இலங்கை: சீனாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள் கடன் பொறியில் சிக்க வைக்கப் போகிறதா?

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அதிகாரப்பூர்வ சீன விஜயத்தில், இலங்கைக்கு பாரிய நேரடி முதலீடுகள் கிடைத்துள்ளன

பட மூலாதாரம், SRI LANKA PMD

படக்குறிப்பு, சீன அதிபர் ஷி ஜினபிங்குக்கும் மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அதிகாரப்பூர்வ சீன விஜயத்தில், இலங்கைக்கு பாரிய நேரடி முதலீடுகள் கிடைத்துள்ளன.

சீன அதிபர் ஷி ஜினபிங்குக்கும் இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் ஜனவரி 16ஆம் தேதி நடந்த சந்திப்பை அடுத்தே இந்த முதலீடுகள் தொடர்பான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இதன்படி, இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஹம்பாந்தோட்டையில் புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு, சினொபெக் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சீன விஜயம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த 13ஆம் தேதி சீனாவுக்கு பயணமாகியிருந்தார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், கடந்த மாதம் தனது முதல் வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு சென்ற அநுர குமார திஸாநாயக்க, இரண்டாவது வெளிநாட்டு விஜயமாக சீனாவுக்கு பயணித்துள்ளார்.

சீனா சென்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு, சீனாவில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சீன அதிபர் மற்றும் இலங்கை ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் நேற்றைய தினம் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

அபிவிருத்தியின் புதிய யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன அதிபர் அப்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், நெருங்கிய நட்பு நாடு என்ற விதத்தில் சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த சீன அதிபர், எதிர்காலத்தில் இலங்கையுடன் இணைந்து செயல்படத் தயார் எனவும் உறுதி வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த 13ம் தேதி சீனா நோக்கி பயணமாகியிருந்தார்.

பட மூலாதாரம், SRI LANKA PMD

படக்குறிப்பு, சீனா சென்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு, சீனாவில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அப்போது, ”இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, கலாசார, அரசியல் தொடர்புகள் குறித்து மிக முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் 15 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. இந்த 15 புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் எமது நாட்டின் பொருளாதாரத்திற்கும், கல்வி, ஊடகம், கலாசாரம் ஆகியவற்றுக்கும் மிக முக்கியமான,” என்று தெரிவித்தார்.

மேலும், “இதன் ஊடாக இலங்கைக்கு பாரிய நன்மைகள் எதிர்காலத்தில் கிடைக்கும். சீன அரசின் ஒத்துழைப்புக்களை தொடர்ச்சியாக வழங்குவதாக சீன அதிபர் உறுதியளித்தார். சீனா தொடர்ச்சியாகப் பல்வேறு விதத்தில் உதவிகளை வழங்குவதாக எம்மிடம் உறுதியளித்தது. சீனாவுடனான உறவை இலங்கை மேலும் வலுப்படுத்தும் என உறுதி வழங்கப்பட்டது.” என்று விஜித்த ஹேரத் குறிப்பிடுகிறார்.

கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் என்ன?

சீனாவுடனான உறவை இலங்கை மேலும் வலுப்படுத்தும் என உறுதி வழங்கப்பட்டது.' என விஜித்த ஹேரத் குறிப்பிடுகின்றார்.

பட மூலாதாரம், SRI LANKA PMD

சீனாவுடன் கைச்சாத்திடப்படும் உடன்படிக்கைகள் குறித்து, இலங்கை அரசாங்கம் கடந்த 6ஆம் தேதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது தீர்மானங்களை எட்டியிருந்தது.

இதன்படி, இலங்கை அரசு ‘ஒரே சீனா கொள்கையை’ தொடர்ச்சியாகக் கடைப்பிடித்தல் என அமைச்சரவை தீர்மானித்திருந்தது.

‘இலங்கை அரசு ‘ஒரே சீனா கொள்கையை’ தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வந்துள்ளதுடன், அதன்மூலம் சட்டரீதியான சீனாவாக மக்கள் சீனக் குடியரசை மாத்திரம் ஏற்றுக்கொள்வதுடன், தாய்வான் சீனாவின் ஒரு மாநிலம் மாத்திரமே என ஏற்றுக்கொள்வதெனும் நிலைப்பாடாகும். இலங்கை அரசு குறித்த கொள்கையை அவ்வகையிலேயே தொடர்ந்தும் கடைபிடித்து அதற்கிணங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வருமானம் குறைந்த மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள், பொருத்து வீடுகள் அரசி போன்ற உதவிகளை வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பட மூலாதாரம், SRI LANKA PMD

படக்குறிப்பு, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் சீன மக்கள் குடியரசு நிறுவனத்துக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டுள்ளது.

இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்,

  • சீன ஊடகக் குழுமம் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடல்.
  • சீன சுங்கக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இடையீட்டில் இலங்கையிலிருந்து கோழி இறைச்சி சீனாவுற்கு ஏற்றுமதி செய்வதற்கான நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கை முறைகளுக்கு அமைய மேற்கொள்வதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடல்.
  • இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறியளவிலான மீனவர்களுக்கு 35.7 மில்லியன் யுவான்கள் செலவில் சீனாவினால் அவசர உதவிகள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிடுதல்
  • இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வருமானம் குறைந்த மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள், பொருத்து வீடுகள் அரசி போன்ற உதவிகளை வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் சீன மக்கள் குடியரசு நிறுவனத்துக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இலங்கை தேசிய தொலைக்காட்சி, தேசிய வானொலி இலங்கை ஊடக அமைச்சு, வரையறுக்கப்பட்ட ஐக்கிய பத்திரிகை கம்பனி ஆகியவற்றுக்கும், சீனாவின் தேசிய தொலைக்காட்சி, வானொலி, சீன சிங்குவா பத்திரிகை முகவர் நிறுவனம், சீன ஊடகக் குழுமம் ஆகியவற்றுக்கும் இடையில் பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுவதாக இலங்கை அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

சினொபெக் நிறுவனத்துடன் பாரிய முதலீட்டுக்கான உடன்படிக்கை

சீனாவின் எரிபொருள் முன்னணி நிறுவனமாக திகழும் சினொபெக் சர்வதேச பெற்றோலிய நிறுவனத்துடன், இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று (16) உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளது.

பட மூலாதாரம், SRI LANKA PMD

படக்குறிப்பு, இந்த உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கைக்கு நேரடியாக 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடு கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

சீனாவின் எரிபொருள் முன்னணி நிறுவனமாகத் திகழும் சினொபெக் சர்வதேச பெற்றோலிய நிறுவனத்துடன், இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று (16) உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கைக்கு நேரடியாக 3.7 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடு கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இரண்டு லட்சம் கொள்ளளவு கொண்ட எரிபொருள் தாங்கிகளைக் கொண்டுள்ளதுடன், அவற்றில் பெருமளவை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவிடம் இருந்து இலங்கைக்குக் கிடைத்த இந்தப் புதிய முதலீட்டின் ஊடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதுடன், ஹம்பாந்தோட்டையில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பலப்படுத்தும் என அரசாங்கம் தெரிவிக்கிறது.

இந்த முதலீட்டின் நன்மைகள் மிக விரைவில் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்கு நாட்டை தாரைவார்க்கும் முயற்சி?

அரச நிறுவனங்களை சீன மயப்படுத்தும் திட்டங்கள் இங்கே மறைமுகமாக காய் நகர்த்தப்படுகின்றன. அதில் ஒன்று தான் அரச ஊடகங்கள், சீன ஊடகங்களுடன் செய்துக்கொள்ளும் ஒப்பந்தங்கள்.

பட மூலாதாரம், SRI LANKA PMD

படக்குறிப்பு, இம்முறை கடந்த அரசுகளைவிட, இந்த அரசின் அணுகுமுறை சற்று வித்தியாசமாக, முதலீடுகளை மையமாகக் கொண்டதாக இருக்கிறது.

இதுகுறித்துப் பேசியபோது, அரச நிறுவனங்களை சீனமயப்படுத்தும் திட்டங்கள் இங்கே மறைமுகமாக காய் நகர்த்தப்படுவதாக மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

”சீனா-இலங்கை உறவு என்பது மிக நீண்ட காலமானது. அநுர குமார திஸாநாயக்கவின் பதவிக் காலத்தில் அது மேலதிகமாக வருகிறது. இந்தியாவுடன் உறவைப் பேணும் தேவை அநுர குமாரவின் அரசுக்கு இருக்கின்ற அதேநேரம், சீனாவுடனும் உறவைப் பேணும் தேவை உள்ளது” என்கிறார் நிக்சன்.

அவரது கூற்றுப்படி, இம்முறை கடந்த அரசுகளை விட, இந்த அரசின் அணுகுமுறை சற்று வித்தியாசமாக, முதலீடுகளை மையமாகக் கொண்டதாக இருக்கிறது.

“அரச நிறுவனங்களை சீனமயப்படுத்தும் திட்டங்கள் இங்கே மறைமுகமாகக் காய் நகர்த்தப்படுகின்றன. அதில் ஒன்றுதான் அரச ஊடகங்கள், சீன ஊடகங்களுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள். இதற்கான அங்கீகாரம் அமைச்சரவையில் கடந்த வாரம் வழங்கப்பட்டது.

இப்போது ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதேபோல மேலும் பல அரச நிறுவனங்களும் ஒப்பந்தங்களைச் செய்து, வேலைத் திட்டங்களைப் பகிர்ந்துகொள்ளுவது, அறிவைப் பகிர்ந்துக்கொள்வது உள்ளிட்ட பல்வேறுப்பட்ட திட்டங்களுடன் வருகிறார்கள்” என்று குறிப்பிட்டார் அவர்.

அதோடு, இது இந்தியா இலங்கையுடன் செய்துகொள்ளவிருக்கும் எட்கா உடன்படிக்கைக்கு எதிராகச் செல்வதாகவும் நிக்சன் கூறினார். “இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையானது, தொழில்நுட்பம் சார்ந்ததாக உள்ளது. தொழில்நுட்பத் துறை சார்ந்தது என்பது மூலமாக அரச நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் இந்திய தொழில்நுட்ப முறைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன.

இதற்கான எதிர்ப்புகளை அப்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்கள் விடுதலை முன்னணி வெளியிட்டது. இப்போது தேசிய மக்கள் சக்தியாக அரசாங்கத்திலுள்ள நேரத்தில் எட்கா உடன்படிக்கையைக் கைச்சாத்திட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. விரும்பியோ விரும்பாமலோ கைச்சாத்திட வேண்டிய தேவை உள்ளது,” என்றார்.

மேலும், அதற்கு மாற்றீடாகத்தான் சீனாவுடன் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுகின்றதோ என்ற ஐயப்பாடு எழுந்திருப்பதாகக் கூறுகிறார் நிக்சன்.

“ஒரு பக்கம் இந்தியாவிடமும், மறுபக்கம் சீனாவிடமும் நாட்டைக் கையளிக்கின்ற ஒரு நிலைமைக்கு தேசிய மக்கள் சக்தி அரசு சென்றுள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் முற்று முழுதாக நாட்டை இந்தியாவிடமோ அல்லது சீனாவிடமோ தாரை வார்க்கும் திட்டங்களுக்குப் போகவில்லை. இது வித்தியாசமான அணுகுமுறையாக இருக்கிறது” என்றும் அ.நிக்சன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சீன விஜயம் தொடர்பான பொருளாதார நிபுணரின் பார்வை

பொதுவாக இந்த சீன முதலீடுகள் பலராலும் விமர்சன ரீதியில் பார்க்கக்கூடியதை அவதானிக்க முடிகின்றது. சீன முதலீடுகள் கடன் பொறியாக அமையக்கூடும் என ஒரு கருத்தும் இருக்கின்றது.

பட மூலாதாரம், SRI LANKA PMD

வெளிநாட்டு முதலீடுகளின் ஊடாக முறையான ஏற்றுமதி உற்பத்திகளை ஊக்குவிக்கும் திட்டங்களை மேற்கொண்டு, அந்த முதலீடுகளைச் சரியான முறையில் கையாளும் பட்சத்திலேயே, எதிர்காலத்தில் கடன் பொறிக்குள் சிக்காது முறையாக பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என கொழும்பு பல்கலைக் கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவிக்கிறார்.

அவரது கூற்றுப்படி, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் பொருளாதார ரீதியாக இலங்கையின் பொருளாதாரம் ஒரு நிலைபேற்றுத் தன்மையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில், இலங்கைக்கு மிக அத்தியாவசியமாக வெளிநாட்டு முதலீடுகள் தேவைப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக “இந்த முதலீடுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய, வர்த்தகரீதியில் மதிப்புமிக்க பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய துறைகளில் ஏற்பட வேண்டியது மிக அவசியம். அப்படி செய்கின்றபோதுதான் ஏற்றுமதிகளை அதிகரிக்க முடியும். அதேவேளை, வெளிநாட்டு செலாவணியை உழைக்க முடியும்” என்று விளக்கினார் கணேசமூர்த்தி.

அதாவது முதலீடுகளை கவர்கின்ற நாடுகள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை பொருத்து தான் இந்த முதலீட்டுக்கான நன்மை தீமைகள் அமையும்.

படக்குறிப்பு, கடன் பொறியில் இலங்கை எதிர்காலத்தில் சிக்காத ஒரு பொறிமுறையையும் அது ஏற்படுத்தக்கூடும் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி கூறுகிறார்.

இலங்கை இப்போது அந்நிய செலாவணியை உயர்த்துவதற்கான ஓர் உற்பத்திக் கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை. அதனாலேயே இந்த வெளிநாட்டு முதலீடுகள் மிக முக்கியமானதாக இருக்கின்றன.

“மேற்குலக நாடுகளிடம் இருந்து முதலீடுகள் வருகின்றதைப் போலவே, சீனா போன்ற நாடுகளிடம் இருந்தும் முதலீடுகள் வருகின்றன. இப்போது ஏற்பட்டிருக்கிற இந்தப் புதிய சூழ்நிலையின் கீழ் சீனாவிலிருந்து அதிகளவான முதலீடுகள் இலங்கைக்கு வரக்கூடிய ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி விஜயத்தின்போது அத்தகைய முதலீட்டுத் திட்டங்களுக்கான வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிவதாகத் தோன்றுகிறது” என்கிறார் கணேசமூர்த்தி.

ஆனால், பொதுவாக இந்த சீன முதலீடுகள் பலராலும் விமர்சன ரீதியில் பார்க்கக்கூடியதை அவதானிக்க முடிவதாகவும், சீன முதலீடுகள் கடன் பொறியாக அமையக்கூடும் என்ற ஒரு கருத்தும் இருப்பதாகக் கூறுகிறார் அவர்.

ஆனால், ஆபிரிக்க நாடுகள் உள்ளிட்ட ஏனைய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீன முதலீடுகளை சுயாதீனமாக ஆராய்ந்து கருத்துகளைத் தெரிவிக்கின்ற நிறுவனங்களின் கருத்துப்படி, சீன முதலீடுகள் கடன் பொறியாக அமைந்திருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் என்ற முடிவிற்குத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என விளக்குகிறார் கணேசமூர்த்தி.

அதாவது முதலீடுகளைக் கவர்கின்ற நாடுகள் அதை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதைப் பொருத்துதான் இந்த முதலீட்டுக்கான நன்மை தீமைகள் அமையும். இலங்கையைப் பொருத்தவரை முதலீடுகள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்ற காலம் இது.

ஆகவே, “இந்த காலப் பகுதியில் வருகின்ற முதலீடுகளை மிகக் கவனமாகப் பயன்படுத்தி, வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற, அதிக விலைக்கு வெளிநாடுகளில் விற்பனை செய்யக்கூடிய பொருட்களைத் தயாரிக்க ஏதுவாக இலங்கையின் உற்பத்திக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் வகையில் இந்த முதலீடுகளைக் கொண்டு வருவது முக்கியமானது.

உயர் விலைக்கு விற்பனை செய்யக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் வகையான திட்டங்களை உருவாக்குவதன் ஊடாகவே, பொருளாதார மீட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும். கடன் பொறியில் இலங்கை எதிர்காலத்தில் சிக்காத ஒரு பொறிமுறையையும் அது ஏற்படுத்தக்கூடும்” என கொழும்பு பல்கலைக் கழக பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி விளக்கினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு