டொனால்ட் டிரம்பின் திட்டங்களால் அமெரிக்காவுக்கே ஆபத்தா? ஐ.எம்.எஃப் எச்சரிப்பது ஏன்?
- எழுதியவர், சைமன் ஜாக் & டாம் எஸ்பினர்
- பதவி, பிபிசி வணிக ஆசிரியர் & செய்தியாளர்
அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் உலகப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இறுதியில் அமெரிக்காவுக்கே அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது.
அச்சுறுத்தும் வகையிலுள்ள சுங்க வரிகள், அதிக வர்த்தக சிக்கல்களை ஏற்படுத்தலாம், முதலீடுகளைக் குறைக்கலாம், விலையை அதிகரிக்கலாம், வர்த்தகத்தைக் குழப்பலாம் மற்றும் விநியோக சங்கிலியைச் சீர்குலைக்கலாம் என்று ஐஎம்எஃப் கூறுகிறது.
வரி விதிப்புகள், வரிக் குறைப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்குதல் ஆகியவை அமெரிக்கப் பொருளாதாரம் குறுகிய காலத்தில் விரைவாக வளர உதவும் அதே வேளையில், அவை பணவீக்கம் உயர்வதற்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று இஎம்எப் குறிப்பிட்டுள்ளது.
உலகப் பொருளாதார வளர்ச்சி, 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் 3.3 சதவீதம் என்ற அளவில் சீராக, ஆனால் மெதுவாக இருக்கும் என ஐஎம்எஃப் கணித்துள்ளது. இது கடந்த காலத்தில் சராசரியாக இருந்த 3.7 சதவீத வளர்ச்சி விகிதத்தைவிடக் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு இருந்ததைப் போலவேதான் 2025ஆம் ஆண்டின் ஐஎம்எஃப் அறிவிப்பும் உள்ளது. ஏனென்றால் முன்பு எதிர்பார்த்ததைவிட அமெரிக்காவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று ஐஎம்எஃப் கருதுகிறது.
மேலும் அமெரிக்காவின் இந்த கூடுதல் வளர்ச்சி உலகெங்கிலும் உள்ள மற்ற முக்கியமான பொருளாதாரங்களில் மெதுவான வளர்ச்சியைச் சமநிலைப்படுத்த உதவும்.
பிரிட்டனின் பொருளாதார உற்பத்தி 2025ஆம் ஆண்டில் 1.6 சதவீதம் அதிகரிக்கும் என்று ஐஎம்எஃப் கணித்துள்ளது, இது கடந்த அக்டோபரில் அவர்கள் கணித்த 1.5 சதவீதத்தைவிட சற்று அதிகம்.
இருப்பினும், அந்த அமைப்பு கணித்ததைவிட, கடந்த ஆண்டு பிரிட்டனின் பொருளாதாரம் அதன் வளர்ச்சியில் பலவீனமடைந்துள்ளதை சமீபத்திய ஐஎம்எஃப் புள்ளிவிவரங்கள் வெளிக்காட்டுகின்றன.
“அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிக வேகமாக வளரும் பெரிய ஐரோப்பிய பொருளாதாரமாக பிரிட்டன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்கா தவிர, இந்த ஆண்டுக்கான வளர்ச்சி முன்னறிவிப்பை மேம்படுத்தும் ஒரே ஜி7 பொருளாதாரம் பிரிட்டன்தான்” என்று அந்நாட்டு நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் கூறுகிறார்.
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்பின் வருகையோடு தொடர்புடைய அபாயங்களை, உலகப் பொருளாதாரம் குறித்த ஐஎம்எஃப்-இன் கணிப்பு எடுத்துக்காட்டுகிறது.
டிரம்ப் கடந்த முறை அதிபராக இருந்தபோது, சீனாவுடன் வர்த்தகப் போரைத் தொடங்கினார். இதன் விளைவாக, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், ஒருவருக்கொருவர் வரிகளை விதித்துக் கொண்டன.
இப்போது, சீனா, மெக்சிகோ, கனடா போன்ற நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். மேலும் ஒன்பது நாடுகளின் பிரிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்க டாலருக்கு போட்டியாக புது நாணயத்தை உருவாக்கினால் அதற்கு 100 சதவீதம் வரி விதிக்கப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
வரி குறைப்பு மற்றும் அதன் கட்டுப்பாடுகளை நீக்குவது போன்ற இந்த நடவடிக்கைகள் குறுகிய காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் விரைவாக வளர உதவும் என்று ஐஎம்எஃப் கருதுகிறது.
உலகளவிலான இறக்குமதி பொருட்களுக்கு 10 சதவீத வரியும், கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீன பொருட்களுக்கு 60 சதவீத வரியும் விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த நடவடிக்கைகள் உலகின் பிற பகுதிகளிலும் இறுதியில் அமெரிக்காவிலும் கடுமையான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
அது மட்டுமின்றி, அமெரிக்கப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து விலைகள் உயர்ந்தால், அது வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று ஐஎம்எஃப் எச்சரிக்கிறது. மேலும் “இதனால் அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் முதலீடு செய்வதற்கு குறைந்த பாதுகாப்பு உடையவையாக மாற்றப்படுகின்றன.”
முதலீட்டாளர்கள் அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று நினைக்கிறார்கள், ஏனெனில் அமெரிக்க அரசாங்கம் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
மேலும், வணிகங்கள் மீதான பல கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டால், அமெரிக்க டாலர் மிகவும் வலுவாக மாறக்கூடும். இது வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இருந்து பணத்தை உறிஞ்சி, உலகளாவிய வளர்ச்சியைக் குறைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், டிரம்ப் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தினால், அது ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தித் திறனைக் குறைத்து, “நிரந்தரமாக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளை அதிகரிக்கலாம்.”
ஏனென்றால், டிரம்பின் எதிர்காலக் கொள்கைகள் குறித்த “மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மை” ஏற்கெனவே உலகளவில் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐஎம்எஃப்-இன் தலைமைப் பொருளாதார நிபுணர் பியர் ஒலிவிர் கோரிஞ்சஸ் கூறினார்.
அதைத் தொடர்ந்து, அமெரிக்க கட்டணங்கள் வர்த்தகத்தைப் பாதிக்கலாம் என்றும் இந்த ஆண்டு உலகளாவிய வளர்ச்சியைக் குறைக்கலாம் என்றும் வியாழக்கிழமையன்று உலக வங்கி எச்சரித்தது.
மேலும் 2025ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி 2.7 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. அதாவது கோவிட் தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது காணப்பட்ட சரிவைத் தவிர, 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்படும் பொருளாதார சரிவாக இது இருக்கும் எனக் கருதப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு