வருமான வரி பரிசோதகர்கள் என கூறி யாழ் நகைக்கடை பணம் பறித்தவர்கள் கண்டியில் கைது !

by adminDev

வருமான வரி பரிசோதகர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணத்தினை பறித்துச் சென்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை 5 இலட்சம் ரூபாய் பணத்துடன் பொலிஸார் நேற்றைய தினம் (17) கைது செய்திருந்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, வாகன சாரதி உட்பட மூவர் கண்டியில் கைது செய்யப்பட்டனர்.

எனினும், கொள்ளை குற்றத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 16ஆம் திகதி நகைக்கடையினுள் சிவில் உடையில் நுழைந்த மூவர், தாம் வருமான வரி பரிசோதகர்கள் என கூறிக்கொண்டு, கடையின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்பாக, கடையின் கதவுகளை மூடி, கடையினுள் இருந்த கண்காணிப்பு கமராவில் கட்டுப்பாட்டு தொகுதியினை கழட்டி தம் வசம் வைத்துக்கொண்டு, கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் தொலைபேசிகளின் இயக்கத்தை நிறுத்தி வைக்குமாறும் பணித்துள்ளனர்.

பின்னர், கடையில் சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை நகைகள் உள்ளதாகவும், கணக்கில் காட்டப்படாத பெருமளவு பணம் உள்ளதாகவும் தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே விசாரணைக்கு வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

பின்னர், கடையை சோதனையிட வேண்டும் என கூறி, கடையில் இருந்த நகைகள், 30 இலட்சம் ரூபா பணம் என்பவற்றை தாம் எடுத்துச் செல்வதாகவும், தமது அலுவலகத்துக்கு வந்து உரிய பற்றுச்சீட்டுக்களை, கணக்குகளை சமர்ப்பித்து பணம், நகைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என கூறி அவற்றை எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.

நகைகளையும் பணத்தினையும் தாமே அலுவலகத்துக்கு கொண்டு வந்து தருவதாக கடை உரிமையாளர் கூறி, அவற்றை எடுத்துச் செல்ல மறுத்தபோது, “நகைகளை நீங்கள் கொண்டுவந்து அலுவலகத்தில் ஒப்படையுங்கள், பணத்தினை நாங்கள் எடுத்துச் செல்கிறோம்” என கூறி பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் சக கடை உரிமையாளர்களிடம் கூறியபோதே பணத்தை கொள்ளையிடப்பட்டமை தெரியவந்துள்ளது.

பின்னர், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்தே சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்