அலங்காநல்லூர்: இன்பநிதி இயக்கிய ட்ரோன் கேமரா வாடிவாசலில் விழுந்ததால் பரபரப்பு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் துணை முதல்வர் உதயநிதியின் மகன் இயக்கிய ட்ரோன் கேமரா வாடிவாசலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி இன்று (ஜன.16) காலையில் தொடங்கி வைத்தார். அவருடன் ஜல்லிக்கட்டு போட்டியை காண அவர் மகன் இன்பநிதியும் வந்திருந்தார். உதயநிதியும், இன்பநிதியும் முன்வரிசையில் அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர். ஜல்லிக்கட்டுப் போட்டி ட்ரோன் கேமராவில் படம்பிடிக்கப்பட்டது.
இந்த ட்ரோனை உதயநிதி அமர்ந்திருந்த மேடையில் இருந்தவர்கள் ரிமோட் மூலம் இயக்கி கொண்டிருந்தனர். அந்த ரிமோட்டை உதயநிதி வாங்கி கொஞ்ச நேரம் மேடையில் இருந்தபடி ட்ரோன் கேமராவை இயக்கினார். பின்னர் இன்பநிதி கொஞ்ச நேரம் ட்ரோன் கேமராவை இயக்கினார். அப்போது எதிர்பாராவிதமாக ட்ரோன் கேமரா திடீரென வாடிவாசல் முன்பு தரையில் விழுந்தது. அதை மாடுபிடி வீரர் ஒருவர் எடுத்து வந்து திரும்ப ஒப்படைத்தார். இதனால் வாடிவாசலில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே ட்ரோன் கேமராவை இயக்கிக் கொண்டிருந்தது இன்பநிதி என்பது தெரியாமல், அறிவிப்பாளர், ‘யாராப்பா ட்ரோன் இயக்குவது, பார்த்து இயங்குங்கப்பா’ என்று சொல்ல அங்கு சிரிப்பலை எழுந்தது.
இன்பநிதி ஜல்லிக்கட்டு பார்க்க தனது நண்பர்கள் 4 பேரையும் உடன் அழைத்து வந்திருந்தார். ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் உதயநிதியுடன் சேர்ந்து இன்பநிதியும் பரிசுப் பொருட்களை வழங்கினார். ஜல்லிக்கட்டு காளைகள் மாடுபிடி வீரர்கள் மீது சீறிப்பாய்வதையும், காளைகளிடம் சிக்காமல் மாடுபிடி வீரர்கள் தரையில் படுத்து தப்பிப்பதையும் இன்பநிதி ஆச்சரியத்துடன் பார்த்தார்.
அந்தக் காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்தார். அவருக்கு ஜல்லிக்கட்டு மகத்துவம் குறித்து உதயநிதி விவரித்தார். உதயநிதியும், இன்பநிதியும் சுமார் 3 மணி நேரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்டனர்.