காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
ஹமாஸ் உடனான போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை திரும்பப் பெறுவதற்கான ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு (1330 GMT) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் முழு அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக இந்த செய்தி வந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இஸ்ரேலின் தீவிர வலதுசாரி பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர், ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்திய போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அரசாங்கம் ஒப்புதல் அளித்தால், தனது கட்சி சகாக்களுடன் சேர்ந்து தனது அமைச்சரவை பதவியிலிருந்து பதவிவிலகப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய போராளிகளை விடுவிப்பதும், காசா பகுதியின் மூலோபாயப் பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்கள் திரும்பப் பெறுவதும் போரின் சாதனைகளை அழித்துவிடும் என்று அவர் ஒரு தொலைக்காட்சி அறிக்கையில் கூறினார்.
அவர் இந்த ஒப்பந்தத்தை “பொறுப்பற்றது” என்றும், மனிதாபிமான உதவி மற்றும் அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை காசா பகுதிக்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் வழங்குவது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
பென்-கிவிரைத் தவிர, தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தார், இது ஆபத்தான ஒப்பந்தம் என்று கூறினார்.