இருதரப்பு மற்றும் பல்தரப்பு உள்ளிட்ட சகல துறைகளிலும் ‘ஒரு சீன’ கொள்கையில் இலங்கை முன்னிற்கும்!-அநுர இருதரப்பு மற்றும் பல்தரப்பு உள்ளிட்ட சகல துறைகளிலும் ‘ஒரு சீன’ கொள்கையில் இலங்கை முன்னிற்கும். இலங்கையின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தியில் சீனா வரலாற்றுக் காலம் முதல் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. இந்த உத்தியோகபூர்வ விஜயம் சீனா – இலங்கை நாட்டு மக்களின் அடையாளம் மற்றும் அபிவிருத்திக்கு பலமுடையதாக அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கிடம் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதன்கிழமை (15) சீனக் குடியரசின் தலைவர் சீ ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
சீன குடியரசின் ஜனாதிபதியுடன் பீஜிங் தலைநகரில் உள்ள சீன மக்கள் மண்டபத்தில் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இலங்கையுடனான உறவு தொடர்பில் உரையாற்றியதன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீன விஜயத்தின் நோக்கம் மற்றும் எதிர்கால திட்டங்களை தெளிவுப்படுத்தி உரையாற்றினார்.
பொருளாதார கைத்தொழில் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்தி ஆகியவற்றில் சீனாவின் அபரிமிதமான முன்னேற்றம் குறித்து இலங்கை மிகவும் மகிழ்ச்சியடைகிறது. எமது அரசாங்கம் இருதரப்பு மற்றும் பலதரப்பு உட்பட அனைத்து துறைகளிலும் சீனாவின் கொள்கையுடன் முன்நிற்கிறது.
பல தசாப்தங்களாக இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் சீனா முக்கிய பங்கை ஆற்றி வருகின்றது. மேலும் இந்த விஜயமானது எமது நாடுகளுக்கும் மக்களின் பரஸ்பர அபிவிருத்திக்கும் வலுவூட்டும் என தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீன ஜனாதிபதியிடம் நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன் அபிவிருத்தியின் புதிய யுகத்துக்காக இலங்கையுடன் இணைந்து பயணிக்க தயாராகவிருப்பதாக சீனா ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அத்துடன் நெருங்கிய நட்பு நாடு என்ற வகையில் சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுக்கூர்ந்த சீன ஜனாதிபதி எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்க தயாராகவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.