பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் இடம்பிடித்த நடிகர் சந்தானம் சிம்புவின் மன்மதன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.
ஒரு கட்டத்தில் நகைச்சுவை நடிகராக நடிக்க மாட்டேன், இனிமேல் நடித்தால் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என முடிவெடுத்த சந்தானம் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் அவர் நினைத்த அளவிற்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான ”மத கஜ ராஜா” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானம்,வரலஷ்மி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
இப் படத்தினை, கடந்த 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால் சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இதனால் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் படத்தினை இந்த ஆண்டு பொங்கலுக்கு படக்குழு வெளியிட்டது.
படம் பார்த்த ரசிகர்கள் பலரும் சந்தானம் மீண்டும் நகைச்சுவை நடிகராக நடித்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் நடிகர் சந்தானம் அளித்த பேட்டி ஒன்றில் தான் நகைச்சுவை நடிகராக இனிவரும் நாட்களில் நடிக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.