மன்னார் படுகொலை:மரணித்தவர்கள் நொச்சிக்குளம்!

by wp_shnn

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர்.

வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சூட்டின் போது மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படடிருந்தனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் படுகாயமடைந்த இரு ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்களான 61 வயதான சவேரியன் அருள் மற்றும் 42 வயதான செல்வக்குமார் யூட் என தெரிய வந்துள்ளது.

படுகாயம் அடைந்த ஆணொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இருவரும், காயமடைந்த ஆண் ஒருவரும் இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற இருந்த வழக்கு விசாரணைகளுக்காக வருகை தந்த போதே, மோட்டார் சைக்கிளில் வந்தவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றதாக தெரிய வருகிறது.

தாக்குதல் சம்பவமானது, 2022ஆம் ஆண்டு உயிலங்குளத்தில் நடைபெற்ற படுகொலைகளுடன் தொடர்புபட்டதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி உயிலங்குளத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி சவாரி தொடர்பான முறுகல் ஒன்றை அடுத்த ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் படுகொலை செய்யப்படடிருந்தனர்.

அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக 2023ஆம் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி மன்னார் அடம்பன் பகுதியில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாகவே இன்றைய தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்