அமெரிக்க அதிபரின் பொது மன்னிப்பு அதிகாரம் என்றால் என்ன? எப்படி பயன்படுத்துகிறார்கள்?
- எழுதியவர், ஜெரேமி ஹொவெல்
- பதவி, பிபிசி உலக சேவை
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவருடைய ஆட்சிக் காலத்தை நிறைவு செய்யவிருக்கும் சூழலில், அவருடைய மகன் ஹன்டர் உள்பட 60 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
ஜோ பைடன் மட்டுமல்ல, இதற்கு முன்பு அதிபர்களாகப் பணியாற்றிய பலரும் பொது மன்னிப்பு வழங்கியுள்ளனர். குற்றவாளிகளுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க மட்டுமின்றி, அதிபர்களின் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்களைப் பாதுகாக்கவும் இத்தகைய பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.
டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரவுள்ள சூழலில், அவரும் பொது மன்னிப்பு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார். அவர், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கவுள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்பில், அதிபர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரமும் இடம் பெற்றுள்ளது. மற்ற உலக நாடுகளின் தலைவர்களோடு ஒப்பிடுகையில் இந்த அதிகாரங்கள் பரந்துபட்டவை.
பொது மன்னிப்பு வழங்க அமெரிக்க அதிபர்களுக்கு இருக்கும் அதிகாரங்கள் என்ன?
அமெரிக்க அரசியலமைப்பின் பிரிவு 2, உட்பிரிவு 2இல் பொது மன்னிப்பு தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்திற்கு சில வரையறைகள் உள்ளன. ஆனால், அதிபரை பதவியில் இருந்து நீக்கம் செய்வது தொடர்பான விவகாரங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ராணுவ மற்றும் கூட்டாட்சி சட்டங்களை மீறிய நபர்களுக்கு மட்டுமே அதிபர்களால் பொது மன்னிப்பு வழங்க இயலும். மாகாண சட்டங்களை மீறியவர்களுக்கு அவர்களால் பொது மன்னிப்பு வழங்க இயலாது.
இந்த அதிகாரங்கள், ஆங்கிலேய மன்னர்கள் பயன்படுத்திய, “கருணைக்கான உரிமை” (prerogative of mercy) என்ற அதிகாரங்களில் இருந்து பின்பற்றப்பட்டது.
சில நேரங்களில், ஆங்கிலேய மன்னர்கள் கருணை அடிப்படையில் தனிநபர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினார்கள். போராட்டங்களைக் கட்டுப்படுத்த, பல குழுக்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
“ஆங்கிலேய மன்னரின் சார்பில், அமெரிக்கா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, காலனிய ஆளுநர்கள் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினார்கள். அங்குள்ள மக்களுக்கு அது ஏற்கெனவே ஓர் உரிமையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது,” என்று கூறுகிறார் இவான் மோர்கன். லண்டன் கல்லூரி பல்கலைக்கழகத்தில் அமெரிக்க வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் அவர்.
அவரது கூற்றுப்படி, “அமெரிக்காவை நிறுவிய தலைவர்கள் பொது மன்னிப்பு முறை தொடர வேண்டும் என்று விரும்பினார்கள்.”
அமெரிக்க அரசியலமைப்பின் வரைவு உருவாக்கப்பட்டபோது, பொது மன்னிப்பை அமெரிக்க நாடாளுமன்றம் வழங்க வேண்டுமா அல்லது அதிபர் வழங்க வேண்டுமா என்ற விவாதம் ஏற்பட்டது.
அமெரிக்காவின் முதல் கருவூலச் செயலாளரான அலெக்ஸாண்டர் ஹாமில்டன், அதிபர்களுக்குத்தான் அந்த அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று உறுப்பினர்களிடம் பேசி, அவர்களின் ஒப்புதல்களைப் பெற்றார்.
‘தி ஃபெடரலிஸ்ட் பேப்பர்ஸ்’ என்ற கட்டுரைத் தொகுப்பில் ஹாமில்டன், “கருணை அடிப்படையில் ஒருவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்றால் அதற்கான தகுதியை, பலர் அடங்கிய ஒரு குழுவைக் காட்டிலும், ஒரு மனிதரே அதிகம் பெற்றுள்ளார்,” என்று எழுதியுள்ளார்.
அதிபர்களால் வளர்ந்து வரும் போராட்டத்தின் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் பொது மன்னிப்பை உடனடியாக வழங்க இயலும். ஆனால் அமெரிக்க நாடாளுமன்றம் அதற்குப் பல காலம் எடுத்துக் கொள்ளும் என்றும் அவர் வாதாடினார்.
பேரவையைக் கூட்டி அதன் அனுமதியைப் பெறுவதற்கு ஆகும் கால தாமதம், ஒரு நல்ல வாய்ப்பு கைநழுவிச் செல்ல வழிவகை செய்யும் என்றும் அவர் எழுதினார்.
பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை அதிபர்கள் எவ்வாறு பயன்படுத்தினர்?
அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் தான் முதன்முறையாக பொது மன்னிப்பை வழங்க ஆரம்பித்தார். அரசியல் சர்ச்சையை அமைதிப்படுத்த இதைப் பயன்படுத்தினார்.
கடந்த 1794ஆம் ஆண்டு விஸ்கி போராட்டத்தில் பங்கேற்று, துரோக வழக்கை எதிர்கொண்டு சிறை சென்ற இருவருக்கு அவர் பொது மன்னிப்பு வழங்கினார். மதுபானங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த வரிக்கு எதிராக அந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
கடந்த 1868ஆம் ஆண்டு, உள்நாட்டுப் போரின்போது அமெரிக்காவில் இருந்து பிரிந்து சென்ற மாகாணங்களின் அதிபராக (president of the Confederate states) செயல்பட்ட ஜெஃபர்சன் டேவிஸ் உள்பட அந்தப் போரின்போது அமெரிக்க ஒன்றியத்தை எதிர்த்தவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவது குறித்த சர்ச்சை ஜெரால்ட் ஃபோர்டால் எழுந்தது. 1974ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கு வந்த அவர், அவருக்கு முன்பு அதிபர் பொறுப்பு வகித்த ரிச்சட் நிக்சனுக்கு பொது மன்னிப்பு வழங்கினார்.
வாட்டேர்கேட் ஊழலில் ரிச்சட் நிக்சன் ஈடுபட்டதன் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஃபோர்ட் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கும்போது, நாடு குணமடைய இதைச் செய்ததாகக் குறிப்பிட்டார்.
“ஒருவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிறகு மன்னிப்பு வழங்குவதற்குப் பதிலாக, குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படும் நபருக்கு பொது மன்னிப்பு வழங்கியது அப்போதுதான்,” என்று குறிப்பிடுகிறார் மோர்கன்.
“இதன் அர்த்தம் அவர் குற்றவாளியா இல்லையா என்பதை நம்மால் அறிந்து கொள்ளவே இயலாது என்பதுதான்,” என்கிறார் அவர்.
கடந்த 2001ஆம் ஆண்டு, அன்றைய அதிபராக இருந்த பில் கிளிண்டன், 1985ஆம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்ட அவருடைய சகோதரர் ரோஜர் க்ளிண்டனுக்கு பொது மன்னிப்பு வழங்கினார்.
மோசடி, சட்டத்திற்குப் புறம்பாக வர்த்தகம், வரி ஏய்ப்பு போன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபரான தொழிலதிபர் மார்க் ரிச்சுக்கும் க்ளிண்டன் பொது மன்னிப்பு வழங்கினார். ரிச்சின் மனைவி, அதிபரின் நூலகத்திற்கு மிகப்பெரிய நன்கொடையை வழங்கிய பிறகு, இந்த பொது மன்னிப்பை க்ளிண்டன் அறிவித்தார்.
பிறகு, இத்தகைய பொது மன்னிப்பை வழங்கியதற்காக வருத்தம் தெரிவித்த க்ளிண்டன், அவருக்கு வழங்கப்பட்ட நன்கொடை அவரது முடிவைத் தீர்மானித்தது என்ற குற்றச்சாட்டை என்பதை மறுத்தார்.
தன்னுடைய முதல் ஆட்சி காலத்தின்போது, வரி ஏய்ப்பு குற்றங்களில் ஈடுபட்ட, தனது சம்பந்தி சார்லஸ் குஷ்னருக்கு டொனால்ட் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கினார்.
பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட, அரசியல் வட்டாரத்தில் நெருங்கிய தொடர்பில் இருந்த ஸ்டீவ் பான்னோன், பால் மனாஃபோர்ட், ரோஜர் ஸ்டோன் உள்ளிட்ட பலருக்கும் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கினார்.
ஜோ பைடன் 2024ஆம் ஆண்டில் தனது மகன் ஹன்டருக்கு பொது மன்னிப்பு வழங்கினார். துப்பாக்கி வாங்கும்போது போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாகப் பொய்கூறியது, வரி ஏய்ப்பு தொடர்பான வழக்குகளில் தீர்ப்புக்காகக் காத்துக் கொண்டிருந்த ஹன்டருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
ஃபோர்ட், நிக்சனுக்கு பொது மன்னிப்பு வழங்கியதைப் போன்றே, 2014ஆம் ஆண்டு முதல் ஜன்டர் ஏதேனும் தவறு செய்திருந்தால் அது தொடர்பான விசாரணைகளில் இருந்து அவருக்கு விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
“முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது, அதிபர்கள் தங்களின் சொந்த விவகாரங்களில் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவது வெளிப்படையாகத் தெரிவதாக,” கூறுகிறார் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராககப் பணியாற்றும் ஆண்ட்ரூ நோவக்.
“அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இத்தகைய போக்கை மறைமுகமாகத் தடை செய்துள்ளோம் என்று உணர்ந்திருப்பார்கள். ஆனால் பல ஆண்டுகளாக இந்த நெறிமுறையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது,” என்று நோவக் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற நாடுகளில் செயல்பாட்டில் உள்ள பொதுமன்னிப்பு வழக்கங்களுடன் ஓர் ஒப்பீடு
நீதிமன்றத் தீர்ப்பையும் கடந்து, பொது மன்னிப்பு வழங்க ஆட்சியில் உள்ளவர்களுக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் பல நாடுகளில் சட்டங்கள் உள்ளன என்கிறார் நோவக்.
“நான் பார்த்த உலக நாடுகளில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்கள் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை குடியரசுத் தலைவர்களுக்கு வழங்குகிறது. ஆனால், தண்டனை வழங்குவதை அவர்களால் தடுக்க இயலாது,” எனக் கூறுகிறார் நோவக்.
ஆனால், அமெரிக்கா இதில் இருந்து மாறுபடுகிறது. ஏனெனில் இங்குள்ள அதிபர்கள், விசாரணையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஆயுதமாகவும் பொது மன்னிப்பை வழங்குகிறார்கள்.
உலகம் முழுவதும், பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக, இரண்டாம் கருத்தைப் பெறும் போக்கும் அதிகரித்து வருகிறது. வாரியங்கள் அல்லது குழு அமைத்து தேவையான பரிந்துரைகளை வழங்குவது பொதுவானது என்று நோவக் கூறினார்.
இந்தியா போன்ற நாடுகளில், அமைச்சரவையின் பரிந்துரைகள் அடிப்படையில் குடியரசுத் தலைவர் பொது மன்னிப்பு வழங்குகிறார். சில நேரங்களில் பொது மன்னிப்பு நீதிமன்ற மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்.
பிரிட்டனில், ராஜ குடும்பத்திடம் இருந்த பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் தற்போது நீதித்துறை செயலாளர் போன்ற அரசுப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குற்ற வழக்குகள் மதிப்பாய்வு ஆணையம் (CCRC) 1997ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் மூலம் நீதித்துறையில் ஏதேனும் தவறான முடிவுள் மேற்கொள்ளப்பட்டதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்தி, மேல் முறையீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த அதிகாரத்தை அமெரிக்க அதிபர்கள் எப்படி மாற்றினார்கள்?
கடந்த 1789ஆம் ஆண்டில் இருந்தே இந்தப் பழக்கம் நடைமுறையில் உள்ளது. அட்டர்னி ஜெனரலும், வெளியுறவுச் செயலாளரும், யாருக்கெல்லாம் பொது மன்னிப்பு தேவைப்படுகிறது என்ற பட்டியலை தயாரிப்பார்கள். பிறகு அதை அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பார்கள். 1894ஆம் ஆண்டு முதல் பொது மன்னிப்பு வழங்கும் நீதிபதி (Pardon Attorney) இந்தப் பணியை மேற்கொண்டார்.
ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டில், அதிபர்கள் சில குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் நீதிபதியின் ஆலோசனையின் பெயரில் சில சாதாரண குற்றவாளிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கியுள்ளனர்.
ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட், 1933 முதல் 1945 வரையிலான காலகட்டத்தில் 2,819 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கினார்.
ஹாரி ட்ரூமன், 1,913 பேருக்கு 1945 முதல் 1953 வரையிலான காலகட்டத்தில் பொதுமன்னிப்பு வழங்கினார்.
ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ், 1989 முதல் 1993 வரையிலான அவருடைய ஆட்சிக் காலத்தில் 74 பேருக்கு மட்டுமே பொது மன்னிப்பு வழங்கினார்.
பராக் ஒபாமா, 2009 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 212 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். டிரம்ப் 2017 முதல் 2021 காலகட்டத்தில் 143 பேர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார்.
ஜனவரி 13ஆம் தேதி வரையில், ஜோ பைடன் வெறும் 65 நபர்களுக்கு மட்டுமே பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
முனைவர் நோவக் இதுகுறித்துப் பேசும்போது, பில் க்ளிண்டன், ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் போன்ற அதிபர்கள் வெகு குறைவாகவே பொது மன்னிப்பு வழங்கியுள்ளனர். அதுவும் அவர்களுக்கு நன்கு அறிமுகமான நபர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார்.
“அவர்களின் சொந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதைக் காட்டிலும் அதிபர்கள் இந்த பொது மன்னிப்பை பல சாதாரண குற்றவாளிகளுக்கும் வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்றார் அவர்.
“அநியாயமாகப் பலர் மீது வழக்கு போடப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இந்த அதிகாரத்தை நல்ல காரியங்களுக்காகப் பயன்படுத்தலாம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.