by wp_shnn

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ – காற்று வலுவிழந்ததால் தீயணைப்பு பணிகளில் முன்னேற்றம்!  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை அச்சுறுத்தி வரும் இரண்டு காட்டுத் தீயை தீவிரமாக்கி வந்த பலத்த காற்று தற்போது பலவீனமடைந்து உள்ளதால், தீயணைப்பு வீரர்களின் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அவர்களின் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில் ஒன்பது நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் இரு பெரும் காட்டுத் தீ இதுவரை மொத்தம் 40,000-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பை எரித்து நாசமாக்கியுள்ளது. 12,000-க்கும் அதிகமான கட்டமைப்புகள் தீயால் அழிக்கப்பட்டுள்ளன. காட்டுத் தீக்கு இதுவரை 25 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், தீப்பிழம்புகளை கொழுந்துவிட்டு எரியச் செய்து, மீட்பு பணிகளை பாதிக்கச் செய்த பலத்த காற்று தற்போது கொஞ்சம் தணிந்துள்ளது. இதனால் தீயை அணைக்கப் போராடி வரும் தீயணைப்பு வீரர்களின் பணிகளில் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. என்றாலும், ஈட்டன் மற்றும் பாலிசேட்ஸ் காட்டுத் தீ இன்னும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. தீயை அணைப்பதற்கு அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடாவில் இருந்து உதவிகள் கோரப்பட்டுள்ளது. ஈட்டன் தீயில் 45 சதவீதமும், பாலிசேட்ஸ் தீயில் 20 சதவீதமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை மையம் இன்னும் அபாய எச்சரிக்கையே விடுத்துள்ளது. அதன் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இன்றும் நாளையும் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் இருந்தாலும், இன்னும் சில பகுதிகளில் கவலைக்குரிய விஷயங்கள் தொடர்கின்றன” என்று தெரிவித்துள்ளது. இதனிடையே, காட்டுத் தீக்கு காரணமான சாண்டா அனா காற்றையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் காற்று மீண்டும் திரும்பவும் வரலாம் என்று கூறப்பட்டுள்ளதால், அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர், “பெரிய காட்டுத் தீயான பாலிசேட்ஸ் தீ அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த தீயின் சுற்றுப்புறம், உட்புறப்பகுதியில் இன்னும் கடுமையான வெப்பமும், ஆபத்துகளும் உள்ளன. தீயணை அணைக்கும் பணிகளில் 5,100 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 7-ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீ மளமளவென 50,000 ஏக்கர் அளவுக்கு பரவி உள்ளது. இதில் சுமார் 40,000 ஏக்கர் பரப்பளவு முழுமையாக தீயில் எரிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்