கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் – வௌிப்படுத்திய பதில் ஐஜிபி !

by admin

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் – வௌிப்படுத்திய பதில் ஐஜிபி ! on Friday, January 17, 2025

கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக பொலிஸார் முன்னெடுத்துள்ள வாகன சோதனை நடவடிக்கைகள் காரணமாக, வாகன விபத்துகளால் ஏற்படும் நாளாந்த உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

‘புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில் பொலிஸின் செயற்பாடுகள் ‘ என்ற தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், போக்குவரத்து விபத்துகளால் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவித்தார்.

இது கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் என்றும், வீதி ஒழுக்கத்தைப் பேணுவது மிகவும் முக்கியமானது என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

கடந்த நாட்களில் வீதி விபத்துகளால் தினமும் சுமார் 9 பேர் உயிரிழந்ததாகவும், இந்த எண்ணிக்கை 4 ஆகக் குறைக்கப்பட்டு தற்போது 2 ஆகக் குறைந்துள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் கூறினார்.

மேலும், வீதி விபத்துகளால் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 பேர் வரை நிரந்தர மாற்றுத்திறனாளிகளாக ஆவதாகவும், யுத்தத்தின் போது நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 பேர் வரை உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்ட வாகன சோதனை நடவடிக்கைகள் காரணமாக, கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று எந்தவொரு வாகன விபத்துகளும் பதிவாகவில்லை என்றும், இது ஒரு சிறப்பு வாய்ந்த நிகழ்வு என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்