ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் (Starship) ராக்கெட் வியாழன் (16) அன்று அதன் ஏழாவது சோதனைப் பயணத்தின் போது ஒரு வியத்தகு முடிவைச் சந்தித்தது.
நிலவுக்கும் அதற்கு அப்பாலும் எதிர்கால பயணங்களுக்காக சோதிக்கப்பட்ட ராக்கெட் மெக்சிகோ வளைகுடாவின் நடுப்பகுதியில் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது.
டெக்சாஸ், போகா சிகாவில் அமைந்துள்ள ஸ்பேஸ் எக்ஸின் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது.
ஸ்பேஸ்எக்ஸ் மிஷன் கட்டுப்பாட்டின்படி, விண்கலத்துடனான தொடர்பு, எட்டு நிமிடங்களுக்குள் துண்டிக்கப்பட்டது.
இதனால் ராக்கெட்டின் மேல் நிலை விரைவான திட்டமிடப்படாத பிரித்தெடுத்தல் ஏற்பட்டதாகவும், அது வெடிப்புக்கு வழி வகுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராக்கெட் வெடிப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகள் தீப்பிழம்புகள் மழை போல் பொழிவதை வெளிப்படுத்தியுள்ளன.
இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், “வெற்றி நிச்சயமற்றது, ஆனால் பொழுதுபோக்கு உத்தரவாதம்!” என்று கூறியுள்ளார்.
இதனிடையே, ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) தற்போது செயல்பாட்டை மதிப்பீடு செய்து, புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
400 அடி உயரம் கொண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மிக சக்திவாய்ந்த ராக்கெட் ஆகும்.
மேலும் சந்திரனுக்குத் திரும்புவதற்கான நாசாவின் முயற்சிகளில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க விண்வெளி நிறுவனம் 2027 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட ஆர்ட்டெமிஸ் III பயணத்தின் போது விண்வெளி வீரர்களை சந்திர மேற்பரப்பில் கொண்டு செல்ல ஸ்பேஸ் எக்ஸை தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த நிலையில் அண்மைய சம்பவம் ஒரு மாத கால பாதுகாப்பு மதிப்பாய்வைத் தூண்டியிருந்தாலும், ஸ்பேஸ் எக்ஸ் அதன் லட்சிய இலக்குகளான கிரகங்களுக்கு இடையேயான பயணம் மற்றும் செயற்கைக்கோள் வரிசைப்படுத்தல் ஆகியவற்றுடன் தொடர்ந்து முன்னேறி வருகிறது.