சைஃப் அலி கான்: நவாப் குடும்பத்தில் பிறந்து பாலிவுட் நடிகர் ஆனதன் பின்னணி
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மும்பையில் அவரது வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். தற்போது சைஃப் அலிகான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இன்று (ஜன. 16) அதிகாலை 2.30 மணியளவில் மும்பை பாந்த்ரா குடியிருப்புப் பகுதியில் இருக்கும் சைஃப் அலி கானின் வீட்டில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரி தீக்ஷித் கோடம் பிபிசி மராத்தியிடம், “சைஃப் அலி கானின் வீட்டுக்குள் அடையாளம் தெரியாத நபர் நுழைந்தார். அதன் பிறகு, சைஃப் மற்றும் இந்த நபருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், சைஃப் அலி கான் காயமடைந்துள்ளார், அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
ஒருவர் சைஃப் அலி கானின் வீட்டுக்குள் நுழைந்து அவரது வீட்டு உதவியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்றும் அப்போது , சைஃப் அலிகான் தலையிட முயன்றபோது, அந்த நபர் அவரைத் தாக்கினார் என்றும் மும்பை காவல்துறை கூறியதாக செய்தி நிறுவனமான ஏஎன்ஐ குறிப்பிடுகிறது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின்படி, சைஃப் அலி கான் மற்றும் அவரது மனைவி கரீனா கபூரின் பாந்த்ரா வீட்டுக்கு இரவு 2.30 மணியளவில் ஒருவர் நுழைந்தார். இந்த நேரத்தில் சைஃப் அலிகான் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார்.
அந்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் , தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வருவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை என்ன சொன்னது?
சைஃப் அலி கான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நீரஜ் உத்தாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சைஃப் அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டார். அவர் காலை 3.30 மணியளவில் லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு ஆறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன, அதில் இரண்டு ஆழமான காயங்கள் உள்ளன. ஒரு காயம் முதுகுத்தண்டின் அருகே உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காலை 5.30 மணிக்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டதாக மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “அவருக்கு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதின் டாங்கே, காஸ்மெடிக் சர்ஜன் டாக்டர் லீனா ஜெயின், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் நிஷா காந்தி ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காயம் எவ்வளவு ஆழமானது என்பது அறுவை சிகிச்சைக்குப் பிறகு தெரியவரும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைஃப் குழுவின் அதிகாரபூர்வ அறிக்கை
இந்த விவகாரத்தைக் காவல்துறை விசாரித்து வருகிறது என்றும் ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் நடிகர் சைஃப் அலிகான் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சைஃப் அலிகான் தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சைஃப் அலிகான் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. தற்போது அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. ஊடகங்களும் ரசிகர்களும் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது ஒரு போலீஸ் விவகாரம். நாங்கள் அவ்வபோது உங்களுக்குத் தகவல்களை தெரிவிப்போம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரை தவிர குடும்பத்தில் மற்றவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக அவரது மனைவியும் நடிகையுமான கரீனா கபூரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர் கருத்து
இச்சம்பவம் தொடர்பாக, தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர் கருத்து தெரிவித்துள்ளனர்.
“சைஃப் அலிகான் தாக்கப்பட்டது குறித்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவர் விரைந்து குணமடைய வேண்டும்” என சிரஞ்சீவி தெரிவித்தார்.
“சைஃப் அலிகான் தாக்கப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்” என ஜூனியர் என்.டி.ஆர். தெரிவித்துள்ளார்.
இரவில் இந்தச் சம்பவம் நடந்தபோது சைஃப் அலி கானை தவிர, அவரது குடும்பத்தினரும் வீட்டில் இருந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, அனைவரும் பாதுகாப்பாகவும் நலமாகவும் உள்ளனர்.
சைஃப் அலி கான் புகழ்பெற்ற பட்டோடி குடும்பத்தில் பிறந்தவர். அரச பாரம்பரியம் மற்றும் ஆடம்பரத்திற்குப் பெயர் பெற்ற அவர்களின் குடும்பச் சூழல், அவரது வாழ்க்கையிலும் தொழிலிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
சைஃப் அலி கானின் தந்தை மன்சூர் அலி கான் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் பட்டோடி குடும்பத்தின் வாரிசு. அதேநேரம் அவரது தாய் ஷர்மிளா தாகூர், புகழ்பெற்ற பாலிவுட் நடிகைகளுள் ஒருவர். அது மட்டுமின்றி, நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் உறவினரும்கூட.
சுதந்திரத்திற்குப் பிறகும்கூட, அதாவது 1971 வரை, மன்சூர் அலி கான், ஆங்கிலேயர் காலத்தில் இருந்த பட்டோடி சமஸ்தானத்தின் நவாப் பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டார். இதற்குப் பிறகு இந்திய அரசு அனைத்து சமஸ்தானங்களையும் ஒழித்தது.
சைஃப் அலி கான் யார்?
அவர்கள் குடும்பத்தின் வரலாறு 200 ஆண்டுகளுக்கும் மேலானது. குருகிராமில் இருந்து 30-35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டோடி எனும் ஊரில் கட்டப்பட்ட வெள்ளை அரண்மனை பட்டோடி குடும்பத்தின் சின்னமாக அறியப்படுகின்றது.
கடந்த 2011இல் மன்சூர் அலி கான் இறந்த பிறகு, ஹரியாணாவின் பட்டோடி கிராமத்தில் சைஃப் அலி கான் முடிசூட்டப்பட்டு, அவரது குடும்பத்தின் 10வது நவாப் ஆனார்.
சைஃப் அலி கான் இப்போது பட்டோடி குடும்பத்தின் தலைவராகக் கருதப்படுகிறார். தற்போது “நவாப்” என்பது அதிகாரப்பூர்வமான பொறுப்பு இல்லை என்றாலும், பாலிவுட்டில் உள்ளவர்கள் அவரை “சோட் நவாப்” (இளம் நவாப்) என்று அழைக்கிறார்கள்.
பாரம்பரியமிக்க குடும்பப் பின்னணி
கடந்த 1960களில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராகப் பொறுப்பேற்ற மன்சூர் அலி கான் பட்டோடி, இந்தியாவுக்காக 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார், அதில் 40 டெஸ்ட் போட்டிகளில் அவர் கேப்டனாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 21 வயதில் அவருக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
அவரது தந்தை, அதாவது சைஃப் அலி கானின் தாத்தா இப்திகார் அலி கான் பட்டோடி, சுதந்திரத்திற்கு முன்பு இந்திய டெஸ்ட் அணியில் உறுப்பினராக இருந்தார்.
சைஃப் அலி கானின் உறவினர்களில் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய உயரதிகாரி ஷேர் அலி கான் பட்டோடியும் ஒருவர். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஷஹ்ரியார் கானும் சைஃப் அலி கானின் உறவினர்களில் ஒருவர்.
மன்சூர் அலிகான் பிரபல பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூரை 27 டிசம்பர் 1969 அன்று திருமணம் செய்தார். 1970ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி பிறந்த சைஃப் அலி கான், கிரிக்கெட் மற்றும் திரைப்படங்களுக்கு இடையே தனது குழந்தைப் பருவத்தை கழித்தார்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த சைஃப் அலி கான், பிரிட்டனில் உள்ள வின்செஸ்டர் கல்லூரியிலும் படித்தார்.
தி கிரேட் இந்தியன் கபில் ஷோ-2 எனும் நிகழ்ச்சியில், சயீஃப் அலி கான் ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரின் மகனாக இருந்தாலும் கிரிக்கெட்டை தனது வாழ்க்கையாக மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறினார்.
அதற்குக் காரணம், ஆராதனா, அமர் பிரேம் போன்ற பல சிறந்த பாலிவுட் படங்களைத் தந்த அவரது தாயார் ஷர்மிளா தாகூர். “எனது தாயார் ஷர்மிளா தாகூரிடம் இருந்து நான் நடிப்புக்கான மரபணுக்களைப் பெற்றுள்ளேன்” என்று இந்த நிகழ்ச்சியில் சைஃப் கூறியிருந்தார்.
அவர் தனது தந்தையின் கிரிக்கெட் பாரம்பரியத்தை மதிப்பதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அவரது தாயார் ஷர்மிளா தாகூர் சினிமா உலகில் ஏற்படுத்திய தாக்கம் அவரை நடிப்புத்துறையை நோக்கி ஈர்த்தது.
தனது தந்தையைப் போல் தன்னால் விளையாட முடியாது எனக் கருதியதால்தான் கிரிக்கெட்டை நோக்கிச் செல்லவில்லை என்று இதற்கு முன்பும் சைஃப் கூறியிருந்தார்.
ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த திரைப்பட வாழ்க்கை
சைஃப் அலிகானின் 30 ஆண்டுகால திரையுலக வாழ்க்கை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது. 1993ஆம் ஆண்டு ‘பரம்பரா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால், இந்தப் படம் பெரியளவில் சாதிக்கவில்லை.
சைஃப் பல தோல்விப் படங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ‘ஆஷிக் அவரா’ என்ற படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டதுடன், ஃபிலிம்பேர் விருதையும் பெற்றார். இதனுடன், ஒரு நடிகராக அவரது திறமைகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
“உங்களது பெற்றோர் இருவரும் இளம் வயதிலேயே வெற்றி பெற்றனர். ஆனால் நீங்களும் வெற்றி அடைய அதிகம் போராட வேண்டியுள்ளது, அதுகுறித்து உங்களது கருத்து என்ன?” என்று சைஃப் அலி கானிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டது.
“இதற்கு என்னிடம் பதில் இல்லை, ஆனால் ஒவ்வொருவரின் பாதையும் வித்தியாசமாக இருப்பதாக உணர்கிறேன். குறைந்தபட்சம் நான் சரியான வேலையைத் தேர்வு செய்துள்ளேன் என்று எனக்குத் தெரியும். நான் அதை மிகவும் ரசிக்கிறேன், வெற்றியடைகிறேனோ இல்லையோ, நான் அதைப் பெறுவேன் என்று நம்புகிறேன். ஆனால் நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று இக்கேள்விக்கு சைஃப் பதிலளித்தார்.
படிப்படியாக படங்களில் நடிப்பதற்கான ஒவ்வொரு வழியையும் சைஃப் அலி கான் பின்பற்றத் தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு படங்களிலும் ஓடிடி தொடர்களிலும் நடித்து வந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப் படம் ‘விக்ரம் வேதா’வின் ஹிந்தி ரீமேக் படத்தில் சைஃப் அலி கான் நடித்திருந்தார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் அவர், சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார்.
அவர் 2012ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தைமூர் அலி கான் பட்டோடி என்ற மகனும் உள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு