இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை (18) திருகோணமலையில் நடைபெறவுள்ள நிலையில் மருத்துவர் சி.சிவமோகனை கட்சியில் இருந்து இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொடர்பிலான கடிதம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தால், சிவமோகனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில், “வவுனியாவில் கடந்த டிசெம்பர் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, தாங்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்படுகிறீர்கள் .
நாடாளுமன்றத் தேர்தல் 2024 காலப்பகுதியில் கட்சியின் வன்னித் தேர்தல் தொகுதி வேட்பாளர்களுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை ஊடகங்களில் தெரிவித்து, கட்சிக்கும் கட்சிசார்ந்த வேட்பாளர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் வெளிப்படையாக ஈடுபட்டதை கட்சி அறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாளைய கூட்டம் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கட்சிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை, இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.