மாநில தேர்தல் ஆணைய பதவிகளுக்கு கல்வித் தகுதி நிர்ணயம்: ஊரக வளர்ச்சித்துறை அரசாணை வெளியீடு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதிவிகளுக்கு கல்வித்தகுதி நிர்ணயித்து ஊரக வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இளநிலை உதவியாளர், உதவியாளர், நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கும் அவற்றுக்கான பதவி உயர்வுக்கும் கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவ தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி வாயிலாக நேரடியாக நிரப்பப்படும் இளநிலை உதவியாளர் பணிக்கு குறைந்தபட்ச பொது கல்வித்தகுதி (எஸ்எஸ்எல்சி தேர்ச்சி) அவசியம். பதிவுறு எழுத்தர் நிலையில் இருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு பெற குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு தினமும் இரண்டரை மணி நேரம் இளநிலை உதவியாளர் வேலையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல், இந்த தகுதி, அலுவலக உதவியாளர் நிலையில் இருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு பெறுவதற்கும் பொருந்தும்
டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியா நிரப்பப்படும் உதவியாளர் பதவிக்கு பட்டப்படிப்பு கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது. இளநிலை உதவியாளர் பதவியில் தகுதிகாண் பருவம் முடித்து உரிய துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் உதவியாளராக பதவி உயர்வுபெற தகுதியுடையவர் ஆவர்.
டிஎன்பிஎஸ்சி வாயிலாக நேரடியாக நிரப்பப்படும் நேர்முகத எழுத்தர் (பி.சி) பதவிக்கு பட்டப்படிப்பும், தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளில் ஹையர் கிரேடு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு மாநில தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும் அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சியும் அவசியம். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.