கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு: சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு – விசாரணையில் என்ன நடந்தது?
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை சீல்டா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தண்டனை விவரங்கள் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என்று சிறப்பு நீதிபதி அனிர்பன் தாஸ் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த இந்தச் சம்பவம் மேற்கு வங்கம் முழுவதும் பொது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஆகஸ்ட் 9, 2024 அன்று, மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் போராட்டங்கள் வெடித்தன. அதன் விளைவாக மேற்கு வங்க மாநிலத்தின் சுகாதார சேவைகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக முடங்கின.
இந்தச் சம்பவம் நடந்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. தற்போது ஜனவரி 18 அன்று, கொல்கத்தாவின் சீல்டா நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு நீதிபதி அனிர்பன் தாஸ், இந்த வழக்கை விசாரித்தார். இந்நிலையில் இன்று காலை முதலே நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனுடன், ஏராளமான ஜூனியர் மருத்துவர்களும் அங்கு கூடியிருந்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் சல்மான் ராவி சம்பவ நீதிமன்றத்தில் இருந்து தகவல் தெரிவித்தார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டம் பங்களா போகோ என்ற பெங்காளி உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் அமைப்பால் நடத்தப்பட்டது.
இந்த வழக்கில், சம்பவம் நடந்த நேரத்தில் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மற்றும் தலா பகுதி காவல் நிலைய பொறுப்பாளர் அபிஜித் மண்டல் இருவர் மீதும் சிபிஐ-யால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இயலவில்லை.
அவர்கள் இருவரும் “குற்றம் நடந்த இடத்தில் இருந்த ஆதாரங்களைச் சிதைத்ததாக” குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். தற்போது சந்தீப் கோஷ், அபிஜித் மண்டல் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனது அறிக்கையில், சிபிஐ இந்த வழக்கை ‘அரிதிலும் அரிதானது’ எனக் குறிப்பிட்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமெனக் கோரியுள்ளது.
அதேநேரம், இறந்த மருத்துவரின் பெற்றோர் சிபிஐ விசாரணையில் அதிருப்தி அடைந்து, வழக்கைக் கண்காணித்து வரும் உச்சநீதிமன்றம் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் சீல்டா சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் தண்டனையை அறிவிப்பதை நிறுத்தி வைத்து, முழு விஷயத்தையும் மீண்டும் ஒருமுறை விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இன்று நீதிமன்றத்தில், கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெற்றோர் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.