சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணியின் பலம், பலவீனம் என்ன? ரோஹித், கோலி ஃபார்ம் பிரச்னையாகுமா?

சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு - பலம், பலவீனம் என்ன? பும்ராவுக்கு என்ன சவால்?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்று விளையாடவுள்ள 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இது இறுதியான இந்திய அணி அல்ல, மாற்றத்துக்கு உட்பட்டது. பிப்ரவரி 11ஆம் தேதிதான் பிசிசிஐ இறுதிப் பட்டியலை ஐசிசியிடம் வழங்குகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள அதே அணிதான், இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது. இதில் பும்ராவுக்கு பதிலாக ஹர்சித் ராணா மட்டும் பங்கேற்கிறார், மற்ற வகையில் பெரிதாக மாற்றம் இல்லை.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர், பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி மோதும் போட்டிகள் அனைத்தும் துபையில் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்திய அணி 20ஆம் தேதி வங்கதேச அணியைச் சந்திக்கிறது.

சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் குருப்-ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்று முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி வங்கதேச அணியையும், 23ஆம் தேதி பாகிஸ்தானையும், மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்து அணியையும் எதிர்கொள்கிறது.

இந்த சாம்பியன்ஸ் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான குழு இன்று தேர்வு செய்து அறிவித்தது.

இதில் இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக சுப்மான் கில்லும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக காயம், உடற்தகுதி பிரச்னையால் இந்திய அணியில் இடம் பெறாத வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்படவில்லை.

பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் கடைசி டெஸ்டில் முதுகு தசைப் பிடிப்பால் பாதியிலேயே விலகிய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், இவர் கடைசி நேரத்தில் அணியில் இடம் பெறுவது என்பது உடற்தகுதி அறிக்கையைப் பொருத்துதான் என்பதால் இப்போதைக்கு பும்ராவின் நிலை சுவற்றின் மீது நிற்கும் பூனை போலத்தான்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல்முறையாக ஒருநாள் போட்டித் தொடருக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் ரிசர்வ் வீரராகவே இருப்பார்.

கடந்த 2023 உலகக் கோப்பையில் 3வது இடத்தில் களமிறங்கிய விராட் கோலிக்கு அதே இடம் மீண்டும் கிடைக்கும். ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், 4வது ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் எடுக்கப்பட்டுள்ளனர். விஜய் ஹசாரே கோப்பையில் சஞ்சு சாம்ஸன் பங்கேற்காததால், அவரை தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுக்கவில்லை.

சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு - பலம், பலவீனம் என்ன? பும்ராவுக்கு என்ன சவால்?

பட மூலாதாரம், Getty Images

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் சேர்க்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, சாம்பியன்ஸ் கோப்பையில் இடம் பெற்றுள்ளார். கடைசியாக 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு மீண்டும் அணியில் விளையாட உள்ளார், அந்தத் தொடரில் 24 விக்கெட்டுகளை ஷமி வீழ்த்தினார்.

விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாகச் செயல்பட்டதைத் தொடர்ந்து, இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், முகமது சிராஜ் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 2023ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க தொடரில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இலங்கை அணிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒருநாள் தொடர் விளையாடிய பிறகு, பிப்ரவரி 6,9,12 தேதிகளில் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்திய அணியில் பேட்டர்களாக ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மான் கில் ஆகியோரும், ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும், முழுநேர சினாமென் சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேகப்பந்துவீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, பும்ரா(மாற்றத்துக்கு உட்பட்டது) சேர்க்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்கள் வரிசையில் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் இருவரும் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஃபார்மில் இல்லாத சீனியர் வீரர்கள்

சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு - பலம், பலவீனம் என்ன? பும்ராவுக்கு என்ன சவால்?

பட மூலாதாரம், Getty Images

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடவுள்ள அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் கடந்த நியூசிலாந்து தொடரிலிருந்து ஃபார்மில் இல்லாத நிலையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூன்று பேரும் இழந்த ஃபார்மை மீட்க இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரைத்தான் முறையாகப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சாம்பியன்ஸ் கோப்பையும், பார்டர் கவாஸ்கர் தொடர்போல் மாறிவிடும் என்ற விமர்சனங்கள் எழுகின்றன.

உள்நாட்டுப் போட்டிகளில் ரோஹித் சர்மா மட்டுமே விளையாட இருப்பதாக தகவல் வந்துள்ளது. கோலி, ராகுல் இருவரும் உடல்நலக் குறைவு காரணமாக பங்கேற்காத நிலையில் இவர்களின் ஃபார்ம் எப்படி இருக்கிறது என்பது களத்தில் நிரூபிக்கும் பட்சத்தில்தான் உறுதியாகும்.

இந்திய அணி தொடர்ந்து ஃபார்மில் இல்லாத சீனியர் வீரர்களுக்கே வாய்ப்பு அளித்து வருவதாகவும், வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளம் வீரர்களை எடுக்கவில்லை எனவும் விமர்சிக்கப்படுகிறது. தொடக்க வரிசையில் விளையாடக்கூடிய சுப்மான் கில், ராகுல், ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ரோஹித் சர்மாவுக்கு இணையாக களமிறங்குவது ஜெய்ஸ்வாலா, கில்லா அல்லது ராகுலா என்பது குழப்பம்தான்.

நடுவரிசையை வலுப்படுத்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு துணையாக மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்டர் இருத்தல் அவசியம். அதற்கு கே.எல்.ராகுல் அல்லது ரிஷப் பந்த் இருவரில் ஒருவர் நடுவரிசையில் களமிறங்க வேண்டும்.

சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு - பலம், பலவீனம் என்ன? பும்ராவுக்கு என்ன சவால்?

பட மூலாதாரம், Neville Hopwood/Getty Images

சுப்மான் கில், ரோஹித் தொடக்க வரிசையில் களமிறங்கினால் இருவரும் வலதுகை பேட்டர் என்ற ரீதியில் எதிரணிக்கு வியூகம் அமைக்க எளிதாக இருக்கும். அதற்கு மாறாக, வலது, இடது பாணியில் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா அல்லது ஜெய்ஸ்வால், சுப்மான் கில் களமிறங்கலாம்.

இல்லாவிட்டால், ரிஷப் பந்தை தொடக்கவீரராகக் களமிறங்க வைத்து சுப்மான் கில் நடுவரிசைக்கு மாற்றப்பட வேண்டும். புதிய பந்தில் சுப்மான் கில், ரிஷப் பந்த் இருவரையும்விட ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடக் கூடியவர். இந்நிலையில், எந்தக் கலவையில் அணியின் ப்ளேயிங் லெவன் தேர்வு செய்யப்படவுள்ளது என்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது.

சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற மைதானம்

இந்திய அணியில் குல்தீப் யாதவ் தவிர முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை. இந்திய அணி மோதும் ஆட்டங்கள் அனைத்தும் துபையில் நடக்கின்றன. துபை மைதானம் மிகச் சிறியது, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் ஒத்துழைக்கக் கூடியது.

ஆதலால் குல்தீப் யாதவ் போன்ற சினாமென் பந்துவீச்சாளர்கள் கண்டிப்பாக தேவை. இவருடன் ஆஃப் ஸ்பின்னர் ஒருவரும், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஒருவரும் இருக்க வேண்டும். அந்த வகையில் ஜடேஜா, அக்ஸர் படேல் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

குல்தீப் யாதவ் போன்று முழுநேர சுழற்பந்துவீச்சாளர் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதாவது லெக் ஸ்பின்னர் இருக்கும் பட்சத்தில் பந்துவீச்சில் வலிமை அதிகரிக்கும். ஜடேஜாவுக்கு பதிலாக யஜூவேந்தி சஹல் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்.

இந்திய அணி விவரம்

ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மான் கில்(துணைக் கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா(உடற்தகுதியைப் பொருத்து உறுதியாகும்), முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.