‘‘அமெரிக்காவை ஆட்சி செய்யப்போகும் சுயநலக்குழு’’ – இறுதி உரையில் பைடன் எச்சரிக்கை மிகப் பெரிய செல்வந்தர்களின் கைகளில் அமெரிக்காவின் ஆட்சி அதிகாரம் செல்வதால் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் நிகழ்த்திய தனது இறுதி உரையில் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து அவர் வரும் 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் நேற்று (புதன்கிழமை) நாட்டுமக்களுக்கு அதிகாரபூர்வ இறுதி உரையை நிகழ்த்தினார்.
அப்போது அவர், “இன்று அமெரிக்காவில் ஒரு அதீத செல்வம், அதிகாரம் மற்றும் செல்வாக்கு கொண்ட ஒரு சுயநலக்குழு உருவாகி வருகிறது. இது நமது முழு ஜனநாயகத்தையும், நமது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்களையும், அனைவரும் முன்னேறுவதற்கான நியாயமான வாய்ப்பையும் அச்சுறுத்துகிறது. ஒரு சில அதி-செல்வந்தர்களின் கைகளில் அதிகாரம் ஆபத்தான முறையில் குவிகிறது. அவர்களின் அதிகார துஷ்பிரயோகம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டுவிடும்.
1961 ஆம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்து விலகிய டுவைட் ஐசன்ஹோவர், ராணுவ-தொழில்துறை சக்திகளின் கூட்டு குறித்து எச்சரித்தார். அதை நினைவுகூற விரும்புகிறேன். அதேபோன்ற ஒரு அச்சுறுத்தல், தொழில்நுட்பம்-தொழில்துறை சக்திகளின் கூட்டு ஏற்படுத்துவதைக் கண்டு நான் கவலைப்படுகிறேன். விரைவான தொழில்நுட்பம் ஏற்படுத்தும் பொருளாதார மாற்றத்தின் கொந்தளிப்பான 10 ஆண்டுகளை நாம் கடந்துள்ளோம். இவ்விஷயத்தில், அமெரிக்கர்கள் தங்கள் சுதந்திரம் குறித்தும் தங்களின் நிறுவனங்கள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இது மத்திய கிழக்கில் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த ரத்தக்களரியை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும். அமெரிக்காவின் நலனுக்காக எங்கள் குழு செய்தவற்றின் முழு தாக்கத்தையும் உணர நேரம் எடுக்கும். ஆனால் விதைகள் நடப்பட்டுள்ளன. அவை வளரும். அவை வரவிருக்கும் பல பத்தாண்டுகளுக்கு பூத்துக்குலுங்கும்.
புதிய ஆட்சியாளர்களுக்கு அளிக்க வேண்டிய பல்வேறு விளக்கங்கள் முறைப்படி வழங்கப்படும். மத்திய கிழக்கு பேச்சுவார்த்தைகள் குறித்து வரவிருக்கும் நிர்வாகத்தை ஒருங்கிணைப்பது உட்பட அமைதியான அதிகார மாற்றம் உறுதி செய்யப்படும்.” என தெரிவித்தார்.
அதிபர் ஜோ பைடனின் அதிபர் பதவி மட்டமல்ல, அவரது 50 ஆண்டு கால அரசியல் வாழக்கையும் தற்போது முடிவடைய உள்ளது. 1972ம் ஆண்டு ஜோ பைடன் தனது 30ஆவது வயதில், தனது சொந்த மாநிலமான டெலாவேரில் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜோ பைடனின் இந்த உரையை, அவரது குடும்பத்தைச் சேர்ந்த முதல் பெண்மணி ஜில் பைடன், மகன் ஹண்டர், பேரக்குழந்தைகள், கமலா ஹாரிஸ், அவரது கணவர் டக் எம்ஹாஃப் உள்ளிட்டோர் கேட்டனர்.