இந்தியாவில் பெண் விளையாட்டு வீரர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் கௌரவிப்பதற்கும் பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை (ISWOTY) விருது ஐந்தாவது முறையாக வழங்கப்படவுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஐந்து வீராங்கனைகள்: கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் மனு பாக்கர் மற்றும் அவ்னி லேகரா, கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஆகியோர் விளையாட்டில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பரிந்துரைகளை அனுபவமிக்க விளையாட்டுப் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களை உள்ளடக்கிய நடுவர் குழு வழங்கியுள்ளது.
2023 அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2024 செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் சிறந்து விளங்கிய ஐந்து இந்திய விளையாட்டு வீராங்கனைகளை தேர்வு குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.
அனைவரும் தங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீராங்கனைக்கு வாக்களிக்க வரவேற்கப்படுகின்றனர். உங்கள் வாக்குகளை பிபிசியின் இந்திய மொழிகள் அல்லது பிபிசி ஸ்போர்ட் இணையதளங்களில் செலுத்தலாம்.
மக்களின் அதிக வாக்குகளைப் பெறுபவர், பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதைப் பெறுவார். இதன் முடிவுகளை பிபிசி இந்திய மொழிகளின் இணையதளங்கள் மற்றும் பிபிசி ஸ்போர்ட் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பிபிசி இந்திய மொழிகள் மற்றும் பிபிசி ஸ்போர்ட் இணையதளங்களில் இப்போது வாக்களிப்பு தொடங்கியுள்ளன. இந்திய நேரப்படி ஜனவரி 31 இரவு 11.30 மணி வரை இந்த இணைப்பு செயல்படும்.
பிப்ரவரி 17 அன்று டெல்லியில் நடைபெறும் பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது விழாவில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
அனைத்து நிபந்தனைகள் மற்றும் விதிகள், தனியுரிமை நோட்டீஸ் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களால் வாக்களிக்கப்பட்ட விருது மட்டுமின்றி, மேலும் மூன்று விருதுகளும் விழாவில் வழங்கப்படும். இளம் விளையாட்டு வீராங்கனையின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பிபிசி இளம் விளையாட்டு வீராங்கனை விருது ஒருவருக்கும், விளையாட்டுத் துறையில் இணையற்ற பங்களிப்பைச் செய்த வீராங்கனை ஒருவருக்கு, பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது, பாரா விளையாட்டில் சிறந்து விளங்கிய வீராங்கனைக்கு பிபிசி பாரா விளையாட்டு வீராங்கனை விருது ஆகியவையும் வழங்கப்படும்.
இந்த ஆண்டில், கூடுதலாக ‘சாம்பியன்களின் சாம்பியன்’ என்ற தலைப்பில் விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்கிய ஆளுமைகளின் பங்களிப்புகளை வெளிக்காட்டும் வகையில் ஒரு சிறப்பு ஆவணப்படமும், சிறப்பு செய்திகளும் வெளியிடப்படவுள்ளன.
பரிந்துரைக்கப்பட்ட வீராங்கனைகள் பற்றிய தகவல்
அதிதி அசோக். 26 வயதாகும் இவர் பெண்கள் கோல்ஃப் விளையாட்டில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம். தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் தேர்வான முதல் இந்திய கோல்ஃப் பெண் வீரர் ஆவார்.
இவர், 18 வயதில், 2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய இளம் கோல்ஃப் வீரர்களில் ஒருவர். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தைப் பிடித்து பதக்கத்தை தவறவிட்டாலும், அதுவே கோல்ஃப் விளையாட்டில் இதுவரை இந்தியாவின் சிறப்பான ஆட்டமாகும்.
கடந்த 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இருப்பினும், 2024இல் தனது மூன்றாவது ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். லேடீஸ் ஐரோப்பிய டூர்(LET) போட்டிகளில் ஐந்து முறை வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மதிப்புமிக்க அர்ஜுனா விருது பெற்றுள்ள அதிதி, இந்தியாவில் மகளிர் கோல்ஃப் விளையாட்டில் மிளிர்ந்து வருகிறார்.
மனு பாக்கர். 22 வயதாகும் இவர் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் ஆவார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
கடந்த 2020 ஒலிம்பிக் போட்டியில் அவரது துப்பாக்கி செயலிழந்ததை அடுத்து, அவர் பதக்கத்தைத் தவறவிட்டார். அதன் பிறகு, அவரது நெடுநாள் பயிற்சியாளரான ஜஸ்பால் ரானாவுடன் இணைந்து 2024 ஒலிம்பிக் போட்டிக்கு பயிற்சி பெற்றார்.
கடந்த 2018ஆம் ஆண்டில், தனது 16 வயதில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளம் இந்திய துப்பாக்கி சுடும் வீரர் என்ற வரலாற்றை உருவாக்கினார். மனு பல உலகக்கோப்பை போட்டிகளில் பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.
அர்ஜுனா விருதைப் பெற்ற மனு, 2021ஆம் ஆண்டில் பிபிசியின் வளர்ந்து வரும் வீராங்கனை விருதையும் பெற்றார். இவருக்கு 2025 ஜனவரி 17 அன்று இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.
அவ்னி லேகரா. 23 வயதான அவ்னி ஒரு பாரா விளையாட்டு நட்சத்திரம். மூன்று பாராலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை இவர் ஆவார். 2020 பாராலிம்பிக் போட்டிகளில், ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
அதைத் தொடர்ந்து 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றார்.
கடந்த 2015ஆம் ஆண்டு கோடைக்கால விடுமுறையில் அவ்னிக்கு பொழுதுபோக்காக அறிமுகப்படுத்தப்பட்டது துப்பாக்கி சுடுதல். விரைவிலேயே போட்டிகளில் கலந்து கொண்டு துப்பாக்கி சுடுதலில் தனக்கான அடையாளத்தை உருவாக்கினார்.
கடந்த 12 ஆண்டுகளாக விளையாடும் அவர் மூன்று உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். சிறந்த சாதனைகளுக்காக, அவ்னிக்கு பத்மஸ்ரீ மற்றும் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்மிருதி மந்தனா. 28 வயதாகும் இவர் இந்தியாவின் முன்னணி பெண் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். 2024இல், இதுவரை இல்லாத வகையில் ஒரே ஆண்டில் 1659 ரன்கள் குவித்துள்ளார். நான்கு ஒருநாள் சர்வதேச (ODI) சதங்கள் விளாசி, எந்த பெண் கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கேப்டனாக மகளிர் பிரீமியர் லீக் 2024 கோப்பையை இவர் வென்றுள்ளார். 2020 டி20 உலகக்கோப்பை மற்றும் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் சர்வதேச உலகக்கோப்பை இறுதிச்சுற்றுக்குத் தேர்வான இந்திய அணியில் அவர் இடம் பெற்றிருந்தார்.
கடந்த 2018 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஐசிசி சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக ஸ்மிருதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரிக்கு பிறகு, இந்தப் பட்டத்தை இரண்டாவது முறையாகப் பெறுபவர் இவரே. இந்தியாவின் விளையாட்டுக்கான உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருதை அவர் பெற்றுள்ளார்.
வினேஷ் போகாட். 30 வயதாகும் இவர் மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் களம் கண்டுள்ளார். இந்தியாவின் சிறந்த மல்யுத்த வீரர்களில் ஒருவர். 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்த விளையாட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றைப் படைத்தார். எனினும் உடல் எடை காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த 2019 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் விளையாட்டுகளில் மூன்று முறை தங்கம் வென்றுள்ளார் வினேஷ். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கமும் வெண்கலமும் வென்றுள்ளார்.
இந்திய மல்யுத்த அமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர். பெண் மல்யுத்த வீரர்களை பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர் அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்து வருகிறார்.
இவர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினராக 2024இல் ஹரியாணாவில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த விருது, இந்தியாவில் உள்ள பெண் விளையாட்டு வீரர்களின் சாதனைகளைக் கௌரவிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் 2019இல் நிறுவப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். அந்த ஆண்டுக்கான வெற்றியாளராக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து அறிவிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டுக்கான வெற்றியாளராக உலக சதுரங்க சாம்பியன் கொனேரு ஹம்பி அறிவிக்கப்பட்டார்.
கடந்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்டில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதைப் பெற்றார்.
மேலும், வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருதை கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மா மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோர் பெற்றுள்ளனர்.
தடகள வீராங்கனைகளான பி.டி.உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ், பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, ஹாக்கி வீராங்கனை ப்ரீதம் சிவாச் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றுள்ளனர்.
கடந்த முறை, நடுவர்கள் குழுவின் பரிந்துரைக்குப் பின்னர், பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக, பிபிசியின் சிறந்த பாரா விளையாட்டு வீராங்கனை விருது அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா பட்டேலுக்கு இந்தப் பிரிவுக்கான முதல் விருது வழங்கப்பட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு