சலோச்சன கமகேவின் விளக்கமறியல் நீடிப்பு இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட சந்தேகநபர்கள் இருவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் திருமதி தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.
மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை உடனடியாக முடிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு – டொரிங்டன் அவன்யூவில் அமைந்துள்ள காணியை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அபகரிப்பதற்காக வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 90 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட போதே, இரு சந்தேக நபர்களும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது