களின் எதிர்காலம் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் குவாரியை இயக்கும் ஸ்மித்ஸ் பிளெட்சிங்டன் நிறுவனம் மற்றும் நேச்சுரல் இங்கிலாந்து அமைப்புடன் இணைந்து இந்த தளத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுத்துள்ளனர்.
கடந்த காலத்தைப் பற்றி நமக்குத் தெரிவிக்கும் வகையில் இன்னும் பல கண்டுபிடிக்கப்பட வேண்டிய கால்தடங்கள் இங்கு இருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.