by wp_fhdn

இம்முறை அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட சிகரெட் வரி அதிகரிப்பை புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக மது மற்றும் போதைப் பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு நாட்டில் முறையான வரி விதிப்பு முறையை பின்பற்றாமல்  சிகரெட்டுகளுக்கான வற் வரி 4.51 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமையால் சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் சுமார் 7,000 மில்லியன்  ரூபா மேலதிக இலாபத்தை ஈட்டியுள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

நேற்று  செவ்வாய்க்கிழமை (14)  மது மற்றும் போதைப் பொருள் தகவல் மையம் வெளியிட்டிருந்த விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மது மற்றும் சிகரெட் ஆகியன பொதுமக்களின் நுகர்வு பொருட்கள் அல்ல பாவனையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவற்றின் விலை அதிகரிப்பும் வரி விதிப்பும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மதுபான பாவனையால் இலங்கையில் வருடாந்தம் 15 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர்.

சிகரெட் பாவனையால் வருடாந்தம் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிப்பதால் வருடாந்தம் பலர் கடுமையான நோய் நிலைமைகளுக்கு ஆளாகுகின்றனர்.

புகையிலை மற்றும் மதுபான நிறுவனங்கள் ஆண்டுதோறும் தாம் இழந்து வரும் வாடிக்கையாளர்களை தக்கவைப்பதற்காக இந்நாட்டு சிறுவர்களை இவ்வாறான தகாத பழக்கவழக்கங்களுக்கு அடிமை படுத்துவதற்கான உத்திகளைக் கையாண்டு வருகின்றனர்.

இந்நாட்டில் தொற்றா நோய்களால் ஏற்படக்கூடிய இறப்பு சதவீதம் 80  அதிகரித்துள்ளது. சிகரெட் மற்றும் மது பாவனையே தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் மிக முக்கிய காரணிகளாகும். மது வரியை ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்தலாம் என்பது காலாவதியான யோசனையாகும்.

மதுபானத்தின் மீதான வரி வருமானம் மதுவினால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதாரச் செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலை  உள்ளதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

2022 ஆம் ஆண்டு மாத்திரம் மதுப்பழக்கத்தால் 237 பில்லியன் ரூபாய் பொருளாதார மற்றும் சுகாதார செலவுகள் ஏற்பட்டுள்ளதுடன், அவ் ஆண்டின் மது வரி மாத்திரம் 165.2 பில்லியன் ரூபாய்வாகா பதிவாகியுள்ளது.

நாட்டில் அண்மைக்காலமாக மது வரி அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. 2023 ஆம் ஆண்டு மது வரி 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அவ்வாண்டு மது நுகர்வு 8.3 மில்லியன் லீற்றர் குறைந்துள்ளதுடன், அரசாங்கத்தின் மதுபான உற்பத்தி வரி வருமானம் 11.6 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சிகரெட் வரி வருமானம் 7.7 பில்லியனாக அதிகரித்துள்ளதுடன், சிகரெட் விற்பனை 521.5 மில்லியனாகவும் குறைந்துள்ளது.

சந்தையில் அதிக அளவு விற்பனை செய்யப்படும் சிகரெட்டுகளுக்கான வற் வரி 4.51 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் விலை 10 ரூபாய் அதிகரித்துள்ளது.

முறையான வரி விதிப்பு இன்மையால்  சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள்  7,000 மில்லியன் ரூபா மேலதிக இலாபத்தை ஈட்டியுள்ளன.

புகையிலை நிறுவனங்களின் இத்தகைய அசுர வளர்ச்சி இந்நாட்டில் உள்ள  சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கின்றன.

குறித்த நிறுவனங்கள் தமது உற்பத்தி பொருட்களுக்கான விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளின் ஊடாக  கூடுதலான இலாபத்தை ஈட்டி வருகிறது.

இந்நிலைமை தவிர்ப்பதற்கு  பல ஆண்டுகளாக குரல் எழுப்பி வந்துள்ளோம். எனினும் இம்முறையும்  இந்த வரி உயர்வை சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டன.

தொடர்புடைய செய்திகள்