அலங்காநல்லூரில் மாடுபிடி வீரராக களமிறங்க வந்த வெளிநாட்டு ஆர்வலர் தகுதி நீக்கம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரராக களமிறங்க வந்த வெளிநாட்டு ஆர்வலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அயர்லாந்து நாட்டிலிருந்து அந்தோணி கான் லான் (53) என்பவர் அடிக்கடி வருவது வழக்கம். ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வத்துடன் கண்டுகளித்த பின் மாடுபிடி வீரராக களமிறங்க முடிவு செய்தார்.இதற்காகவே அவர் கடந்த 15 ஆண்டுகளாக சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். மாடு வீரராக களமிறங்க பல்வேறு பயிற்சிகளையும் மேற்கொண்டார்.
இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக களமிறங்க ஆன்லைன் மூலம் தனது பெயரை பதிவு செய்து இருந்தார். இன்று ஜல்லிக்கட்டு திடலுக்கு வந்து உடல் தகுதி தேர்வில் பங்கேற்று அதில் தேர்வானார். பின்னர் வயதை காரணம் காட்டி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.மாடுபிடி வீரர்களுக்கு 40 வயது இருக்க வேண்டும். ஆனால், அந்தோணிக்கு 53 வயது என்பதால் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் அவர் கண்ணீர் விட்டு அழுதார். இது பிற மாடு பிடி வீரர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. இருப்பினும் ஜல்லிக்கட்டு போட்டி முழுமையாக பார்த்த பிறகே அவர் அலங்காநல்லூரில் இருந்து சென்றார்.