எல்ல வரையிலான மலையக ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகளை உள்ளடக்கிய பாரிய மோசடி ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த பிரபலமான சுற்றுலாப் பாதைக்கான இ-டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 42 வினாடிகளில் வியக்கத்தக்க வகையில் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இது மோசடி நடைமுறைகள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (15) கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இணைத் தலைவர் அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டதுடன், இ-டிக்கெட் மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சில குழுக்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் கிடைக்கக்கூடிய அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
2,000 ரூபாவான டிக்கெட் விலை 16,000 ரூபாவுக்கு இவ்வாறு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் எல்ல ரயில் நிலையங்களுக்கு அருகில் முச்சக்கர வண்டிகளை இயக்கும் சில நபர்கள் இந்த மோசடிக்கு உடந்தையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட பயணத் திகதிகளுக்கான இ-டிக்கெட்டுகளை ரயில்வே திணைக்களம் ஒரு மாதத்திற்கு முன்பே வெளியிடுகிறது, ஆனால் இந்த டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட சில நொடிகளில் தொடர்ந்து விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் பிரதியமைச்சர் விளங்கப்படுத்தினார்.
மேம்பட்ட கணினி கல்வியறிவு கொண்ட தனிநபர்கள் அல்லது குழுக்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்ற சந்தேகத்தை இது தூண்டியுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், விசாரணை அறிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது.
இப்போதைய சூழ்நிலையால் டிக்கெட் முறையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை குறைவதாகக் கூறிய அவர், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.