by 9vbzz1

தெற்கில் பாதிக்கப்பட்டவர்களும் எம்மைப்போன்றவர்களே – லீலாதேவி ஆனந்த நடராஜா நாட்டின் ஏனைய பாகங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்தன் பின்னரேயே, எமது அன்புக்குரியவர்கள் காணாமல்போனதற்கு அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்பதையும், மாறாக அவர்களும் போரில் அவர்களது அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டோம் என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தின் ஊடாக வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு எதிராகப் போராடும் குழுவினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான உலகளாவிய மாநாடு கடந்த 15 – 16 ஆம் திகதிகளில் ஜெனிவாவில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் இலங்கையிலிருந்து வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா மற்றும் அச்சங்கத்தின் பிரதிநிதிகள் சிலரும், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவும் கலந்துகொண்டிருந்தனர். அம்மாநாட்டில் உரையாற்றிய லீலாதேவியினால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:

நாம் 2009 ஆம் ஆண்டு முதல் எமது அன்புக்குரியவர்களை இழந்துவிட்டோம். அதிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக நீதியைக்கோரி போராடிவந்த நாம், பின்னர் மாவட்ட ரீதியாக சிறு குழுக்களாக ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுத்தோம். அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் எமக்கென சங்கங்களை நிறுவினோம். 2017 ஆம் ஆண்டு மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சுவிட்ஸர்லாந்து தூதரகம் ஆகியவற்றின் வழிகாட்டலுக்கு அமைவாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் உள்ளிட்ட சகல உறவுகளும் இணைந்து எமக்கென ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, அதில் ஒவ்வொரு பதவிக்கும் பொறுப்பானவர்களைத் தெரிவுசெய்தோம்.

அக்கூட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த உறவினர்களான நாம் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி முதல் நீதிகோரி தொடர் போராட்டமொன்றை ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டோம். அப்போராட்டத்துக்கு வட, கிழக்கின் ஏனைய 7 மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும், தலைமைத்துவத்தை வகிக்கும் பெண்களும் வருகைதந்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

அதற்கமைய முதலில் நாம் கிளிநொச்சியில் எமது கவனயீர்ப்புப்போராட்டத்தை ஆரம்பித்தோம். அதனைத்தொடர்ந்து முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் (மருதங்கேணி) ஆகிய மாவட்டங்களிலும் கவனயீர்ப்புப்போராட்டங்களை நடத்தினோம்.

அதேவேளை எம்மைக் கொழும்புக்கு அழைத்த சுவிஸ் தூதரகத்தினர் எமக்கும், நாட்டில் ஏனைய பாகங்களில் வசிக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்றை நடாத்துவதற்கு அவசியமான ஏற்பாடுகளைச்செய்து உதவினர்.

நாம் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடி, எமக்கிடையில் வலுவானதொரு வலையமைப்பை உருவாகிக்கிக்கொண்டோம். அதன்பின்னர் தான் எமது அன்புக்குரியவர்கள் காணாமல்போனதற்கு அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்பதையும், மாறாக அவர்களும் போரில் அவர்களது அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டோம் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்